2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பங்காளிச் சண்டையில் பகையாளியுடன் உறவாடும் தோழர் வேல்முருகன்
எதிர்வினை (வேண்டுகோள்)
உங்கள் உழைப்பு இந்த சமூகத்திற்குத் தேவைப்படுகிறது. ஆனால் உங்களின் செயல், பங்காளிச் சண்டையில் பகையாளியுடன் உறவாடுவதாக உள்ளது. எனவே எந்த இயக்கவாத பெரியாரிஸ்டுகளும் இந்த சீட்டு பேர சூதாட்டத்தில் பங்கு பெறுவதுமில்லை, கண்டுகொள்வதுமில்லை. அதே நேரத்தில் உங்கள் அரசியலை இன்றளவும் ஆதரித்தே வந்திருக்கிறோம் என்பதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது.
வரலாற்றுச் சாதனைகள்
2017–2018 காலகட்டத்தில், யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்ற கர்வத்துடன் செயல்பட்ட ஒன்றிய அரசையும், அதன் தலைவரான நரேந்திர மோடியையும் வீரியத்துடன் சவாலுக்கு உட்படுத்தியதோடு மட்டுமல்லாமல், IIT சுவரை உடைத்துக்கொண்டு ஹெலிகாப்டரில் பறந்த வரலாற்று சம்பவங்களை எல்லாம் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
தோழர் வேல்முருகன் - தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் தலைவராக போராட்டங்களை முன்னெடுத்தவர்.
அதுமட்டுமல்ல, மீத்தேன், கூடங்குளம், ராமர் யாத்திரை, காவிரி நடுவர் மன்றம், IPL தமிழ்நாட்டை விட்டே விரட்டியது, சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டுப் போட்டது என்று எண்ணற்ற போராட்டங்களை உங்களின் தலைமையிலான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்புச் செய்தது.
அன்றைய இந்திய ஊடகங்களின் தலைப்புச் செய்தியே நீங்கள்தான். அப்போது, தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக பிரகாசித்தீர்கள். இதன்மூலம் பல பெரியாரிய இயக்கங்கள் உங்களுக்கு பக்கபலமாக நின்றார்கள். நீங்களும் அதுவரை இல்லாத அதிசயமாக திடலில் சிறப்புரையாற்றினீர்கள்.
அதுமட்டுமல்ல, உங்கள் தலைமையில் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய, இடதுசாரி, தமிழ் தேசிய மற்றும் பல்வேறு முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட தோழர்கள் உங்களுடன் கைக்கோர்த்து நின்றார்கள். அதன் காரணமாக அன்று, நீங்கள் அதிமுக மற்றும் பிஜேபிக்கு எதிராக ஏற்படுத்திய மனநிலையை மக்களிடம் விதைத்தீர்கள். அந்த அரசியல் சூழ்நிலையை மூலதனமாகக் கொண்டு, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கு மாற்றாக திமுக அறுவடை செய்து ஆட்சியமைத்தது. அதற்கு பிரதிபலனாக உங்களுக்கு திமுக கூட்டணியில் ஒரு சீட்டும் கிடைத்தது என்பது அரசியல் ஆய்வாளர்கள் அனைவரும் அறிவார்கள்.
திமுக கூட்டணி - 2021 தேர்தலில் பல்வேறு கட்சிகள் இணைந்த கூட்டணி.
மேலும், திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தோழர் வேல்முருகன் அவர்கள் சட்டமன்றத்திற்குள் ஒரு போராளி என்ற அடையாளத்தோடு தான் தொடர்ந்து செயல்பட்டீர்கள். காரணம், தமிழர்கள் வாழ்வுரிமை, மொழி, நிலம், சமூகநீதி போன்ற தளங்களில் உங்களுக்கென்று ஒரு தனித்துவமான இடத்தை வரலாறு உருவாக்கித் தந்தது.
திமுக கூட்டணியிலிருந்து விலகல்
ஆனால், பல்வேறு கசப்பான அனுபவங்களினால் திமுக கூட்டணியில் இருந்து தாங்கள் தற்போது விலகி வந்திருக்கிறீர்கள். காரணம், இதில் அதிசயமோ, ஆச்சரியமோ எதுவும் இல்லை. வெறும் சீட்டு பேரம் மட்டும்தான் என்பதை உலகறியும்.
இதுதான் ஓட்டரசியல், இந்த அரசியல் இப்படித்தான் இருக்கும் என்பது ஒவ்வொரு பெரியாரிஸ்டுகளுக்கும் தெரியும். இந்த வெளியேற்றத்தில் நீதி இருக்கலாம் அல்லது அநீதி இருக்கலாம். ஆனாலும், இந்த ஓட்டரசியலின் தன்மை இப்படியாகப்பட்டதுதான்.
இதைப் புரிந்துகொள்ளாமல் சில திமுக பெரியாரிஸ்டுகள் உங்களை விமர்சித்திருக்கலாம். ஆனால், உண்மையான இயக்கவாத பெரியாரிஸ்டுகள் இதை பெரிதாகவே எடுத்துக்கொள்வது இல்லை, அதேபோல வெளியேற்றத்தை விமர்சிப்பதும் இல்லை.
காரணம், எங்களின் இலக்கு என்பது வேறு. நாங்கள் எங்கள் தலைமையையும், தத்துவத்தையும், இயக்கத்தையும் நம்புகிறோம். ஆனால், மற்ற பெரியாரிஸ்டுகள் ஓட்டரசியலை நம்புகிறவர்கள். திமுக இல்லை என்றால், தமிழ்நாட்டை காக்கா தூக்கிட்டுப் போயிடும் என்று உளவியலாகப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். அதனால், விமர்சிக்கின்றனர்.
ஆனால், தத்துவத்தை நம்பும், தம் சொந்த இயக்கத்தையும், தம் தலைமையை நம்பும் பெரியாரிஸ்டுகள் உங்களை மட்டுமல்ல, பிரேமலதாவைக்கூட விமர்சிப்பதில்லை. இது பங்காளி சண்டை போல, நாளையே மீண்டும் கூட்டணி சேர்ந்துகொள்வார்கள். அதுமட்டுமல்ல, சமூகத்தளத்தில் மற்ற கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து நிற்க வேண்டிய தேவையும் ஒரு இயக்கவாதிக்கு உள்ளது.
எனவே, எந்த இயக்கவாத பெரியாரிஸ்டுகளும் இந்த சீட்டு பேர சூதாட்டத்தில் பங்கு பெறுவதுமில்லை, கண்டுகொள்வதுமில்லை. அதே நேரத்தில் உங்கள் அரசியலை இன்றளவும் ஆதரித்தே வந்திருக்கிறோம் என்பதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது.
பகையாளியுடன் கைகோர்ப்பது ஆபத்தானது
அதுமட்டுமல்ல, தற்போது திமுக கூட்டணியிலிருந்து முரண்பட்டு, தனித்து போட்டியிடும் முடிவை அறிவித்து, மீண்டும் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்புவோம்; தமிழர்களின் வாழ்வுரிமைக்காக தீவிரமான போராட்டங்களை முன்னெடுப்போம் என்று நீங்கள் கூறியபோது, பல இடதுசாரிகள் மனமகிழ்ச்சிக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில், உங்களின் செயல், பங்காளிச் சண்டையில் பகையாளியுடன் உறவாடுவதாக உள்ளது.
கூட்டமைப்பு - பங்காளிச் சண்டையில் பகையாளியுடன் கைகோர்ப்பது வரலாற்றுப் பிழை என்று கட்டுரை எச்சரிக்கிறது.
RSS ன் கைக்கூலியாகவும், பாசிசத்தின் ஊற்றுக்கண்ணாகவும் திகழும் பெங்களூரு குணாவின் அரசியல் வட்டாரத்துடன் தொடர்புடையவர் மட்டுமல்ல, குணாவின் சீடராகவும் திகழும், செந்தில் மள்ளரை உங்களின் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்வது, பெரியாரிய, அம்பேத்கரிய, இடதுசாரி தோழர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எதிராக உள்ளது என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஒருவேளை இந்த அரசியல் முரண்பாடுகளின் பின்னணியில், தாங்கள் செந்தில் மள்ளர் போன்ற சாதியவாத அரசியல் சக்திகளுடன் கைகோர்ப்பது, முற்போக்கு சக்திகளுடன் தங்களுக்கு இருக்கக்கூடிய உறவை முறித்துவிடும் என்பதை தாங்கள் உணர வேண்டும்.
இப்படியான உங்களின் போக்கு என்பது, பங்காளிக்களுக்கு இடையேயான சண்டையில், பகையாளியுடன் கைக்கோர்ப்பது, வரலாற்றுப் பிழையாகத்தான் மாறும். அதுமட்டுமல்ல, உங்களின் இப்படியான கூட்டணி எதிர்காலத்தில் நகைப்புக்குரியதாகவும் கருதப்படும்.
இறுதி வேண்டுகோள்
தொடர்ந்து உங்கள் உழைப்பு இந்த சமூகத்திற்குத் தேவைப்படுகிறது. எனவே, பல்வேறு போராட்டங்களை நீங்கள் முன்னெடுக்கப் போகிறீர்கள். அப்போது பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய தோழர்கள்தான் உங்களுடன் தோளோடு தோள்சேர்ந்து நிற்பார்கள். அதுதான் உங்களின் கடந்தகால வரலாறும்கூட. இன்று, நீங்கள் கூட்டியிருக்கும் இந்த உதிரிகளுக்கு இந்துத்துவாவையும், ஜாதியையும், திமுக வெறுப்பையும் தவிர வேறு எந்த அரசியலும் இல்லாதவர்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் திமுக எதிர்ப்பு ஒன்றே அரசியல், அதற்காக யாருடன் வேண்டுமானாலும் கைக்கோர்ப்பேன் என்கின்ற முடிவிற்கு நீங்கள் வருவீர்களேயானால், இத்தனை ஆண்டுகள் நீங்கள் சம்பாதித்த போராளித் தலைவர் என்கின்ற நற்பெயரை இழப்பதோடு மட்டுமல்லாமல், இதுவரை உங்களை மதிப்போடு பழகிவந்த இடதுசாரித் தோழர்கள் உங்களைவிட்டு விலக வேண்டிய ஆபத்தையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையெல்லாம் மனதில் வைத்து, ஒரு அறிவார்ந்த அரசியலை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்ளுங்கள். முடிவை மக்களிடமே விட்டுவிடுங்கள். அவர்கள் உங்களுக்கான திசையைக் காட்டுவார்கள்.
அதேபோல, மக்களை மேம்படுத்த தேர்தல் மட்டுமே தீர்வு கிடையாது என்பதையும் கவனத்தில் கொண்டு நாம் யாருடன் நிற்கிறோம் என்பதையும், இது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழையாகவும் மாறும் என்பதையெல்லாம் கணக்கிட்டு அடுத்தக்கட்ட நகர்வை திட்டமிடுங்கள் என்று இந்த அறிக்கையின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
நம்பிக்கையுடனும், கவலையோடும்
நெய்வேலி அசோக்
பொதுச் செயலாளர்
தோழர் களம்
0 Comments