elugai

தமிழ்நாடு அரசியலில் : தவெக தலைவர் விஜய் மாற்றமா?, ஏமாற்றமா?

தவெக தலைவர் விஜய் மாற்றமா?, ஏமாற்றமா?

தமிழ்நாடு அரசியலில் : தவெக தலைவர் விஜய் மாற்றமா?, ஏமாற்றமா?

✍️ கட்டுரையாளர் - கை.அறிவழகன்

🔴 வழக்கம் போல ஊடகப் பார்ப்பனீயத்தின் செல்லப்பிள்ளையாக திமுகவை வீழ்த்தும் ஆயுதங்களில் ஒன்றாக இதுவரை தலைப்புச் செய்திகளில் இருந்து வந்த விஜய் இனி அதே பார்ப்பனீய ஊடகங்களால் புறக்கணிக்கப்படுவார், புழுதி வாரித் தூற்றப்படுவார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 — பட்டியல் எண் 14 — தமிழக வெற்றிக் கழகம். "தமிழக வெற்றிக் கழகம்" துவங்கப்பட்ட போதே பெயரில் தமிழைத் தவறாக எழுதிக்கொண்டு வந்தது. அப்போதே அதன் தலைவரும் கட்சியின் ஆலோசனை மையங்களும் எந்த அளவு அறிவார்ந்தவர்கள் என்பதைக் கணிக்க முடியும்.

விஜயின் அரசியல் வருகையை நாம் எதிர்க்கவில்லை, வரவேற்றோம். ஏனெனில் அரசியல் என்பது கூட்டுச் சமூகத்தின் மனசாட்சி. களத்தில் இறங்கிப் பணியாற்றுவதற்கு எவருக்கும் உரிமையும், சுதந்திரமும் உண்டு.

தவெக விக்ரவாண்டி மாநாடு அக்டோபர் 2024 விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்ரவாண்டியில் — 8 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர் என தெரிவிக்கப்பட்டது — அக்டோபர் 27, 2024. (படம்: TVK / The Federal)

🔴 நடிகர்களை நோக்கி இளம் தலைமுறை ஈர்க்கப்படுவது தலைமுறையின் பிழையோ அல்லது குறிப்பிட்ட இனக்குழுக்களின் பிழையோ அல்ல. மாறாக உலகமெங்கும் நடிகர்கள் அல்லது கலைஞர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். வெற்றி பெற்றிருக்கிறார்கள். பெருந்தோல்விகளைத் தழுவி பாதியில் ஓடி இருக்கிறார்கள். தமிழகம் அல்லது தமிழ் சமூகம் இதில் எள்ளளவும் குறைவானதல்ல. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று திரைப்படங்களோடு தொடர்புடைய மாபெரும் ஆளுமைகளை உருவாக்கியவர்கள் நாம் தான்.

அதன் அடிப்படையில் இளம் தலைமுறை விஜய் பக்கமாக சாய்ந்து கிடப்பது அல்லது முன்னதாக ரஜினியின் பின்னால் கூடி நின்று கும்மாளம் அடித்தது எல்லாம் நமது அரசியல் சிந்தனைகளின் தொகுப்புதான். நம்முடைய எச்சம் தான். அதில் தவறொன்றும் இருப்பதாக நான் கருதவில்லை.

நாம் திரைப்பட நாயகர்கள் உருவாக்கிய பிம்பங்களை ஒரு கட்டத்தில் நம்பத் துவங்கினோம். இன்றும் நம்புகிறோம். தனிப்பட்ட வாழ்வில் அவர்கள் செய்யக்கூடிய பிழைகளையும், தவறுகளையும் நியாயப்படுத்தும் அளவுக்கு நாம் திரைக்கவர்ச்சி உள்ளவர்கள். நமது எந்தக் கருவிகளும் இதுகுறித்த முறையான உரையாடல்களையும், கற்றலையும் வழங்கவில்லை. நமது கல்வி முறையில் இருக்கும் நீண்டகாலக் குறைபாடு இது. இந்த அடிப்படைக் குறைகளைக் களைய செயல்திட்டங்களை நாம் இன்னும் வகுக்கவில்லை.

ஆகவே விஜய் பக்கமாக ஓடி கூட்ட நெரிசலில் சிக்கி மாண்டு போன 50க்கும் மேற்பட்ட உயிர்களின் இறப்புக்கு விஜய் மட்டுமே காரணமில்லை. நாம் அனைவரும் அந்தப் பொறுப்புணர்வை உணர்ந்துகொள்ள வேண்டும். வேறு வழியில்லை.

கரூர் தவெக பேரணி நெரிசல் சோகம் செப்டம்பர் 2025 விஜய் கரூரில் தவெக பேரணியில் நடந்த நெரிசல் சோகம் — 41 பேர் உயிரிழந்தனர், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் — செப்டம்பர் 27, 2025. இந்நிகழ்வுக்குப் பின்னர் விஜய் பேரணி பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார். (படம்: PTI)

கரூர் துயர் நிகழ்வுக்குப் பின்னர் விஜய் நடந்துகொண்ட விதம் என்னை சலனப்படுத்தியது. அவர் பொறுப்பற்ற ஒழுங்கீனமான தனிமனிதராக அந்த நேரத்தில் தன்னைத் தானே காட்சிப்படுத்தினார். அது அருவருப்பானதாக இருந்தது. இயல்பாகவே வெற்றி பெற்ற உச்ச நடிகர்களுக்கு இருக்கும் God Complex அவரிடத்தில் அதீதமாக இருந்தது. இன்னும் இருக்கிறது.

அந்த வெறுப்பில் அவரைக் குறித்து இனி நான் எதுவும் எழுதப் போவதில்லை என்றொரு அறிவிப்பை முன்வைத்தேன். இப்போது அதிலிருந்து பின்வாங்கி இருக்கிறேன். ஏனெனில் நம்முடைய இளைஞர்கள் பலர் அந்தக் கட்சியோடு உணர்வுப்பூர்வமாக இணைந்திருக்கிறார்கள். வருகிற சட்டமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளின் ஆளுமையைக் கடந்து முதல் தேர்தலில் 10க்கும் அதிகமான விழுக்காடு வாக்குகளைப் பெறப் போகிற கட்சி என்பதன் அடிப்படையில் நாம் எளிதாகப் புறந்தள்ளி விட்டுப் போக முடியாது.

நான்கு முனைப் போட்டி — வாக்கு விகிதக் கணிப்பு

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு அரசியல் மாற்றங்களைக் கணிசமாக பாதிக்கும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திராவிட இரட்டைக் கட்சிகளின் ஆதிக்கத்தை முழுமையாக அது மாற்றி விடும் என்று குறைந்த பட்ச அரசியல் அறிவுள்ள எவரும் புரிந்துகொள்ள முடியும் அளவுக்கு இல்லை. இந்த முறை நான்கு முனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. ஏறத்தாழ தவெகவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைப்பதற்கான எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, அதிமுக தலைமையிலான பாஜக, பாமக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், சீமான் தலைமையிலான "நாம் தமிழர்" கட்சி என்பதுதான் இந்த முறை களம்.

📊 எனது ஆழ்மனத்தில் வாக்கு விகிதக் கணிப்பு:

🔹 திமுக அணி — 41% முதல் 45% வரை

🔹 அதிமுக அணி — 31% முதல் 34% வரை

🔹 தமிழக வெற்றிக் கழகம் — 10% முதல் 13% வரை

🔹 நாம் தமிழர் கட்சி — 6% முதல் 8% வரை

தவெக மதுரை இரண்டாம் மாநாடு ஆகஸ்ட் 2025 விஜய் கூட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் மாநாடு மதுரையில் — பெரும் கூட்டத்தோடு நடைபெற்றது — ஆகஸ்ட் 21, 2025. (படம்: ANI / The Hindu)

தமிழக வெற்றிக் கழகம் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் மிக வலுவாக இருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்வேன். சென்னை மக்கள் ஏகாந்த மனநிலை கொண்டவர்கள், நாயக வழிபாடு போன்ற விஷயங்களை அவர்களே உருவாக்கி வளர்த்தெடுப்பவர்கள். சென்னை இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்களிடம் குறிப்பிடத்தக்க ஆதரவு பெற்றிருக்கிறது தவெக. முதல்முறையாக நான் வழக்கமாக சந்திக்கிற கிராமப்புற இளம்பெண்கள் இருவர் என்னை இம்முறை விஜய் அண்ணாவுக்கு வாக்களிக்கச் சொல்லிப் பரப்புரை செய்தது என்னை திகைப்பில் ஆழ்த்தியது.

தமிழக வெற்றிக் கழகம் சார்ந்த உள்கருத்துக் கணிப்புகள் கட்சி சராசரியாக 20–30% வரை வாக்குகள் பெறலாம் என்றும் (அதில் ஒன்று 31.7% என்றும் 74 தொகுதிகள் வரை வெல்லலாம் என்றும் கருதுகிறது) கூறுகின்றன. ஆனால் கொஞ்சம் அரசியல் கணக்குகளைப் புரிந்துகொண்டு மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் அதிகபட்சமாக அந்தக் கட்சி 14–15% விழுக்காடு மற்றும் 6 முதல் 12 தொகுதிகளை வெல்லலாம் என்று மட்டுமே எதிர்பார்க்கின்றன.

ஆனால், அப்படி நிகழும் என்று நான் கணிக்கவில்லை. இளம் தலைமுறையைத் தாண்டி தமிழக வாக்காளர்கள் முதிர்ச்சியும், பக்குவமும் கொண்டவர்கள். கண்ணை மூடிக்கொண்டு கலைஞர் ஒருவரைத் தவிர வேறு யாரையும் அவர்கள் வெற்றி பெறச் செய்ததில்லை. திமுக படுதோல்வியை சந்தித்த தேர்தல்களிலும் கூட கலைஞரைத் தமிழக வாக்காளர்கள் தோற்கடிக்கவில்லை. காமராஜரைத் தோற்கடித்திருக்கிறார்கள், ஜெயலலிதாவை தோற்கடித்திருக்கிறார்கள்.

ஆகவே விஜய் நிற்கும் தொகுதியில் கூட அவரைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து சட்டமன்றத்துக்கு நமது மக்கள் அனுப்புவார்கள் என்று நான் இன்னும் நம்பவில்லை. தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இந்த முறை வாக்குச் சிதறலை உருவாக்கும் என்பதில் முரண்பாடில்லை. குறிப்பாக திமுகவின் முதல் தலைமுறை இளைஞர் ஆதரவை ஓரளவு பிரிக்கும், ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்புணர்வைப் பயன்படுத்தி குறிப்பிட்ட குறைந்த அளவிலான வாக்குகளை தவெக உறுதியாகப் பிரிக்கும்.

திராவிட அரசியலை மாற்றுமா தவெக?

நாம் தமிழர், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்தும் முதல் தலைமுறை வாக்குகளை தவெக பிரிக்கும். இப்போதே மேற்கண்ட கட்சிகளில் இருந்து தப்பி ஓடிய பெருங்கூட்டம் ஒன்று இருப்பதை கடந்த 6 மாதங்களில் நானே நேரடியாக சந்தித்திருக்கிறேன். ஆனால், அது முக்கிய எதிரியான அதிமுக பக்கம் சென்று விடாமல் பாதுகாக்கப்படுவதால் ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழலையே எல்லாத் தொகுதிகளிலும் அது உருவாக்கும். தவெக திமுகவின் B அணி என்கிற சிலரது குற்றச்சாட்டுக்கு இந்த வாக்குச் சிதறல் ஆதாரமாக இருக்கலாம்.

திராவிட அரசியலை அவரது நகர்வுகள் பாதிக்குமா? என்றால் இல்லை என்பதே விடை. பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களை ஏந்தியபடிதான் அவர் உள்ளே நுழைந்தார். மேலும் பாரதீய ஜனதா போன்ற அதிகார அரசியலில் இருக்கும் கட்சியின் தேர்தல் வல்லுனராகிய அமீத்ஷா என்கிற ஜண்டாவுக்கே டெல்லியில் சென்று அல்வா கொடுத்துவிட்டார் என்பதை நானே ஆமோதிக்கிறேன்.

தவெக - பாஜக கூட்டணியை மறுத்து, இந்துத்துவ மதவாதத்தை தனது முதன்மை "எதிரி" என்று கூறி, முதல்வர் பதவி, 50% தொகுதிகள் போன்ற வாய்ப்புகளை நிராகரித்துள்ளதாக பரப்பப்படும் செய்திகள் தமிழக வாக்காளர்களிடம் ஒரு முதல் முத்திரையை அந்தக் கட்சிக்கு வழங்கக்கூடும்.

விஜய் மதவாதிகளை எதிர்க்கிறார், அவர்களோடு கூட்டணி என்று கூறுபவர்களை எச்சரிக்கிறார், CBI விசாரணை, அவரது திரைப்பட முடக்கம் போன்ற அழுத்தங்களை எதிர்கொள்கிறார். விஜயின் தந்தை கத்தோலிக்கர், தாய் இந்து என்பதால் கிறிஸ்தவ நிதி மற்றும் மதமாற்றக் குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் அவர் மீது சுமத்தப்படுகிறது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை, உறுதிப்படுத்தப்படவில்லை. இவை எதிர்க்கட்சி அவதூறுகள் மட்டுமே.

விஜய் தவெக தஞ்சாவூர் பேரணி மார்ச் 2026 தேர்தல் பிரசாரம் தவெக தலைவர் விஜய் தஞ்சாவூரில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பில் — "இது சாதாரண தேர்தல் அல்ல, கடலலை போன்ற ஒரு உணர்வு" என்று அவர் கூறினார் — மார்ச் 4, 2026. (படம்: TVK/X / The Federal)

மொத்தத்தில், விஜய் என்கிற திரைப்பட நட்சத்திரத்தால் இயக்கப்படும் இளைஞர் கூட்டத்தின் சவாலாக 2026 சட்டமன்றத் தேர்தலில் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தும். வாக்குச் சிதறலுக்கு வழிவகுத்து திமுக கூட்டணியின் வெற்றியை எளிதாக்கும். திராவிடக் கட்சிகளின் ஆழமான கொள்கை வேர்கள் தவெகவின் நம்பிக்கையை சிதைக்கும்.

முடிவு இறுதிக்கட்டப் பரப்புரை வியூகங்கள், கூட்டணிகள், வாக்காளர் மனநிலை மாற்றம் ஆகியவற்றைப் பொறுத்து முடிவுகள் சில இடங்களில் மாறலாம். எதிர்பாராத, நெருக்கமான போட்டியை பல தொகுதிகளில் எதிர்பார்க்கலாம். திமுக மற்றும் அதிமுக இடையிலான போட்டியைக் கடுமையானதாக மாற்றலாம். ஆனால், இன்றைய சூழலில் விஜய் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைவதே குதிரைக்கொம்பு தான். இருக்கிற ஒரே வாய்ப்பு அதுதான்.

மற்றபடி... ஏனெனில் இறுதியாக அவர் இந்துத்துவப் பிற்போக்கு வாதத்துக்கு எதிரான உறுதியைக் காட்டி இருக்கிறார்.

Post a Comment

0 Comments