elugai

மதில் மேல் பூனையாகத் தமிழ் அரசுக் கட்சி: எரிசக்தி அமைச்சர் மீதான ஊழல் புகாரும் இராஜதந்திர மௌனமும்!

மதில் மேல் பூனையாக தமிழ் அரசுக் கட்சி

மதில் மேல் பூனையாக தமிழ் அரசுக் கட்சி

- கபில்

ஒரு பக்கம் எரிசக்தி நெருக்கடி தீவிரமடைந்து கொண்டிருக்க, மற்றொரு பக்கம் எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நெருக்கடியும் தீவிரமடைந்துள்ளது.

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி 2016 ஆம் ஆண்டு லங்கா உர நிறுவனத்தில் கொள்முதல் முகாமையாளராக பணியாற்றிய போது, இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசாங்கத்திற்கு 8.8 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி அவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கு வரும் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி — கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் பதவியில் நீடிக்கிறார். (படம்: Parliament of Sri Lanka)

குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் கூட, எரிசக்தி அமைச்சராக குமார ஜயகொடி நீடித்து வருகிறார்.

அவரை பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு அவரும் செவிசாய்க்கவில்லை, அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவரை பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதிக்கு பல்வேறு தரப்பினர் கடிதங்களை எழுதினர், அழுத்தங்களை கொடுத்தனர். அவரும் கூட, அமைச்சர் குமார ஜயகொடி மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை.

வழக்கு விசாரணைகளின் முடிவின் அடிப்படையில் பார்த்துக் கொள்ளலாம் என்ற ரீதியிலேயே அரசாங்கம் இருக்கிறது.

நம்பிக்கையில்லா பிரேரணை — தமிழ் அரசுக் கட்சி விலகல்

இந்த நிலையில் அமைச்சர் குமார ஜயகொடி மீது இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளன.

முதலாவது, ஏற்கனவே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு. இரண்டாவது, தரமற்ற நிலக்கரி இறக்குமதியின் மூலம், தனது கடமையை சரியாக நிறைவேற்றத் தவறினார் என்பது.

முதலாவது குற்றச்சாட்டு விடயத்தில் அரசாங்கம் அவர் மீதான விசாரணைகளுக்கு தடைகளை ஏற்படுத்தவில்லை. இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

ஆனால், இரண்டாவது குற்றச்சாட்டு, நேரடியாக அமைச்சர் குமார ஜயகொடி ஊழல் மோசடியில் ஈடுபட்டார் எனக் குற்றம்சாட்டப்படாத போதும், தரமற்ற நிலக்கரி இறக்குமதிக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டியவர் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

நுரைச்சோலை அனல் மின்நிலையம் இலங்கை நுரைச்சோலை (லக்விஜய) அனல் மின்நிலையம் — தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் முழுமையான மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. (படம்: Wikipedia / CEB)

தரமற்ற நிலக்கரி இறக்குமதி மூலம் கிட்டத்தட்ட 8 பில்லியன் ரூபாவுக்கு மேல் இழப்பு அல்லது நட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இழப்பு இது மட்டும்தான் என்று உறுதி செய்ய முடியாது. இதற்கு அப்பால் இது விரிவடைவதற்கான சாத்தியங்களும் உள்ளன.

இப்போது, மின்வெட்டு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிரதான காரணம் நிலக்கரி இறக்குமதி மோசடிதான்.

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால், நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினால், முழுமையான மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியாக உருவாகி வருகிறது.

இந்தச் சூழலில் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. ஏப்ரல் 10ஆம் திகதி இதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில், தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் கையெழுத்திடவில்லை. சாணக்கியன் தலைமையில் இடம் பெற்ற கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுவதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

மூன்று காரணங்கள் — ஆனால் நம்பகத்தன்மை கேள்விக்குறி

இந்த தீர்மானம், நாடாளுமன்றக் குழுவில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இது ஏற்கனவே தமிழ் அரசுக் கட்சியின் தலைமைத்துவத்தினால் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமாகவே தெரிகிறது.

மூன்று காரணங்களை முன்வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஒன்று குமார ஜயகொடிக்கு எதிராக ஏற்கனவே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அதாவது விசாரணைக்கு குறுக்கே அவரோ அரசாங்கமோ இல்லை என்பதால், அவர் பதவி விலக வேண்டியது அவசியம் இல்லை என்பது போன்ற ஒரு கருத்து இதில் தொனிக்கிறது.

ஆனால் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஒருவர், அமைச்சராக பதவியில் நீடிப்பது நியாயமா என்று கேள்வி எழுப்ப தமிழ் அரசுக் கட்சி தவறிவிட்டது.

சாணக்கியன் இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவர் 2026 சாணக்கியன் ரசமாணிக்கம் — தமிழ் அரசுக் கட்சியின் புதிய நாடாளுமன்றக் குழுத் தலைவர். அவரது தலைமையில் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடாது என தீர்மானிக்கப்பட்டது.

இதே தமிழ் அரசுக் கட்சி, தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீதான குற்றச்சாட்டை முன்வைத்து, அதனை பகிரங்கமாக நிரூபிக்காமலேயே, நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது நினைவிருக்கலாம். ஆனால் அமைச்சர் குமார ஜயகொடி விடயத்தில் தமிழ் அரசுக் கட்சி அதிகபட்ச பொறுமையை கடைப்பிடிக்க நினைக்கிறது.

அடுத்து, குமார ஜயகொடி நிலக்கரி இறக்குமதியில் ஊழல் செய்தார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறது. இந்த விடயத்தில் தமிழ் அரசுக் கட்சி எந்த அடிப்படையில் தீர்மானம் எடுக்கிறது என்று தெரியவில்லை.

நிலக்கரி இறக்குமதியில் ஊழல் இடம்பெற்றதா இல்லையா என்பது வேறு விடயம். அவரது நிர்வாகத்திற்கு ஒரு மோசடி நடந்திருக்கிறது. அதற்கு யார் பொறுப்பு என்பதைவிட, அவரின் தலைமைத்துவத்தில் நடந்த தவறு என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதன் விளைவாக அரசாங்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதுபோல நாடு நெருக்கடியில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறது.

மின்சார உற்பத்தி வீழ்ச்சி அடைந்து, நிச்சயமற்ற ஒன்றாக மாறியிருக்கிறது. இதற்கு அமைச்சர் குமார ஜயகொடி பொறுப்புக்கூற வேண்டியவர் என்பதை தமிழ் அரசுக் கட்சி மறந்து விட்டது.

அடுத்து, தற்போதைய சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருவது, நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற ஒரு காரணத்தை தமிழ் அரசுக் கட்சி முன்வைத்திருக்கிறது. கட்சிக்குள்ளேயும் தமிழ் மக்களுக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் முடிவுகளை எடுத்த பல சந்தர்ப்பங்களில், தமிழ் அரசுக் கட்சியிடம் இவ்வாறான தொலைநோக்குப் பார்வை இருந்திருக்கவில்லை. ஆனால் அமைச்சர் குமார ஜயகொடி விடயத்தில் ஏன் இந்த சகிப்புத்தன்மை என்பது புரியாத ஒன்றாக இருக்கிறது.

அரசாங்கத்துடன் நெருங்கிச் செல்கிறதா தமிழ் அரசுக் கட்சி?

அண்மைக்காலத்தில், தமிழ் அரசுக் கட்சி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் நெருங்கி செல்வது போன்ற தோற்றத்தை அவதானிக்க முடிகிறது.

கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களை பாராட்டியிருந்தார். அவர்கள் அரசாங்கத்தை விமர்சித்தாலும், நாடாளுமன்றத்தில் முன்னுதாரணம் மிக்கவர்களாக நடந்து கொள்வதாக அவர் கூறியிருந்தார். இது தமிழ் அரசுக் கட்சி தொடர்பாக அரசாங்கத்திடம் காணப்படுகின்ற ஒரு மென்போக்கை உணர்த்துகிறது.

அரசியலமைப்பு பேரவையில், அரசாங்கம் பரிந்துரை செய்தவர்களை நிராகரிக்கவில்லை, அதற்கு ஆதரவு அளித்தார் என்ற காரணத்தை முன்வைத்தே, சிறிதரனிடமிருந்து நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியைப் பறித்தது தமிழ் அரசுக் கட்சி. அரசாங்கத்துடன் சேர்ந்து அவர் இயங்குகிறார் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி, அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் இன்று தமிழ் அரசுக் கட்சி அதே அரசாங்கத்துடன் நெருங்கி செல்லும் வகையிலேயே செயற்படுகிறது.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணைகள் பலவற்றை கொண்டுவரும் முயற்சிகளை முன்னெடுத்தது. அதில் சில அவசியமற்றவை. குறிப்பாக பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முற்பட்டபோது, அதில் தமிழ் அரசுக் கட்சி கையொப்பமிடாது என தீர்மானிக்கப்பட்டது. அதற்காக கூறப்பட்ட நியாயங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தன.

இலங்கை நாடாளுமன்றம் கட்டிடம் இலங்கை நாடாளுமன்றம் — ஏப்ரல் 10ஆம் திகதி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ஆனால் அமைச்சர் குமார ஜயகொடி விடயத்தில் ஏன் தமிழ் அரசுக் கட்சி அரசாங்கத்துடன் முரண்பாட்டை ஏற்படுத்த விரும்பவில்லை என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தாமல் அதனுடன் ஒத்திசைந்து செல்லும் முடிவொன்றை தமிழ் அரசுக் கட்சி எடுத்து இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அது உண்மையாயின், அதற்கு பின்னால், தூண்டுதலாக இருந்தவர்கள் யார் என்று கேள்வியும் உள்ளது.

அண்மைய நாட்களில், ஜேவிபி மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் பலர் இந்தியாவுக்கு சென்று வந்திருக்கிறார்கள். அதுபோல, தமிழ் அரசுக் கட்சியின் தலைமைத்துவத்தில் உள்ளவர்களும் கூட இந்தியப் பயணங்களை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் பயணங்கள், இத்தகைய தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தியதா?

Post a Comment

0 Comments