ஈரான் போரும் இலங்கை மீதான தாக்கங்களும்
ஈரான் மீது இஸ்ரேல் தொடங்கிய தாக்குதல் பிராந்தியத்தில் பெரும் போராக மாறியிருக்கிறது. இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து ஈரானை தாக்க, பதிலுக்கு ஈரான் இஸ்ரேலை மாத்திரமன்றி, அமெரிக்க தளங்கள் எங்கெங்கு இருக்கின்றனவோ அந்த நாடுகளின் மீது எல்லாம் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தப் போர் உலகம் முழுவதும் தாக்கங்களை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது, உலகப் பொருளாதாரத்தின் மீது அது தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் உலகம் முழுவதும் கோதுமை, தானியங்கள், சமையல் எண்ணெய், எரிசக்தி ஏற்றுமதியில் உக்ரைன் முக்கிய பங்கு வகித்து வந்தது. போரினால் இந்த ஏற்றுமதிகள் தடைப்பட்ட போது, உலகின் பெரும்பாலான நாடுகளில் அதன் தாக்கம் எதிரொலித்தது. அதையடுத்து ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்ததால், பொருளாதார நிலை மேலும் குழப்பமடைந்தது. நான்கு ஆண்டுகளுக்கு பின்னரும் அந்த குழப்பங்களில் இருந்து உலகம் மீள முடியாமல் இருக்கிறது. இன்றைக்கும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய முடியாமல், எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் பல நாடுகள் கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால் யுஏஈ புஜைரா கடற்கரையில் நங்கூரமிட்டு காத்திருக்கும் எண்ணெய் கலங்கள் — மார்ச் 3, 2026. (படம்: Al Jazeera / AFP)
இந்த நிலையில் இருந்து மீள முடியாமல் உள்ள சூழலில் மத்திய கிழக்கில் போர் வெடித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக காணப்பட்ட கொதி நிலை இப்போது போராக வெடித்திருக்கிறது. இப்படியொரு போர் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், இந்தளவுக்கு மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை. இந்தப் போர் பல நாட்களுக்கு அல்லது வாரங்களுக்கு நீடிக்கக் கூடிய சாத்தியங்கள் தற்போது தென்படுகின்றன.
இது இலங்கைக்கு ஒரு முக்கியமான பிரச்சினை. பொருளாதாரம் தொடக்கம், இராஜதந்திரம் வரை, இதன் தாக்கம் எதிரொலிக்கிறது. போர் வெடித்ததும், எரிபொருள் நிலையங்களில் தொடங்கிய வரிசை, இன்னமும் முடிவுக்கு வராமல் நீளுகிறது. பொருளாதார ரீதியாக இதன் தாக்கங்கள் குறைத்து மதிப்பிடக் கூடியவை அல்ல. ஏனென்றால் இது மத்திய கிழக்குடன் மாத்திரம் தொடர்புடைய விவகாரம் அல்ல.
வெளிநாட்டு தொழிலாளர்களும் அந்நிய செலாவணியும்
மத்திய கிழக்கில் சுமார் 15 இலட்சம் இலங்கை தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வரும் அந்நிய செலாவணி சாதாரணமானதல்ல. 2025 ஆம் ஆண்டு 8 பில்லியன் டொலர்களை அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்திருந்தனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு இது ஒரு முக்கியமான பலமாக இருந்து வருகிறது. போர் நெருக்கடியினால் இந்த தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. அவர்களின் வேலை நிச்சயமற்றதாக மாறியுள்ளது. போர் நீளுமேயானால் அவர்களில் கணிசமானோர் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படலாம். அது ஒரு பக்கம் அந்நிய செலாவணி வருவாய் இழப்பை ஏற்படுத்துவதுடன், இன்னொரு பக்கம் உள்நாட்டில் வேலையின்மையையும் தூண்டிவிடும்.
அதேவேளை அதிகரித்து வரும் எரிபொருள் விலை புதியதோர் பிரச்சினையாக மாறும். ஏற்கனவே, பொருளாதார நெருக்கடியினால் இலங்கை அதிகளவு விலைக்கு எரிபொருளை விற்க வேண்டிய நிலையில் இருக்கிறது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்து வருவது இன்னும் தாக்கங்களை ஏற்படுத்தும். ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் மாற்றுவழியில் எரிபொருளைப் பெறுவதற்கு நைஜீரியா அல்லது அமெரிக்காவை அரசாங்கம் அணுகுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இது மேலதிக செலவுகளையும், விலை அதிகரிப்பையும் ஏற்படுத்தும். உள்நாட்டில் அதன் தாக்கம் எல்லா மட்டங்களிலும் உணரப்படும். தனியே எரிபொருள் விலை உயர்வுடன் அது நிற்காது, அதற்கு அப்பால் மின்சாரம் மற்றும் போக்குவரத்து, உற்பத்தித்துறைகள் என அனைத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க — ஈரான் போரினால் இலங்கைக்கு ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் 7 முக்கிய விடயங்களை வெளிப்படுத்தினார் — மார்ச் 11, 2026. (படம்: Newswire.lk)
தேயிலையும் சுற்றுலாவும்
இதன் தாக்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழும் கனவில் இருக்கும் இலங்கைக்கு பேரிடியாகவே அமையும். இலங்கையின் தேயிலை உற்பத்தித்துறைக்கும் இது ஒரு மோசமான பின்னடைவாக இருக்கப் போகிறது. ஏனென்றால் இலங்கையின் கணிசமான அளவு தேயிலை ஏற்றுமதி ஈரானுக்கு மேற்கொள்ளப்படுகிறது. ஏனைய மத்திய கிழக்கு நாடுகளும் கணிசமான அளவு தேயிலையை கொள்வனவு செய்கின்றன. தேயிலை ஏற்றுமதி நிறுத்தப்பட்டால் அல்லது அதில் பாதிப்பு ஏற்படுமேயானால், இலங்கைக்கு வருமான இழப்பை மாத்திரம் ஏற்படுத்தாது. அதற்கு அப்பால் உள்நாட்டு தேயிலை உற்பத்தியையும் அதனை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழில் துறையினரையும் பாதிக்கும். இந்த பாதிப்பை இலங்கை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இவற்றிற்கு அப்பால் இலங்கைக்கு இந்தப் போர் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போர் தொடங்கிய மூன்று நாட்களில் மத்திய கிழக்கு ஊடாகப் பயணிக்கும் 208 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இது சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு இலங்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கூடிய அளவு சுற்றுலா பயணிகளை ஈர்த்தது. ஆனாலும், எதிர்பார்க்கப்பட்ட அளவு அந்நிய செலாவணியை ஈட்ட முடியவில்லை. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் சுற்றுலா பயணிகளின் ஊடாக கிடைக்கும் வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியாமல் இருந்தது.
இதனால் இந்த ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்த்து 5 பில்லியன் டொலர்களை சுற்றுலாத் துறை மூலம் ஈர்ப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களும் அரசாங்கத்திற்கு சாதகமாகவே நிலைமை சென்று கொண்டிருந்தது. இரண்டு மாதங்களிலும் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்திருந்தார்கள் — அது அடுத்த 10 மாதங்களில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்ற திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு நடத்தக்கூடிய வாய்ப்பையும் உருவாக்கியிருந்தது. ஆனால், பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய போர் இலங்கையின் தலையில் இடி விழுந்தது போல அமைந்து விட்டது.
ஈரான் போர் தாக்கத்தால் Ceylon Petroleum Corporation மார்ச் 9 நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்தது — Octane 92 லிட்டருக்கு ரூ.317, டீசல் ரூ.303. (படம்: Newswire.lk)
இலங்கையில் இருந்து திரும்ப வேண்டிய 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் திரும்ப வழியின்றி சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு டுபாயில் சிக்கிக்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு, விடுதிகளில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு, கட்டணம் அறவிடக் கூடாதென, டுபாய் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் இலங்கையினால் அவ்வாறு செய்ய முடியாது. கட்டணமின்றி 14 நாட்கள் வீசா நீடிப்பை மட்டும் வழங்கியிருக்கிறது. இந்த போர் இலங்கையின் சுற்றுலா துறையை பெரிதும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இலங்கையை நோக்கி வருகின்ற சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையும் சாத்தியங்கள் உள்ளன.
போரின் பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள் என்பன சுற்றுலாத் துறையை நலிவடைய செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேவேளை, மத்திய கிழக்கின் டுபாய் போன்ற நாடுகளில் சுற்றுலா செல்லுகின்ற பயணிகள் இலங்கை போன்ற நாடுகளை நோக்கி திரும்புவதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் ஒட்டுமொத்த போர்ச்சூழல் இலங்கைக்கு சாதகமானதாக இல்லை. இது எல்லா விடயங்களிலும் இலங்கைக்கு பொருளாதார ரீதியான பாதிப்புகளையே ஏற்படுத்தக் கூடியது.
இலங்கையின் அரசியல் விளைவுகள்
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர வேண்டிய நிலையில் இருக்கின்ற போது, ஏற்பட்டிருக்கின்ற இந்த சூழல், இன்னும் நெருக்கடியை அதிகரிக்கும். சாதாரண சூழலில் இலங்கையினால் மீண்டெழுவது கடினம் அல்ல, ஆனால் இவ்வாறான சூழலில் இதனை எதிர்கொள்வது சிக்கலானது. இத்தகைய நிலையில் மத்திய கிழக்கில் போர் நிலைமைகள் மோசமடைந்து அங்குள்ள 15 இலட்சம் இலங்கை தொழிலாளர்களை திரும்பி அழைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமேயானால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அவ்வளவு பேரையும் நாட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பது கூட இலங்கையினால் இயலாத காரியமாகவே இருக்கும்.
ஈரான் போர் தொடங்கியதில் இருந்து 85 நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது — உலகளாவிய பொருளாதார தாக்கம் தொடர்கிறது — மார்ச் 11, 2026. (படம்: Newswire.lk)
இவ்வாறான நிலை வராமல் இருந்தால் இலங்கை தப்பித்துக் கொள்ளும், இல்லையேல் இலங்கை இந்தப் போரின் விளைவாக பெரும் பின்னடைவுகளை எதிர்கொள்வதுடன், எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும். கோட்டாபய ராஜபக்ஷ கூட சர்வதேச போர் சூழல்களினால் தான் ஆட்சியை இழக்க நேரிட்டது. கொரோனா தொற்றும் அதனை அடுத்து ஏற்பட்ட உக்ரைன் போரும் எரிபொருள் நெருக்கடியும் பொருளாதார ரீதியாக ஏற்படுத்திய தாக்கங்களும் தான், 69 இலட்சம் மக்களின் ஆணையுடன், ஆட்சிக்கு வந்த கோட்டாவையே வீட்டுக்கு அனுப்பியது. அதேபோன்ற நிலையொன்றை இப்போதைய போர்ச்சூழல் ஏற்படுத்தாது என உறுதியாக கூற முடியாது.
0 Comments