elugai

புதிய போர்வையில் பழைய அடக்குமுறை: PTA-வுக்கு மாற்றாக வரும் சட்டமும் அரசாங்கத்தின் சூழ்ச்சியும்

தளர்த்தப்படுகிறதா கொள்கை?

தளர்த்தப்படுகிறதா கொள்கை?

கட்டுரையாளர் — சத்ரியன்
Policy and Governance

பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அதற்கு மாற்றாக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாடு, பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ள சூழலில், ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர அளித்துள்ள விளக்கம் வினோதமானது.

முரண்பாடான நிலைப்பாடு

கொழும்பில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான தேசிய மக்கள் சக்தியின் கொள்கை தொடர்பாகவும், அது ஆட்சிக்கு வந்த பின்னர் தற்போது கொண்டுள்ள கொள்கை தொடர்பாகவும், கேள்வி எழுப்பப்பட்டதற்கே, நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர அந்த விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

"நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பது எங்கள் கொள்கை, அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் நாட்டின் தேசிய பாதுகாப்பு சார்ந்த பங்காளர்களுக்கு, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒரு சட்டம் அவசியம். அதனாலேயே அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது."

எதிர்க்கட்சியாக இருக்கும்போது பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த தேசிய மக்கள் சக்தி, இப்போதும், அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறுகிறது. ஆனால், இப்போது ஆளும் கட்சியாக வந்து விட்டதால், எதிர்க்கட்சியாக சிந்திக்க முடியவில்லை, அரசாங்கத்தின் நிலையில் இருந்து சிந்திக்கிறது.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கொடூரம் மாத்திரம் அதற்குத் தெரிந்தது. இப்போது அதன் கண்களுக்கு, அரசாங்கத்திற்கு உள்ள - அதன் கருவிகளாக உள்ள கட்டமைப்புகளுக்கு உள்ள பிரச்சினைகளே முக்கியமாகத் தெரிகிறது. அவற்றை புறக்கணித்து அல்லது புறம் தள்ளி விட்டு, தன்னால் இயங்க முடியாது என்று உணர்கிறது. அதுதான் இந்த பிரச்சினைக்கு மூல காரணம்.

கொள்கை மாற்றம்

Justice and Law

அப்படியானால், தேசிய மக்கள் சக்தியின் கொள்கை இப்போதும் அப்படியே இருப்பதாக கூறுவது பொய். ஏனென்றால், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை கொண்டிருந்தால், அதில் எந்த மாற்றமுமில்லை என்றால், அதைப் போன்ற ஒரு சட்டத்தை கொண்டு வருவதை ஆதரிக்க முடியாது. ஆனால், அது மாற்றான ஒரு சட்டத்தை ஆதரிக்கிறது – கொண்டு வர முனைகிறது. அப்படி என்றால் எப்படி அது முன்னைய கொள்கையை பின்பற்றுவதாக கருத முடியும்?

தேசிய மக்கள் சக்தி தனது கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு உபாயத்தை கையாளுகிறது. அது பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக இன்னொன்றை கொண்டு வருவதே அந்த உபாயம். பல சமயங்களில் ஒரு பிரச்சினையில் தீவிரத்தை குறைப்பதற்கு, அதைவிட இன்னொரு புதிய பிரச்சினையை அல்லது பெரிய பிரச்சினையை உருவாக்கி விடுவது அல்லது அதன் மீது கவனத்தை குவியச் செய்வது உலகில் பொதுவாக கையாளப்படும் ஒரு தந்திரம்.

தேசிய மக்கள் சக்தி பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான கொள்கையை உறுதியாக கடைப்பிடித்தால், அதனை நீக்குவதற்கு மாத்திரம் கவனம் செலுத்தியிருக்கும். மாறாக அது நீக்கப்படுவதையிட்டுக் கவலைப்படக் கூடிய தரப்புகளின் மீது கவனம் செலுத்தியிருக்காது. இப்பொழுது அது அவர்களின் கரிசனைகளுக்கே முன்னுரிமை கொடுக்கிறது. பாதுகாப்பு தரப்புகளின் கரிசனைகளை மாத்திரமே அது கவனத்தில் கொள்கிறது.

புதிய சட்டத்தின் அபாயம்

அதனால், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக காட்டிக் கொண்டு, இன்னொன்றை அறிமுகப்படுத்த முற்படுகிறது. இந்த இடத்தில், தேசிய மக்கள் சக்தி தனது கொள்கையை எந்த வகையிலும் நிறைவேற்றுவதாக கருத முடியாது. ஏனென்றால் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டாலும், அதன் குண இயல்புகளை கொண்ட இன்னொரு சட்டத்தை அது கொண்டு வரப் போகிறது.

அது பயங்கரவாத தடைச் சட்டத்தின் இருண்ட காலத்தை பதிலீடு செய்வதாக இருக்கப் போகிறது. இருண்ட காலத்துக்கு பதிலாக, ஒரு புதிய யுகத்தை உருவாக்குவது தவறில்லை. ஆனால், அதே இருண்டயுகத்தின் அடக்குமுறைகளுக்கு வழிவகுத்த அதிகாரங்கள், புதிய சட்டத்தின் ஊடாக கொண்டு வரப்படுவது எந்த வகையிலும் அதன் கொள்கைக்கு ஏற்புடையதல்ல.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பாக எடுக்கின்ற நடவடிக்கைகள், தொடர்ச்சியாக நாட்டு மக்கள் கடுமையான அரச பயங்கரவாதத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பதையே உறுதி செய்யப் போகிறது.

சூழ்ச்சியா சந்தேகம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நிலையாக பேணுவதற்கு, இவ்வாறான ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. அதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தை அகற்ற விரும்பாத அரசாங்கம், கடுமையான விதிகளுடன் கூடிய ஒரு சட்ட வரைவை கொண்டு வருவதன் மூலமாக, பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ச்சியாக நடைமுறையில் வைத்திருக்க சூழ்ச்சி செய்கிறதா என்ற சந்தேகம் எழுவதாக சட்டத்தரணி சுமந்திரன் கூறியிருந்தார்.

அதாவது கடுமையான சட்ட ஏற்பாடுகளுடன் ஒரு சட்ட வரைவை முன் வைக்கும் போது, அதற்கு எதிர்ப்புகள் எழும். அதனை நிறைவேற்ற முடியாமல் போகும். அதனைக் காரணம் காட்டி பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்து நீடித்து நீடிக்கச் செய்ய முடியும் என்று அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

கடந்த காலத்தில் பயங்கரவாத தடை சட்டத்துக்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட சட்ட வரைவுகள் அல்லது முன்மொழிவுகள் அவ்வாறானவையே. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரைவும் பயங்கரவாதம் தொடர்பான தெளிவற்ற வரைவிலக்கணத்தையே கொண்டிருக்கிறது.

சர்வதேச விமர்சனங்கள்

International Relations and Human Rights

இது அடிப்படை சுதந்திரங்களை நசுக்குவதற்கு காரணமாக அமையும் என்றும், இது நடைமுறைக்கு வந்தால் ஜனநாயக உரிமைகள் பறிபோகும் என்றும் முன்னாள் அமைச்சரும் சட்டத்துறை பேராசிரியருமான ஜி.எல்.பிரிஸ் எச்சரித்திருக்கிறார். ஐ.நாவின் அறிக்கையாளர்கள், மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது சர்வதேச சட்டங்களுக்கு அமைவானது அல்ல என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையில், அரசாங்கம் சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ற வகையில் - அதனுடன் இணங்கிப் போகக்கூடிய ஒரு சட்டத்தை தயாரிக்க முடியாமல் போனது என்ற கேள்வி எழுகிறது. இதனை ஒரு வரைவாகத்தான் முன்வைத்திருக்கிறோம், மக்களின் கருத்தை கேட்டு திருத்தங்களை செய்யலாம் என அரசாங்கம் கூறுகிறது.

இது தற்போது எழுந்திருக்கின்ற எதிர்ப்புகளையும் இதற்கு எதிராக கூறப்படும் விமர்சனங்களையும் தணிப்பதற்காக வெளியிடப்படும் கருத்து. கலந்துரையாடல் காலம் முடிந்த பின்னர் இந்தக் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்ற தெளிவு இல்லை. அடுத்து சர்ச்சைக்குரிய விடயங்கள் எந்தளவு தூரம் மாற்றப்படும் என்ற கேள்வியும் இருக்கிறது.

மக்கள் ஆணை vs பாதுகாப்பு பங்காளர்கள்

இவ்வாறான நிலையில், இந்த சட்ட வரைவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடாமல் இருப்பது அல்லது அதனை தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்காமல் இருப்பது - பாரதூரமான ஒரு சட்டத்திற்கு வழிவகுத்ததாகவே அமையும். தேசிய மக்கள் சக்தியிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதால், அது பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்யும் வகையில் எத்தகைய ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்கும் தயாராக இருக்கும்.

அண்மையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கு, தெற்கு இனவாதிகள் தொடர்பாக கருத்தொன்றை வெளிப்படுத்தியிருந்தார். புதிய சட்டங்களை கொண்டு வந்தாவது, இனவாத செயற்பாடுகளை நிறுத்துவோம் என அவர் கூறியிருந்தார். இது அரசாங்கம் எத்தகைய சட்டங்களை கொண்டு வந்தும், மக்களின் கருத்துக்களை அடக்குவதற்கு தயாராக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ஆனாலும் தற்போதைக்கு இதற்கு எதிரான முயற்சிகளை அடக்கப் பார்க்கிறது.

தேசிய மக்கள் சக்தி இன்றைக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்கும் நிலைப்பாட்டில் இருந்தால், அந்தக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதாக இருந்தால், அது தனது கொள்கையில் மாத்திரம் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, பாதுகாப்பு சார் பங்காளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றில்லை.

அது மக்களிடம் எதைக் கேட்டு ஆணை பெற்றதோ அந்த ஆணைக்கமையவே அது செயல்பட வேண்டும். மக்களின் ஆணைக்கு முரணாக பாதுகாப்பு சார் பங்காளர்கள் கருத்துக்கள் அல்லது நிலைப்பாடுகளை வைத்துக் கொண்டு, அரசாங்கம் அதன் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப செயல்பட முடியாது. அப்படியானால் பாதுகாப்பு சார் மக்கள் ஆணை ஒன்றை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

முடிவுரை

தேர்தலில் மக்களிடம் ஆணையைப் பெறுவதும், வெற்றி பெற்ற பின்னர் அந்த ஆணைக்கு மாறாக செயல்படுவதும், இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதிதல்ல. ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுவும் அதனையே செய்தன. தேசிய மக்கள் சக்தியும் இன்று அதனைத் தான் செய்கிறது.

Post a Comment

0 Comments