தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
அண்மையில் அகுரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும் பட்டப்பகலில் பொது இடம் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவத்துக்கு பின்னால் பாதாள உலகக் குழுவே உள்ளதாக பொலிஸ் தரப்பு கூறுகிறது. ஆனால், இந்தச் சம்பவத்தின் பின்னணி மற்றும் காரணம் என்பன பற்றிய தெளிவான தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் சட்டத்தரணிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் ஒரு நாள் தமது பணிகள் அனைத்தையும் நிறுத்தி வீதியில் நின்று போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அதுமாத்திரமன்றி, இந்தக் கொலைக்கான துப்பாக்கிகளை வழங்கியவர்கள் எனக் கூறப்பட்டு கைது செய்யப்பட்ட இரண்டு சகோதரர்களின் சார்பில் நீதிமன்றத்தில் சட்டத்தரணி எவரும் முன்னிலையாகவும் இல்லை.
துப்பாக்கிச் சூடுகள் அதிகரிப்பு
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் இத்தகைய சம்பவங்களை, அரசாங்கம் பாதாள உலக குழுக்களுக்கு இடையிலான மோதலாக அடையாளப்படுத்தி வருகிறது.
இதற்கு முன்னர் நடந்த துப்பாக்கிச் சூடுகளில் கொல்லப்பட்டவர்கள் சாதாரணமானவர்களாக இருந்ததால், வெளியுலகில் அறியப்படாதவர்களாக அல்லது துறை சார் நிபுணர்களாக இல்லாதிருந்ததால், பாதாள உலக குழுக்களுக்கு இடையிலான மோதல் என அடையாளப்படுத்தி அலட்சியம் செய்வது வசதியாக இருந்தது.
ஆனால் சட்டத்தரணியும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அதனை பாதாள உலக குழுக்களுக்கு இடையிலான மோதல் என, அலட்சியப்படுத்த முடியாத நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், கொல்லப்பட்டவர் ஒரு சட்டத்தரணி. அவருக்காக அவரது துறையினரின் பாதுகாப்பிற்காக சட்டத்தரணிகள் குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
சட்டத்தரணிகளின் எதிர்ப்பு
கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் கத்தி எடுத்தவருக்கு ஆதரவாக வழக்குப் பேசமுனைப்பவர்களின் கதியும் அவ்வாறே ஆகும் என்பது போல இந்தக் கொலைகள் அமைந்திருக்கின்றன.
இது சட்டத் துறையினர் மத்தியில், ஆபத்தான நிலை ஒன்று தோன்றி வருவதை முன்னெச்சரிக்கை செய்திருக்கிறது. அதனால் தான் அவர்கள் மிகப்பெரியளவிலான ஒரு எதிர்ப்பை காட்டியிருக்கிறார்கள்.
இந்த எதிர்ப்பு இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்த்தால் அது முட்டாள்தனம். ஏனென்றால் பாதாள உலகம் என்பது இவ்வாறான எதிர்ப்புகளுக்கு பணிந்து போகும் ஒன்றல்ல. அது எதிரிகளை வஞ்சம் தீர்க்கின்ற இலக்குடன் செயல்படுகின்ற ஒன்று.
எதிர்ப்புகளை கண்டு இது அஞ்சாது. எதிர்ப்புக்களை இன்னும் தீவிரமாக அடக்கவே முயற்சிக்கும். அப்பொழுதுதான் மக்களுக்கு தங்கள் மீது பயம் இருக்கும் என்ற எண்ணம் அவர்களிடம் எப்போதும் இருக்கும். அதனால், சட்டத்தரணிகளின் எதிர்ப்பை கண்டு பாதாள உலகம் மிரளும் என எதிர்பார்க்க முடியாது.
அரசாங்கத்தின் மீதான அழுத்தம்
அப்படியானால் சட்டத்தரணிகளின் எதிர்ப்பு யாருக்கு அழுத்தத்தை கொடுக்கிறது? அது முழுக்க முழுதாக அரசாங்கத்தின் மீது கொடுக்கப்படுகின்ற அழுத்தமாகும். அரசாங்கம் இந்த படுகொலைகளினால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது.
படுகொலைகளை அடுத்து, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியது. ஆனால் அமைச்சர் ஆனந்த விஜேபால, இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறி, அதனை நிராகரித்து விட்டார்.
சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக, தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். அதனையும், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்திருக்கிறார். தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
உயர் பாதுகாப்பு வலயம்
உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுகளை காரணம் காட்டியே, தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டிருந்தன. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள பகுதி மாத்திரமல்ல, நாட்டின் பாதுகாப்பு தலைமையகமும் கூட அகுரேகொடவில் தான் அமைந்திருக்கிறது.
பாதுகாப்பு தலைமையகத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவில் தான் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. அதனை வைத்து உயர் பாதுகாப்பு வலயத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
ஆனால் அப்படி எந்த உயர் பாதுகாப்பு வலயமும் பிரகடனம் செய்யப்படவில்லை என்றும் இவ்வாறான தனித்த சம்பவங்களால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லை என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியிருக்கிறார்.
ஏனென்றால், அங்கு இயல்பாகவே பாதுகாப்பு அதிகமாக இருக்கும். அது உயர் பாதுகாப்பு வலயமாக இல்லாவிட்டாலும் அவ்வாறாக பிரகடனம் செய்யப்படாவிட்டாலும் - தமது பாதுகாப்பு தலைமையகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு கட்டமைப்பை, படைத்துறை கொண்டிருக்கும்.
புலனாய்வு பிரிவுகள் மற்றும் ஏனைய சிறப்பு பிரிவுகளின் மூலமாக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும். அவ்வாறான இடத்தில் படுகொலைகள் இடம்பெற்றிருப்பது, பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் தான்.
ஆனால் அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது. அப்படி ஏற்றுக் கொண்டால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருக்கிறது அல்லது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்.
தனியான சம்பவங்கள்
தெற்கில் இந்தளவு துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றாலும், அவற்றை தனியான சம்பவங்களாகவே (Isolated incidents) என்றே அரசாங்கம் அடையாளப்படுத்துகிறது. ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்புக்கும் உள்ள அச்சுறுத்தலாக அவற்றைக் காட்டவில்லை.
கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கணிசமான துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்ற போதும் அவை தனித்தனியான குற்ற செயல்களாக எடுத்துக் கொள்ளப்பட்டனவே தவிர, தேசிய பாதுகாப்பு என்ற விடயத்திற்குள் உள்ளடக்கப்படவில்லை. இது ஆச்சரியமானது.
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் இதே நிலைப்பாட்டைத் தான் பிரதிபலித்திருக்கிறார். முழு இராணுவத்தையும் கொழும்பில் கொண்டு வந்து நிறுத்தினாலும் இவ்வாறான சம்பவங்களை முழுமையாக தடுக்க முடியாது என்று அவர் கூறியிருக்கிறார்.
இனரீதியான பாகுபாடு
ஆனால், இதே சம்பவங்கள் வடக்கிலோ அல்லது கிழக்கிலோ இடம்பெற்றிருந்தால் இப்படி தனித்தனியான சம்பவங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்குமா? என்ற கேள்வி உள்ளது.
எந்தளவு பாரதூரமான குற்றச் செயலாக இருந்தாலும், அது இடம்பெறும் இடத்தை பொறுத்தே, தேசிய பாதுகாப்புடன் தொடர்புபடுத்தப்படுகிறது. வடக்கிலும் கிழக்கிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் நிச்சயமாக அது தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக கருதப்படும், தெற்கில் கூக்குரல்கள் எழுப்பப்படும்.
ஆனால் தெற்கில் பாதுகாப்பு கேந்திர மையங்களுக்கு அருகே இடம்பெற்றிருந்த போதும், அது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு கொலை என ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை.
அதனை காரணம் காட்டி, ஏராளமான நிலங்களை விடுவிக்க மறுத்து வருகிறது அரசாங்கம். ஆனால் இவ்வாறான ஒரு சம்பவம் கூட, வடக்கு கிழக்கில் இடம்பெற்றதில்லை. அப்படி இருந்தும் அந்த நிலங்களை விடுவிப்பதற்கு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற ஒரு காரணம் கூறப்படுகிறது.
முன்னைய ஆட்சியில் மாத்திரமல்ல, தற்போதைய அரசாங்கத்திலும் அவ்வாறான காரணமே சொல்லப்படுகிறது. இது தேசிய பாதுகாப்பின் அடிப்படை அல்ல.
முடிவுரை
இலங்கையில், தேசிய பாதுகாப்பு என்பது இனரீதியாக தொடர்புடைய விடயமாகவே பார்க்கப்படுகிறது. தற்போது இடம்பெறும் துப்பாக்கிச் சூடுகள் சிங்கள மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இடம் பெறுவதால் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை.
மாறாக இதுவே தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் இடம்பெற்றால், அது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கப்படும்.
0 Comments