elugai

தவறாகும் முன்னுதாரணம்

தவறாகும் முன்னுதாரணம் - மாகாண சபை தேர்தல்கள்

தவறாகும் முன்னுதாரணம்

கட்டுரையாளர்: என்.கண்ணன்

மாகாண சபை தேர்தல் இந்த ஆண்டு நடப்பதற்கு வாய்ப்பில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான, நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருக்கிறார். மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்தபோது, அவர் இரண்டு விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

Election and Democracy Symbolism

கூடிய விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது என்பது ஒன்று. அதாவது மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் விரும்புகிறது, அதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்கிறது என்பதே அவரது முதலாவது கருத்தின் சாரம். ஆனால் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாது, இந்த ஆண்டில் அதற்கான வாய்ப்பு இல்லை என்பது அவர் கூறியுள்ள இரண்டாவது விடயம்.

இவையிரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை. பேரிடர் மீளமைப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், மாகாண சபை தேர்தல்களை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருக்கிறார். ஒரே வரியில் சொல்வதானால், மாகாண சபை தேர்தல் “வரும் ….ஆனால் வராது” இதுதான் உண்மை நிலை.

அரசியலில் சில முடிவுகள் தவறான வழிகாட்டுதலாக அமைந்து விடும். அது எதிர்காலத்தில், சட்டத்துக்கு முரணானதாக இருந்தாலும், சில முன்னுதாரணங்களினால், அது சட்டபூர்வமானதாக மாறிவிடும். மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பது சட்ட ரீதியான தவறு. உரிய நேரத்தில் தேர்தல்கள் நடத்தியாக வேண்டும். ஆனால் அதற்குத் தேவையான சூழல் இல்லை. அதனை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், எம்.ஏ.சுமந்திரன் கொண்டு வந்த ஒரு சட்டத் திருத்தம் மாகாண சபை தேர்தல்களை நெருக்கடிக்குள் சிக்க வைத்திருக்கிறது. இப்போது சுமந்திரனுக்கே மாகாண சபை தேர்தல்கள் தேவைப்படுகின்ற போது, அவர் கொடுத்த ஆயுதத்தை வைத்தே அரசாங்கம் அதனைத் தடுத்து வருகிறது. கடைசியாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. கடைசியாக 2014ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது.

அதற்குப் பிறகு, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குச் சட்டரீதியாக உள்ள இழுபறிகளைக் காரணம் காட்டி, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து விட்டனர். அவர்கள் எவ்வாறு தேர்தலை நடத்தாமல் காலத்தை இழுத்தடித்தார்களோ, அதையே சாட்டாக வைத்துக் கொண்டு அநுரகுமார திசாநாயக்கவும், மாகாண சபை தேர்தலை இழுத்தடித்து வருகிறார்.

Political Law and Justice Concept

இதேநிலை எதிர்காலத்தில் ஏனைய தேர்தல்களுக்கு வரலாம். தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சித் தேர்தலை அறிவித்த பின்னர், அதனை நடத்த முடியாமல் செய்தவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அந்த முன்னுதாரணம் மோசமானதும் ஆபத்தானதுமாகும். எதிர்காலத்தில் இதுபோல சில தேர்தல்களை நடத்தாமல் தடுப்பதற்கு, தவிர்ப்பதற்குத் தற்போதைய அரசாங்கம் கூட முயற்சிக்கலாம். அதனிடம் நாடாளுமன்றத்தில் உள்ள பலத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

தவறான முடிவுகள், தவறான முன்னுதாரணங்கள் தான், எதிர்காலத்தில் பல தவறுகளுக்குக் காரணமாக அமையும், அவை தவறல்ல என்று காட்டப்படுவதற்கும் வழிவகுக்கும். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், மாகாண சபை தேர்தல்களைத் தற்போது நடத்துகின்ற எண்ணம் அதற்கு இல்லை என்பதை, ஓரளவுக்குப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இல்லாவிட்டால், சுலபமாகத் தேர்தல்களை நடத்தியிருக்க முடியும். பதவிக்கு வந்த ஓராண்டு காலத்துக்குள் அதனை நடத்தியிருந்தால், பேரிடரைக் காரணம் காட்டிப் பிற்போட வேண்டிய தேவை வந்திருக்காது.

பேரிடரைக் காரணம் காட்டி அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவது எதிர்காலத்தில் இன்னும் பல தேர்தல்களைப் பிற்போடுகின்ற நிலைக்கு வழிவகுக்கக் கூடும். ஏனென்றால் பேரிடர்கள் இப்போது உலகம் முழுவதும் வழக்கமானதாகி விட்டது. அதனைக் காரணம் காட்டித் தேர்தல்களைப் பிற்போடுகின்ற வழக்கம் எதுவும் உருவாகவில்லை. ஆனால் இலங்கையில் அத்தகைய ஒரு வழக்கத்தைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கப் பார்க்கிறது.

இலங்கை பல விடயங்களில் மோசமான முன்னுதாரணங்களைக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் தொற்றுப் பேரிடர் ஏற்பட்ட போது கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டன. உலகம் முழுவதும் அதனை மிகக் குறுகிய காலத்துக்குள் தாண்டி விட்டது. ஆனால் இலங்கை மட்டும், வழமை நிலைக்குத் திரும்புவதற்கு ஆறு ஆண்டுகளாகியிருக்கிறது. இந்த ஆண்டில் தான், அது வழக்கமான கல்வி நடவடிக்கைகளுக்குத் திரும்பப் போகிறது. அந்தளவுக்குத் தீர்க்கதரிசனமற்ற அரசியல் தலைமைகள் இலங்கையில் காணப்படுகின்றன.

பேரிடர்களைக் காரணம் காட்டித் தேர்தல்களைப் போடுவது என்பது, ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமல்ல. இப்போது, மாகாண சபை தேர்தல்களுக்கு முன்வைக்கப்படும் இந்த நியாயம், எதிர்காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கோ, ஜனாதிபதி தேர்தல்களுக்கோ கூட முன்வைக்கப்படலாம். சட்டத்தில் இதற்கெல்லாம் இடமில்லை என்று மட்டும் கூற முடியாது. அதற்கான இடத்தையும் உருவாக்கும் வழியும், பலமும் தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளதை யாரும் மறந்து விடக் கூடாது.

ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை ஒதுக்கிக் கொடுக்காத வரை, அவருக்குத் தேர்தலைத் தடுத்து நிறுத்துகின்ற அதிகாரம் இல்லை என்று தான் பலரும் நம்பிக் கொண்டிருந்தனர். இப்படியும் தேர்தலை நிறுத்தலாம் என குறுக்கு வழியில் செயற்பட்டு ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கியவர் ரணில். அதுபோல ஜனாதிபதி தேர்தலையோ நாடாளுமன்றத் தேர்தலையோ நடத்தாமல் காலம் கடத்துவதற்கு வழியில்லை என்று ஒருபோதும் கருதக்கூடாது. அதற்கு குறுக்கு வழியில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படலாம்.

தற்போதைய அரசியல் அமைப்பைக் கொண்டு வந்த பிதாமகரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, அதற்கான வழியையும் காட்டியிருக்கிறார். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் ஆறில் ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றிய அவர், 1982 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்தினால், தனது பெரும்பான்மை பலம் பறிபோய் விடும் என்பதால், நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிப்பு செய்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்தினார். அதன் மூலம் அவர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தாமல் தவிர்த்துக் கொண்டார்.

தற்போதைய அரசாங்கத்துக்கும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள நிலையில், அவ்வாறான முன்னுதாரணங்களைத் தற்போதைய அரசாங்கம் பின்பற்றாது என யாரும் நம்பி விட முடியாது. மாகாண சபைகளுக்கு உடனடியாகத் தேர்தலை நடத்தும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆட்சிக்கு வந்தவுடன், கூடிய விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள் தான், இந்த ஆண்டு தேர்தல் இல்லை என்று கூறுகிறார்கள். இதற்காக அரசாங்கம் வெட்கப்படவில்லை. துணிச்சலுடன் அதனை நிராகரிக்கின்ற நிலையில் இருக்கிறது.

அரசாங்கம் மாகாண சபை தேர்தலில் வெற்றி பெறக் கூடிய நிலையில் இருந்தால் மட்டுமே, அதனை நடத்தும் எனத் தெரிகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வாக்கு வங்கி 20% சரிந்திருப்பதாகவும் அதனால் தேர்தலை நடத்தாது என்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கூறியிருக்கிறார். அவரது இந்தக் கருத்து சரியானதாகவே தெரிகிறது.

அப்படிப் பார்த்தால், தேர்தல் முடிவுகள் குறித்து அச்சமின்றி முடிவெடுக்கக் கூடிய தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தது மஹிந்த ராஜபக்ஷ மட்டும் தான். அவர் ஆட்சியில் இருந்த போதும், ஆட்சியிலிருந்து விலகிய பின்னரும், ஒரு விடயத்தை மிகத் தெளிவாகக் கூறி வந்தார். நாங்கள் ஜனநாயகத்தை முழுமையாகக் காப்பாற்றினோம் என்பதே அது. எல்லாத் தேர்தல்களையும் உரிய காலத்தில் நடத்தி வருகிறோம் என்பதே அதற்கு அவர் கூறிய காரணம். அது மிகச் சரியான கூற்று. ஆனால் அது மாத்திரம் ஜனநாயகம் அல்ல. தேர்தல்களை ஒழுங்காக நடத்துவதால் மாத்திரம் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறது என்று அர்த்தமில்லை. அதேவேளை, தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்துக் காலத்தைக் கடத்துகின்ற, இப்போதைய சூழலையும் ஜனநாயகச் சூழல் என்று குறிப்பிட முடியாது.

Post a Comment

0 Comments