elugai

மாறும் உலக ஒழுங்கில் இலங்கையின் மும்முனை அணுகுமுறை

அரசியல் ஆய்வு: மாறிவரும் உலக ஒழுங்கும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையும்

அரசியல் ஆய்வு: மாறிவரும் உலக ஒழுங்கும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையும்..!!

ஆய்வு: பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் | தொகுப்பு: எழுகை மீடியா

ஓர் அரசின் உயிர் வாழ்வு அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்ததாக மாறிவிட்டது. தகவல் தொழில்நுட்பத்தின் விருத்தி, பொருளாதார வளங்களைக் கைப்பற்றுவதற்கான போட்டி விதி என்பன ஒன்று சேர்ந்து நாடுகளைப் போட்டியாளர்களாக மாற்றியுள்ளது. தீவுகளாக இருக்கும் அரசுகளும் பின்தங்கிய சமூக வாழ்க்கையைக் கொண்டிருக்கும் தேசிய அரசுகளும் இப்போது தனித்து இயங்க முடியாத உலக ஒழுங்குக்குள் அகப்பட்டுள்ளன எனக்கூறுகின்றார் அரசறிவியல் துறைப் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் அவர்கள்.

உலக வரைபடம் மற்றும் சர்வதேச இராஜதந்திரம்

[மாறிவரும் உலக ஒழுங்கு மற்றும் சர்வதேச அதிகாரப் போட்டி]

மேலும் அவர், இதனை இன்னொரு வகையில் விளக்க முனைகின்றார். அதாவது, இன, நிற, மத வேறுபாடுகளைக் கடந்து ஒவ்வொரு அரசும், இன்னோர் அரசில் தங்கியிருக்கின்ற நியதி தவிர்க்க முடியாததாகிவிட்டது. இவ்வகைத் தங்கியிருப்பு நிபந்தனையுடனான நியமமான விதியைத் தருவித்துள்ளது. இவ்விதியின் இயங்குவிசை நேர்க்கணியத்தில்தான் செயற்பட வேண்டும் என்பதில்லை. மாறாக அரசுகளுக்கிடையே எதிர்க்கணியத்தில் செயற்படும்பொது வெளிதோன்றும் விளைவுகளைக் கொண்டு அதன் வெளியுறவுக் கொள்கையை அளவிட வேண்டியுள்ளது. சமகால உலக ஒழுங்கில் நாடுகளின் வெளியுறவானது வளங்களை நோக்கி உறவுகளைச் சரிசெய்வதும் மாற்றுக் கொள்கைக்குரிய நியமங்களை உருவாக்குவதும் விஸ்தரிப்பதும் வெளிநாட்டுக் கொள்கையாகிவிட்டது என்கின்றார்.

இன்றைய இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மாற்றங்கள்

அவரது நோக்கில் நின்று இன்றைய இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மாற்றங்களும் புதிய போக்குகளும் பற்றி ஆராய்வோமானால், வெளிநாட்டுக் கொள்கையை வரையறை செய்தல் என்பது கடினமான இலக்காகத் தெரியவில்லை. காரணம் காலத்திற்குக் காலம் தேசிய அரசுகளுக்கிடையே நிகழும் அரசியல், பொருளாதார, இராணுவ மற்றும் வர்த்தக உறவானது குறித்த நாடுகளுக்குள்ளும் அவை சார்ந்துள்ள அமைப்புகளுக்கிடையிலும் மேற்கொள்ளப்படும் பரஸ்பர பரிமாற்றம் சார்ந்த விடயமாகிவிட்டது. இதனையே அனைத்து அரசுகளும், தேசிய அரசுகளும், பிராந்திய அரசுகளும், வல்லரசுகளும் எதிர்கொண்டு வருகின்றன.

"தந்திரமானதும், பிற நாட்டுடன் இணக்கப்பாடு உடையதுமான அரசியல், பொருளாதார, வர்த்தக, கலாசாரத் தொடர்பின் முழுமையான வெளிப்பாடே வெளிநாட்டுக் கொள்கை"
- ஹபரால் நிக்வோல்சன்

தேசிய அரசுகள் என்ற அமைப்பினுள் அவ்வரசின் கொள்கைத் தீர்மானங்களை எடுப்பதும் நடைமுறைப்படுத்துவதும் அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கையாக அமையும். பொருத்தப்பாடுடைய அரசுகளுடன், வளத்தைப் பகிரக்கூடிய அரசுகளுடன் இசைவான உறவைத் தெரிவு செய்வதும், வெளியுறவுக் கொள்கையாகப் பேசப்படுகின்றது. ஜார்ஜ் மொடல்ஸ்கி என்பவரின் கூற்றுப்படி, வெளியுறவுக் கொள்கையானது ஓர் அரசு உலகச் சூழலுக்கேற்ப உள்நாட்டு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தவும் அதற்குச் செயல்வடிவம் கொடுக்கவும் மேற்கொள்ளப்படும் முறையான நடைமுறை எனக்கூறுகின்றார்.

இலங்கையின் மும்முனைப் போட்டி இராஜதந்திரம்

இலங்கையின் வெளியுறவானது பிரதானமானதாகப் போட்டி அரசுகளைக் கையாளும் உத்திகளை அதிகம் கொண்ட கொள்கையை அதிகம் பிரதிபலிக்கிறது. பொதுவாக அரவணைத்தல், விட்டுக்கொடுத்தல், இணங்கிப் போதல் எனும் நிலைக்குள்ளேயே காணப்படுகிறது. குறிப்பாக இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற மூன்று சக்திகளையும் சரிவரக் கையாளும் திறனைக் கொண்ட போக்கினை வெளியுறவில் பின்பற்றி வருகிறது.

இலங்கையின் இராஜதந்திர உறவுகள்

[இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுடனான இலங்கையின் இராஜதந்திர நகர்வுகள்]

இலங்கை ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் இந்தியாவை அரவணைத்துச் செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவினால் ஏற்படுத்தப்படுகிறது. அதனை அவர்கள் ஏற்பதன் மூலம் அரசியல் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உத்தரவாதத்தைக் கொண்டுள்ளனர். சமகாலத்தில் ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி (NPP/JVP) அரசாங்கம் இந்தியாவுடனான உறவைப் பேணுவதிலும் அதனைத் தக்கவைத்துக்கொள்வதிலும் அதீத ஈடுபாடு கொண்டுள்ளதைக் காணமுடிகிறது.

சீனாவின் உபாயம் மற்றும் அமெரிக்காவின் நகர்வு

சீனாவின் உபாயம் வலுவான ஒத்துழைப்பைத் தென்னாசிய நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தியதோடு 'முத்துமாலைத் திட்டம்' (String of Pearls) மற்றும் 'பாதை மற்றும் பட்டி' (BRI) முன்முயற்சியை முதன்மைப்படுத்தி இலங்கை உட்பட தென்னாசிய நாடுகளை அரவணைக்க ஆரம்பித்தது. இது ஒரு வகையில் இந்தியாவைச் சுற்றி வளைப்பதாகவே அமைந்திருந்தது.

இந்தோ-பசுபிக் உபாயம்: மறுபக்கத்தில் இந்தோ-பசுபிக் உபாயத்தின் மூலம் அமெரிக்காவின் ஒத்துழைப்போடு இலங்கை நகர்கின்றது. 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் (14) தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமெரிக்காவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றினைச் கைச்சாத்திட்டுள்ளது. அத்தகைய உடன்பாடு இராணுவ ரீதியில் இரு நாட்டுக்குமான ஒத்துழைப்பினைப் பலப்படுத்தக் கூடியது.

எனவே இலங்கைத் தீவின் அரசியலில் வெளியுறவானது வல்லரசுகளைக் கையாளும் கலையை நன்கு தனதாக்கியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகள் மட்டுமல்லாது பெரும் வல்லரசுகளையும் எதிர்கொள்ளும் திறன் தற்போதைய அரசாங்கத்திற்கும் உரியதாகியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, சீனா பக்கம் என்று செயற்படாது மூன்று தரப்புகளையும் கையாளும் வலிமையை அரசாங்கம் கொண்டுள்ளது.

முற்றும்.

Post a Comment

0 Comments