வலுவிழக்கும் நம்பிக்கை
மாகாண சபை தேர்தல்களை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை என ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார்.
ஒரு வார இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னரே அவர், இதனைத் தெரிவித்திருக்கிறார்.
மாகாண சபைகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது ஆட்சிக்காலத்தின் நான்கில் ஒரு பங்கை நிறைவு செய்துள்ள சூழலில், தேர்தலை நடத்துவதற்கு இப்போது வாய்ப்பில்லை என கைவிரித்திருக்கின்ற சூழலில், தான் அவரது இந்தக் கருத்து வெளிவந்திருக்கிறது.
கடந்த ஆண்டு, உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அந்தக் கட்சி 23 இலட்சம் வாக்குகளை இழந்துள்ள சூழலில் இன்னொரு தேர்தலுக்கு செல்வதற்கு அது உடனடியாக தயாராக இல்லை.
அதனால் தான், இந்த ஆண்டு பெரும்பாலும் தேர்தல் நடத்தப்படாது என, ஆளும்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பகிரங்கமாகவே கூறத் தொடங்கியிருக்கிறார்கள்.
அதேவேளை, அரசாங்கம் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் இன்னொரு தடையையும் போட முனைகிறது. மாகாண சபை தேர்தல் பிரிவுகள் தொடர்பான எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்கான குழு ஒன்றை நியமிப்பதற்கும், தேர்தல் தொடர்பான சிக்கல்களை தீர்ப்பது குறித்து ஆராய்வதற்குமான தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பதென நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தது.
ஆனால், அந்தத் தெரிவுக்குழுவிற்கான உறுப்பினர்களை ஆளும் தரப்பே நியமிக்காமல் இழுத்தடித்து வருகிறது. இந்தத் தெரிவுக்குழு எல்லை நிர்ணயம் தொடர்பாக தீர்மானம் ஒன்றுக்கு வருவதற்கு பல மாதங்கள் ஆகும். அது சில வேலைகளில் ஆண்டுக் கணக்கில் கூட செல்லக்கூடும். தேர்தலை இழுத்தடிக்கும் நோக்கிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் அரசாங்கம் தொடர்பான எதிர்மறையான கருத்துக்கள் குறைந்து வருவதாக கூறப்பட்டிருக்கிறது. 65 வீதமானோர் அரசாங்கத்திற்கு சாதகமான கருத்துக்களையே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இதனை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இப்பொழுது உங்களுக்கு சாதகமான நிலை உள்ளதாக கூறப்படுகின்ற சூழலிலாவது, மாகாண சபை தேர்தல்களை நடத்திக் காட்டுங்கள் என சவால் விடுத்திருந்தார்.
ஆனாலும் இந்த சவால்களுக்கெல்லாம் பதிலளிக்க அரசாங்கம் தயாராக இல்லை. ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்தளவு வாக்குகள் மாகாணசபைத் தேர்தலில் கிடைப்பது கடினம் என்பது, அரசாங்கத்துக்கு நன்றாக தெரியும். அதனால் இந்த சவாலை எதிர்கொள்வதற்கு முன்னர் தங்களை பலப்படுத்திக் கொள்வதற்கு அது முற்படுகிறது.
தமிழ்க் கட்சிகளின் நம்பிக்கையும் இந்தியாவும்
அதேவேளை எதிர்க்கட்சிகளும் தமிழ் கட்சிகளும் மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன. தொடர்ச்சியாக அதனை வலியுறுத்தி வருகின்றன.
தமிழ்க் கட்சிகள் இந்தியத் தரப்புகளை சந்திக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு - 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, அழுத்தம் கொடுக்கும்படி வலியுறுத்தி வருகின்றன.
இந்தியாவின் ஊடாக இதனை சாத்தியமாக்கலாம் என்ற நம்பிக்கை தமிழ்க் கட்சிகளுக்கு இன்னமும் இருந்து வருகிறது. ஆனால், இந்தியாவுக்கு சென்று திரும்பிய ரில்வின் சில்வா வெளியிட்டிருக்கின்ற கருத்து, இந்தியா தொடர்பான தமிழ்க் கட்சிகளின் நம்பிக்கையை நொருக்குவதாக அமைந்திருக்கிறது.
புதுடெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பவன் கபூர் ஆகியோருடனான சந்திப்பின் போது, அதிகாரப்பகிர்வு அல்லது பயங்கரவாத பிரச்சினைகள் பற்றி எதுவும் கலந்துரையாடப்படவில்லை என்றும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கவனம், அரசியல் நிகழ்ச்சி நிரலில் இல்லை, அது முழுக்க முழுக்க பொருளாதார அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்பத்திலேயே உள்ளது என்றும், இந்தியா எப்போதும் சிறிலங்காவுக்கு உண்மையான மற்றும் நம்பகமான பங்காளியாக இருக்கும் என்று தமக்கு மீண்டும் உறுதியளித்ததாகவும் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார்.
இராஜதந்திர தோல்வியா?
அப்படியானால் இந்தியத் தரப்பு மாகாண சபை தேர்தல்களை நடத்துமாறு - 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு, கொழும்புக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருவதாக கூறுவதெல்லாம் பொய்யா? என்ற கேள்வி எழுகிறது.
சில மாதங்களுக்கு முன்னர், இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது, மாகாண சபை தேர்தல் தொடர்பாக இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போது, தொடர்ச்சியாக இது பற்றி தாங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு வலியுறுத்தி வருவதாகவும், அவர்கள் ஆம் எனத் தலையாட்டி விட்டு செல்கின்ற போதும், அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் ரில்வின் சில்வாவின் கருத்தைப் பார்க்கும் போது, இந்தியா அவ்வாறான அழுத்தம் கொடுத்ததா - அப்படிக் கூறியது பொய்யா? இல்லாவிட்டால், இந்தியா இதுபற்றி பேசுவதை ஜேவிபி தரப்பு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையா? இதுபற்றிப் பேச வேண்டிய தொனியில் இந்தியா பேசவில்லையா? என்று சந்தேகங்கள் எழுகின்றன.
ஏனென்றால் இந்த விடயத்தில் இந்தியா தனக்குள்ள கடப்பாட்டை சரியான முறையில் நிறைவேற்றுவதாக இருந்தால், கொழும்புக்கு அதன் பாணியில் அழுத்தங்களை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்தியா அவ்வாறு செய்யவில்லை. அது ஜேவிபியை தமக்குச் சார்பாக, சாதகமாக கையாளுவதிலேயே கவனம் செலுத்துகிறது.
அதனால் தான், மாகாண சபை தேர்தல் விடயங்கள் உள்ளிட்ட சிக்கலான விடயங்களில், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு அது தயங்குகிறது அல்லது தவறுகிறது. இந்தச் சூழலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய- இலங்கை உறவுகள் மாறிவிட்டதாகவும், ஒன்றாக வேலை செய்ய முடியும் என இந்தியா உணர்ந்து கொண்டிருப்பதாகவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டிருக்கிறார். இதன் ஊடாக அவர் சொல்ல வருவது என்ன? இந்தியாவும் நாங்களும் ஒரே கோர்ட்டில் பயணிக்கிறோம், ஒன்றாக செயற்பட தயாராக இருக்கிறோம் என்பதுதான்.
0 Comments