elugai

சர்வாதிகாரத்தை நிறுவும் முயற்சி: புதிய அரசியலமைப்பும் 'மென்மையான' அடக்குமுறைச் சட்டங்களும்!

சர்வாதிகாரத்தை நிறுவும் முயற்சி

சர்வாதிகாரத்தை நிறுவும் முயற்சி

கட்டுரையாளர் — கார்வண்ணன்

அண்மையில் ஒளிபரப்பான தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பூர்வாங்க வேலைத்திட்டம் ஆரம்பமாகி விட்டதாக கூறியிருக்கிறார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழித்தல், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்தல், நிறைவேற்று அதிகாரம் இல்லாத ஜனாதிபதி பதவியை உருவாக்குதல் — ஆகியவற்றை மையப்படுத்தி இந்த அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

ஏற்கனவே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்திருந்தார்.

முன்னைய அரசியலமைப்பு வரைவுகள், யோசனைகள், திட்டங்களின் அடிப்படையில் அரசியலமைப்பு யோசனையை தயாரிக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், இதனை பெரும்பாலான தரப்புகள் விளையாட்டாகவே எடுத்துக் கொண்டிருந்தன.

பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு அறிவிப்பு
பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்று ஜனாதிபதி பதவி ஒழிப்பு அறிவிப்பு — டிசம்பர் 19, 2025 (படம்: Newswire.lk)

தற்போதைய அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பலம் இருக்கிறது.

புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வருவதற்கு அரசாங்கத்துக்கு தேவையான பலம் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற நிலையில் அதற்கான முயற்சியை முன்னெடுப்பது கடினமானதல்ல.

தற்போதைய அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதாக கடந்த தேர்தல்களின் போது வாக்குறுதி கொடுத்திருந்தது தேசிய மக்கள் சக்தி. அந்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்கு அவர்களுக்கு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

தேசிய மக்கள் சக்தி சின்ன சின்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினாலும், அரசியல் ரீதியான பெரிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டை ஏற்கனவே சுமக்கத் தொடங்கிவிட்டது.

எனவே அரசியலமைப்பு மாற்ற விவகாரத்திலாவது தான் சொல்வதை செய்து கொண்டிருக்கிறேன் என்று காட்ட வேண்டிய தேவை உள்ளது. அதன் அடிப்படையில் தான் இப்பொழுது ரில்வின் சில்வாவும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

நிறைவேற்று அதிகாரம் — கடந்த கால வரலாறு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பது தான் தற்போதைய அரசியலமைப்பில் உள்ள முக்கியமான பிரச்சினை. இந்தக் கோசத்துடன் ஆட்சிக்கு வந்தவர்கள் எல்லோருமே அதில் சறுக்கி விழுந்தனர்.

ஜே.ஆர். ஜயவர்த்தன கொண்டு வந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியில், ரணசிங்க பிரேமதாச, டி.பி. விஜேதுங்க ஆகியோரைத் தவிர, மற்றவர்கள் இதனை ஒழிப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தனர்.

சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக வாக்குறுதி கொடுத்தார். அவர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்காவிட்டாலும் கணிசமான பலத்துடன் ஆட்சியில் அமர்ந்திருந்தார். அவருக்கு மக்களின் செல்வாக்கும் அதிகம் இருந்தது, ஒன்றுக்கு இரண்டு முறை அவர் ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் அவரால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்க முடியவில்லை.

அவருக்குப் பின்னர், ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பது தொடர்பாக வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். ஆனால் அந்த வாக்குறுதிப்படி அவர்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கவோ அல்லது அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவோ முடியவில்லை.

அதற்குப் பிரதான காரணம் அரசியல் ஆதரவு இல்லாமையோ மக்களாதரவு இல்லாமையோ அல்ல. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றிருந்தவர்கள் அல்லது பெறக்கூடிய நிலையில் இருந்தவர்கள் கூட, இந்த விடயத்தில் சிரத்தை காண்பித்திருக்கவில்லை.

ஏனென்றால் அரசியலமைப்பை மாற்ற முனைகின்ற போது, உயர்நீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு அறிவுறுத்தலாம். அதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். எனவே, தற்போதைய அரசியலமைப்பை மாற்றுகின்ற போது, அதற்கு அங்கீகாரம் பெறுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்படும். அவ்வாறான நிலையை எதிர்கொள்வதில் உள்ள அச்சத்தில் தான் பலரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியின் மீது கை வைக்காமல் இருந்தனர்.

இன்னொரு பக்கத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு வந்ததும், அவர்களுக்கு அந்த பதவியின் மீது ஆசையும் அதனை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டு விடும். அது தங்களின் பதவிக் காலத்தில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தவிர்க்கின்ற அல்லது பிற்போடுகின்ற சிந்தனையை ஏற்படுத்தும். இதுதான் கடந்த காலத்தில் நடந்த விடயம்.

இப்போது ஆட்சிக்கு வந்திருக்கின்ற தேசிய மக்கள் சக்திக்கும் அதே சிக்கல் இருக்கிறது. ஆனால் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டிய நிலையில் அது இருக்கிறது. கொள்கை வழி அரசாங்கத்தை நடத்துகின்ற அந்தக் கட்சி எப்படியாவது அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டு வந்து நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க விரும்புகிறது.

அதேவேளை அந்தக் கட்சி நாட்டில் ஒரு கட்சி ஆட்சியை உருவாக்க முற்படுவதாக பரவலான குற்றச்சாட்டுகள் விமர்சனங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. அதனை அரசாங்கம் மறுத்து வந்தாலும், அத்தகைய அச்சுறுத்தல் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனை போக்குவதற்காகவும் கூட, புதிய அரசியலமைப்பை கொண்டு வருகின்ற அல்லது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியை ஒழித்து விடுகின்ற நோக்கில் செயற்படுகிறோம் என்று காட்ட வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது.

பயங்கரவாத சட்டமும் மறைமுக சர்வாதிகாரமும்

ஆனால் நிறைவேற்று அதிகார ஆட்சியை ஒழித்தாலும் பின் கதவு வழியாக அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே, பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை கொண்டு வருகின்ற முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூறியிருக்கிறார். அவர் இந்த புதிய சட்டவரைவை மிகக் கடுமையாக எதிர்க்கிறார்.

கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியராக இருந்த அவர், நீதி அமைச்சராகவும் அரசியலமைப்பு விவகார அமைச்சராகவும், வெளிவிவகார அமைச்சராகவும் கூட, கடந்த காலங்களில் பணியாற்றியவர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு அல்லது அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கக்கூடிய பல விடயங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியில் உள்ள சர்வாதிகார அதிகாரங்களை, மென்மையாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தைக் கொண்டு வர அனைத்து தந்திரங்களையும் செய்கின்றனர்.

பட்டிக்கலோவில் PSTA எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
பட்டிக்கலோவில் PTA ரத்து, PSTA எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் — பிப்ரவரி 28, 2026 (படம்: Newswire.lk)

முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டால் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு, வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் எந்தவொரு அமைப்பையும் தடை செய்யும் அதிகாரம் உள்ளிட்ட கூடுதல் சர்வாதிகார அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஜே.ஆர். ஜயவர்த்தன செய்தது போல அரசியல் கட்சிகளைத் தடை செய்ய அரசாங்கம் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 1983 இனக்கலவரத்தை அடுத்து, தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி ஜேவிபியை அவர் தடை செய்திருந்தார். அதே பாணியில் தற்போதைய ஜனாதிபதியும், எதிர்காலத்தில் இந்தப் பதவிக்கு வரக்கூடியவர்களும் செயற்படக்கூடிய ஆபத்து உள்ளது.

அதுமாத்திரமின்றி நீதித்துறையின் தலையீடு இல்லாமல், நிர்வாகத்துறையில் உள்ள பாதுகாப்புச் செயலாளரின் ஊடாக, அரசாங்கம் குற்றம்சாட்டுகின்ற ஒருவரை, பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தின் மூலம், ஒரு வருடம் வரை தடுத்து வைக்கக்கூடிய அதிகாரத்தையும் பெற முடியும். அதைவிட ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுகின்ற அதிகாரமும் ஜனாதிபதிக்கு கொடுக்கப்படுகிறது.

இப்படி பல விடயங்களில் ஜனாதிபதிக்கு அதிகாரம் கொடுக்கின்ற வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வருகின்ற முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது கடந்த காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களைக் குறை மதிப்பிற்குட்படுத்துகிறது.

அதுமாத்திரமன்றி எதிர்காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்கின்ற சந்தர்ப்பத்தில், அந்த சர்வாதிகார அதிகாரத்தை மென்மையான முறையில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அமையும்.

ஆக ஒரு கையால் கொடுத்து இன்னொரு கையால் பறித்துக் கொள்வதற்கான தந்திரத்தையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கையாளுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்திற்கு சங்கடம் தரக்கூடியவை. ஏனென்றால் அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது என்ற பெயரில் கொடூரமான சட்டத்தை கொண்டு வந்து, அதனை வைத்து மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முற்படுகிறது என்பது வெளிப்படையாகிறது.

தற்போது அப்பாவித்தனமான அரசாங்கமாக நடந்து கொள்ள முற்பட்டாலும், அதன் அடிப்படை நோக்கம் நீண்ட காலத்திற்கு ஆட்சியை நிலைப்படுத்திக் கொள்வதே என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கான அடித்தளமாக பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை தற்போதைய அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிவிப்பையும் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவையும் ஒருங்கிணைத்து பார்ப்பது முக்கியமானது. அப்படி நோக்கினால் இதற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய சவால்களையும், ஆபத்துகளையும் புரிந்து கொள்ள முடியும்.

Post a Comment

0 Comments