எரிக் மேயரின் இலக்கு என்ன?
கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது பணிக்காலத்தை முடித்து, நாடு திரும்பியதை அடுத்து, புதிய அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் பதவியேற்கவிருக்கிறார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கொழும்பில் பணியாற்றிய ஜூலி சங், கொழும்பின் ஆட்சியாளர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டவராக விடை பெற்றிருந்தார்.
இலங்கை - அமெரிக்க இராஜதந்திர உறவுகளின் புதிய அத்தியாயம்
அவரது இடத்திற்கு வரப்போகும் புதிய தூதுவர் எரிக் மேயர் எவ்வாறு செயற்பட போகிறார் என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. அவருக்கு இலங்கை ஒரு சவால்மிக்க இடமாகவே இருக்கும். தனிப்பட்ட முறையிலன்றி, பூகோள அரசியல் ரீதியாக, அமெரிக்காவுக்கு இருக்கின்ற சவால் இது.
வெளிப்புறத் தலையீடுகளும் எரிக் மேயரின் பதிலும்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் தூதுவராக முன்மொழியப்பட்ட பின்னர், எரிக் மேயரை அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவுக்குழு நேர்காணல் செய்திருந்தது. அப்போது அவர், "இலங்கையில் துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பை வெளிப்புற செல்வாக்கிலிருந்து பாதுகாக்க, கொழும்பு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக" கூறியிருந்தார். அவர் வெளிப்புறத் தலையீடுகள் எனக் குறிப்பிட்டது பிரதானமாக சீனாவைத் தான்.
இலங்கையில் சீனா தளம் அமைக்க விரும்புகிறது என்றால், அது ஒன்றில் துறைமுகத்தை அல்லது விமான நிலையத்தை அல்லது முக்கியமான உள்கட்டமைப்பு ஒன்றை இலக்கு வைத்திருக்க வேண்டும். சீனா ஏற்கனவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கொழும்பு துறைமுகத்தின் முனையங்களிலும் அதன் செல்வாக்கு இருக்கிறது.
சீனாவின் முதலீடுகளும் அமெரிக்காவின் பார்வையும்
அம்பாந்தோட்டையில் சீனாவின் சினோபெக் நிறுவனம் ஒரு பாரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவத் திட்டமிட்டிருக்கிறது. இதேபோல, விவசாயத் துறையிலும் காலடி எடுத்து வைக்க சீனா தயாராகி வருகிறது. இதுபோன்ற உட்கட்டமைப்பு விரிவாக்கங்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனிக்கிறது.
இலங்கையின் உட்கட்டமைப்பு திட்டங்களில் வெளிநாடுகளின் போட்டி
ட்ரம்ப் பாணியிலான இராஜதந்திரம்
ஜூலி சங் முழு அளவில் இராஜதந்திரத்தை நம்பினார். ஆனால் எரிக் மேயர் அப்படியல்ல. அவர் டொனால்ட் ட்ரம்பினால் நியமிக்கப்பட்டவர். அவர் ட்ரம்பின் கொள்கையை அவரது பாணியிலேயே நிறைவேற்ற முயற்சிப்பார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று உலகம் முழுவதையும் குழப்பி வைத்திருக்கிறார்.
"உலக ஒழுங்கு குரங்கின் கையில் சிக்கிய பூமாலை போல, பிய்த்தெறியப்பட்டுக் கொண்டிருக்கிறது. ட்ரம்பின் இன்றைய உலகம் வித்தியாசமானது, அது யாரையும் யாரும் மிரட்டலாம், எந்த நாட்டின் உள்நாட்டு விவகாரத்திலும் தலையீடு செய்யலாம்."
இலங்கையின் தற்போதைய அரசாங்கம், ட்ரம்ப் முற்றாக எதிர்க்கின்ற இடதுசாரி சித்தாந்தங்களினால் கட்டமைக்கப்பட்டது. அவர் இலங்கையின் மீது எந்த நேரத்திலும் அழுத்தங்களை பிரயோகிக்கலாம். இலங்கையில் ட்ரம்ப் எதனை எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை.
முடிவுரை
பிரிட்டன் சாகோஸ் தீவுகளை ஒப்படைப்பது முட்டாள்தனம் என்று ட்ரம்ப் கருதுவது போல, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இலங்கையின் மீதும் அவர் குறி வைக்கலாம். ட்ரம்பின் தூதுவராக வருபவர் அத்தகைய நோக்கமுடையவராக இருந்தால், அவர் இலங்கைக்கு கடும் சவாலானவராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
0 Comments