தமிழர்கள் நாள், மாதம் ஆண்டுக் கணக்கீட்டை உலகுக்கு முதன்முதலில் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டுக் கொடுத்தவர்கள். காலையில் சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற ஆகும் காலம் ஒரு நாள்.
மாதம் என்பதற்குத் திங்கள் என்று ஒரு சொல் உண்டு. திங்கள் என்றால் நிலவு. நிலவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் திங்கள் என்ற பெயர் மாதத்திற்கு வந்தது. முழுநிலவு தோன்றி மீண்டும் முழு நிலவு தோன்ற ஆகும் காலம் ஒரு மாதம்.
சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடகோடி முனைக்குச் செல்ல ஆறு மாதம். அது மீண்டும் தென்கோடி முனைக்கு வர ஆறு மாதம். ஆக, தென்கோடி முனையில் தோன்றும் சூரியன் மீண்டும் தென்கோடி முனையை அடைய ஆகும் காலம் ஓர் ஆண்டு என்று கணக்கிட்டனர். சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாளே தமிழ் ஆண்டின் பிறப்பு. தமிழரின் புத்தாண்டு அன்றுதான். அந்த நாளே பெரும் பொங்கல் எனப்படும் சூரியத் திருநாள்.
வரலாற்றுச் சிறப்புக்குரிய இத்தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல்நாள் என்று மாற்றி, அதற்கு ஒரு புராணக் கதையை எழுதிச் சேர்த்து, தமிழ்ப் பண்பாட்டை ஒழித்து, ஆரியப் பண்பாட்டை புகுத்தினர்.
தமிழாண்டு என்றால் தமிழில் அல்லவா ஆண்டுப் பெயர் இருக்கும்? சமஸ்கிருதத்தில் உள்ள 60 ஆண்டும் எப்படித் தமிழாண்டாகும்? சித்திரை தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது ஆரியர் பண்பாட்டின் திணிப்பு. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதே தமிழரின் மரபு!
தமிழர்களிடம் கடவுள் நம்பிக்கை தொன்மைக் காலத்தில் இல்லை. அவர்கள் தங்களுக்குப் பயன்படுகின்றவற்றை, தங்களுக்கு நன்மையும் பாதுகாப்பும் தருகின்றவற்றை மரியாதையின் பொருட்டும், நன்றி செலுத்தவும் வணங்கினர். வேளாண் விளைவிற்குத் துணைநிற்கும் மழை, சூரியன், மாடு, உழைப்பாளிகளை மதிக்க நன்றி விழாவாகத் பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.
விளைவிற்குக் காரணமான மழைக்கு நன்றி கூறினர். அது மழைத்திருநாள் ஆகும். ஆனால், ஆரியப் பார்ப்பனர்கள் மழைக்கு அதிபதி இந்திரன் என்றும், இந்திரனுக்கு போகி என்று ஒரு பெயர் உண்டு என்றும் கூறி, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர். காலப்போக்கில் இதனைப் பழைய பொருட்களைப் போக்குதல் (எரித்தல்) என்று மாற்றி காற்று மண்டலத்தையே மாசுபடுத்தும் புகைப் பண்டிகையாக மாற்றிவிட்டனர்.
ஏர் உழப் பயன்படும் மாடுகள் உழவனின் தோழன் என்பதால், அவற்றுக்கு நன்றி கூற மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதிலும் இந்திரன் கோபத்தால் மழை பெய்த கதை போன்ற புராணக் கதைகளைப் புகுத்தி அதன் மாண்பைச் சிதைத்தனர்.
அடுத்த நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கல் என்பது வேளாண் உற்பத்திக்காக உழைக்கின்ற உழைப்பாளர்களுக்கு நன்றி சொல்லவும், அவர்களைச் சிறப்பிக்கவும் தமிழர்களால் உருவாக்கப்பட்டது. அன்று நில உரிமையாளர்களும் உழைப்பாளர்களும் ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்ந்து பரிசுகளைப் பகிர்ந்து கொள்வர். இந்த உழைப்பாளர் பொங்கலையும், மழை நின்ற பின் மக்கள் நலம் விசாரித்ததாக ஒரு கதை கட்டி ஆரியப் பண்பாட்டைப் புகுத்தினர்.
சித்திரையில் சூரியன் தலைக்கு நேர் இருக்கும். ஒரு நாளைத் தொடங்கும் போது காலை நேரத்தைத் தொடக்கமாகக் கொள்வது போல, ஆண்டின் தொடக்கமாகச் சூரியன் வடதிசை நோக்கி நகரத் தொடங்கும் தை முதல் நாளையே தமிழர்கள் கொண்டனர். தமிழ்ப் பண்பாட்டை மாற்றி, மறைத்து, ஆரியப் பண்பாட்டைப் புகுத்துவதில் ஆரியப் பார்ப்பனர்கள் எவ்வளவு முனைப்புடன் செயல்படுகிறார்கள் என்பதற்கு 'துக்ளக்' இதழும் ஒரு சான்று. தமிழர்கள் இவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்!



0 Comments