‘தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்’: நூல் எழுப்பும் கேள்விகள்
கொழும்பில் இயங்கும் மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையத்தின் வெளியீடாக அண்மையில் எட்டு கட்டுரைகளின் தொகுதியாக வெளிவந்துள்ள 'தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்' நூலில் இலங்கையின் வடக்குக் கிழக்கின் தமிழ்த் தேசியவாத அரசியலின் தற்போதைய நிலைமைகளை எதிர்கால நோக்கில் ஆராய்கிறார் வீரகத்தி தனபாலசிங்கம்.
நூலாசிரியர் நீண்டகால அனுபவமும் விமர்சனப் பார்வையும் கொண்ட பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் பொதுவெளிப் பேச்சாளர். முன்னுரையில் ஈழத் தமிழ்த் தேசியவாத அரசியலின் இன்றைய நிலை பற்றி அவருடைய கணிப்பை அக்கறையுடன் பதிவிடுகிறார்.
"இலங்கை அரசியல் வரலாற்றில் இனத்துவ உறவுகளைப் பொறுத்தவரை எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை வன்முறைக்குப் பின்னர் 42 வருடங்களையும் போர் முடிவுக்குப் பின்னரான 16 வருடங்களையும் கடந்துவந்த நிலையில் இன்று தமிழர்களின் அரசியல் இருப்பு கேள்விக்குறியாக... இடர்மிகு கட்டத்தில் வந்து நிற்கிறது. தமிழர் அரசியல் குறித்து நாம் ஆழ்ந்து ஆய்வறிவு நிலைப்பட்டுச் சிந்திக்க வேண்டிய முட்டுச்சந்தில் நிற்கிறோம்."
முட்டுச்சந்தில் நிற்கும் தமிழர் அரசியல்
இந்தத் தொகுப்பு பிரதானமாக இலங்கை இனத்துவ அரசியல் சூழலில் வடக்குக் கிழக்கின் தமிழ் சமூகத்தை மையப்படுத்திச் சமீப தசாப்தங்களின் வரலாற்றுப் பின்னணியில் கடந்த 16 வருடகால அரசியல் போக்குகளை அலசி எதிர்காலம் தொடர்பான சில கேள்விகளை எழுப்புகிறது.
உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 16 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் எதிர்காலம் குறித்துத் தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய எந்தவிதமான அறிகுறையையும் இலங்கையின் அரசாங்கங்கள் வெளிப்படுத்தாத சூழலில், தமிழ் அரசியல் தலைமைத்துவம் பற்றிய தனது ஏமாற்றத்தை ஆசிரியர் பதிவு செய்கிறார்.
தேசிய மக்கள் சக்தியின் வருகையும் தமிழ் மக்களும்
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு (NPP) வடக்கு கிழக்கில் கணிசமான அளவில் வாக்குகளை வழங்கியுள்ளார்கள். இது தமிழ் பாராளுமன்ற அரசியலில் ஒரு தன்மைசார் திருப்பத்தின் அறிகுறியா அல்லது வழக்கமான போக்கிலிருந்து ஒரு தற்காலிக விலகலா?
தங்களை இதுகாலவரை பிரதிநிதித்துவப்படுத்திவந்த தமிழ்த் தேசியவாதக் கட்சிகளின் செயல்பாடுகளின் மீதான வெறுப்பின் காரணமாகவே தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என தனபாலசிங்கம் வாதிடுகிறார்.
13ஆம் திருத்தமும் மாகாண சபை முறையும்
இலங்கையின் யாப்பின் பதின்மூன்றாம் திருத்தத்தின் தற்போதைய அரசியல் தராதரம் பற்றிப் பார்த்தால், பிரதான தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளும் பிளவுகளும் தமிழ் சமூகத்தை மேலும் பாதித்துள்ளது. 13ஆவது திருத்தம் போதுமானது அல்ல ஆயினும், தமிழ் அரசியல் சமுதாயம் மிகவும் பலவீனமடைந்து சிதறுபட்டிருக்கும் சூழலில் அதுவும் இல்லாமல் போனால் நிலைமை என்னவாகும் எனும் கேள்வியை ஆசிரியர் எழுப்புகிறார்.
புலம்பெயர்வும் புவியியல் மாற்றங்களும்
‘மக்களும் நிலமும் இல்லாமல் எந்தத் தேசியவாதத்தையும் பாதுகாக்க முடியாது’ எனும் வாதத்தின் அடிப்படையில் தனது கருத்துக்களை முன்வைக்கிறார் நூலாசிரியர். வடக்குக் கிழக்கில் தொடர்ந்து வாழ்ந்தால் தமக்கும் தமது சந்ததிகளுக்கும் வளமான எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டால் புலப்பெயர்வு தொடர்வதைத் தவிர்க்க முடியாது.
அக்டோபர் 2013இல் இடம்பெற்ற முதலாவது வடமாகாண சபைத் தேர்தலில் பெரும் வெற்றி ஈட்டி ஐந்து வருடங்களுக்கு அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு கொள்கை அடிப்படையில் செயல்படவில்லை என்ற விமர்சனத்தையும் முன்வைக்கிறார்.
அரசியல் கலாச்சார மாற்றமும் எதிர்காலமும்
தற்போது ஜனாதிபதியும் அரசாங்கத் தலைவர்களும் இனவாதப் பேச்சைத் தவிர்த்து 'சிறீலங்கர்கள்' எனும் கருத்தைப் பிரபலமாக்கி வருகிறார்கள். இந்தப் பின்னணியிலேயே அரசாங்கம் பேசும் ‘புதிய அரசியல் கலாச்சாரம்’ மற்றும் எதிர்பார்க்கப்படும் புதிய அரசியல் அமைப்பின் உள்ளடக்கங்கள் பற்றிய கேள்விகள் எழுகின்றன.
தனபாலசிங்கம் இரண்டு முக்கிய விடயங்களை வலியுறுத்துகிறார்:
1. ஜனாதிபதி ஆட்சிமுறையின் ஒழிப்பு.
2. நாட்டின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான தீர்வு.
1. ஜனாதிபதி ஆட்சிமுறையின் ஒழிப்பு.
2. நாட்டின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான தீர்வு.
இந்த இரண்டையும் செயல்படுத்த வேண்டிய பெரும்பான்மையைப் பாராளுமன்றத்தில் அரசாங்கம் கொண்டுள்ளது. அதைச் செய்து வரலாறு படைக்கும் அரசியல் உறுதிப்பாடு (political will) அரசாங்கத்திடம் இருக்கிறதா? எனும் பெரிய கேள்விக்குக் காலம் பதில் சொல்லும்.
© 2026 ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு | நூலாசிரியர்: வீரகத்தி தனபாலசிங்கம்


0 Comments