பொது அரசியல் ஆவணம்- அவசியமும் அவசரமும்
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையில், அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போது, சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இந்த இணக்கப்பாடுகளில், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவையும் உள்ளன, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாததும் உள்ளது.
தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான இணக்கப்பாடுகள் - ஒரு பார்வை
மாகாண சபைத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி போட்டியிடுவது என ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் களமிறங்குவதற்கு சங்கு கூட்டணி இணங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் ஆவணமும் புதிய அரசியலமைப்பும்
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான ஒரு அரசியல் ஆவணத்தை தயாரிப்பதற்கு, இரண்டு கட்சிகளும் தீர்மானித்துள்ளன. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், விரைவில் அது வெளியிடப்படும் என்றும், இந்தப் பொது ஆவணத்தை உருவாக்கும் செயற்பாட்டில் ஏனைய தரப்பினரும் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார் சுமந்திரன்.
"தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தன்னிடம் உள்ள மூன்றில் இரண்டு பலத்தைக் கொண்டு, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் விரைவில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது."
ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைவுகள், யோசனைகளைக் கவனத்தில் எடுத்து இது தொடர்பான வரைவு, விரைவில் முன்வைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்த போது, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி அந்தக் கூட்டத்தில் பங்கெடுத்திருந்தது. ஆனால், தமிழ் அரசுக் கட்சி அந்த அழைப்பை நிராகரித்து விட்டது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம்: தமிழர் தரப்பின் தயார்நிலை என்ன?
ஒற்றையாட்சி Vs சமஷ்டி
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், ஜயம்பதி விக்கிரமரத்னவின் தலைமையில் ஒரு அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டது. சுமந்திரன், லால் விஜயநாயக்க போன்றவர்களும் அந்த வரைவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அதனை ஏக்கிய ராஜ்ய வரைவு என தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பத்தில் இருந்தே சுட்டிக்காட்டி வருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு காணொளி செவ்வியின் போது, அது ஒற்றையாட்சி அரசியலமைப்பு வரைவு தான் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார். இந்தநிலையில், அந்த வரைவை அடிப்படையாக வைத்து, தற்போதைய அரசாங்கம் ஒரு அரசியலமைப்பை வரையும் முயற்சிகளை முன்னெடுத்தால், அதில் ஒற்றையாட்சி பண்புகளே மேலோங்கியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
விழித்துக் கொள்ள வேண்டிய தருணம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது. அது எந்தவொரு அரசியலமைப்பு திருத்தத்தையும் எந்த நேரத்திலும் முன்னெடுக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது. இந்த விடயத்தில் தமிழ்க் கட்சிகள் விரைவாக செயற்பட வேண்டியது - விழிப்புடன் இருக்க வேண்டியது முக்கியம்.
தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை - காலத்தின் கட்டாயம்
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் ஆவணம் ஒன்றை தயாரிக்கும் போது, அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஈடுபாடும் பங்களிப்பும் அவசியமாகும். அதன் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு தமிழ் அரசுக் கட்சிக்கு இருக்கிறது. இதனை தேர்தல் கூட்டுக்கான முயற்சியாக மாற்றிக் கொள்ளாமல் - தமிழர்களின் அபிலாசைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
0 Comments