சுற்றிவளைக்கப்பட்ட ராஜபக்ஷ குடும்பம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். இலங்கையில் முதல் பெண்மணியாக இருந்த ஒருவர், முதல்முறையாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நாட்டின் அரசுத் தலைவரின் மனைவி, நாட்டின் முதல் பெண்மணியாக கருதப்படுகிறார்.
முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் பறிக்கப்பட்டது. ஆனால், அது அவர் முதல் பெண்மணியாக இருந்த போது இடம்பெற்ற சம்பவங்களுக்காக அல்ல. பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்ட பின்னர், 1970 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக்காலத்தில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டிலேயே, 1980 ஆம் ஆண்டில் அவரது குடியுரிமை 7 ஆண்டுகளுக்கு பறிக்கப்பட்டது.
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (படம்: மாதிரி)
குடியுரிமை பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தேர்தலில் போட்டியிடவோ அல்லது தீவிர அரசியலில் ஈடுபடவோ முடியாதவாறு சட்ட ரீதியாகத் தடை விதிக்கப்பட்டது. சிறிமாவோவின் ஆட்சிக்கால சம்பவங்களை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, சிறிமாவோ பண்டாரநாயக்க மீது சுமத்தப்பட்ட 10 குற்றச்சாட்டுகளில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது போன்ற 6 குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது.
ஜே.வி.பி கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட அவசரகால சட்டத்தை, நாட்டில் இயல்பு நிலை திரும்பிய பின்னரும், தனது அரசியல் எதிரிகளை ஒடுக்கவும், அரசாங்கத்தின் தோல்விகளுக்கு எதிரான போராட்டங்களைத் தடுக்கவும் நீடித்தது. 1975 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய பொதுத்தேர்தலை 1977 ஆம் ஆண்டு வரை நடத்தாமல் ஒத்திவைத்தது. அரசியல் எதிரிகள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை அவசரகால சட்டத்தின் கீழ் அநியாயமாகக் கைது செய்து சிறையில் அடைத்தது. நீதிமன்ற வழக்குகளில் தலையிட்டது.
நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ், சாதாரண மக்களின் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் காணிகள் அரசுடைமையாக்கப்பட்ட போதும், அந்தச் சட்டத்திலிருந்து தனது குடும்ப உறுப்பினர்களின் மற்றும் நெருங்கிய உறவினர்களின் பெருமளவிலான நிலங்களை சட்டவிரோதமாகப் பாதுகாத்துக் கொண்டது. நீதியமைச்சராக இருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவின் மூலம், அரசாங்கத்தின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியாதவாறு நீதித்துறையின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகள் சிறிமாவோ மீது சுமத்தப்பட்டன.
இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், 1980 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணையின் மூலம், சிறிமாவோ பண்டாரநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரது குடியுரிமையும் 7 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்காக சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டு அரசியல் ரீதியாகத் தடை செய்யப்பட்டாரே தவிர, அவர் பொலிசாரால் கைது செய்யப்படவோ, சிறையில் அடைக்கப்படவோ இல்லை.
ஆனால் முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவின் நிலை அப்படியல்ல. நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்ட போது, அது அரசியல் பழிவாங்கலாக அடையாளப்படுத்தப்பட்டது போலவே, ஷிராந்தி ராஜபக்ஷவின் கைதும் ஒரு அரசியல் பழிவாங்கல் என சில தரப்பினரால் கூறப்படுகிறது.
ஆனால் தற்போதைய அரசாங்கம், ராஜபக்ஷவினருக்கு எதிராகவோ அல்லது முன்னைய ஆட்சிகளில் இடம்பெற்ற மோசடிகளுக்கு காரணமாக இருந்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிராகவோ மேற்கொள்ளப்படும் விசாரணைகளை அரசியல் பழிவாங்கல் என கூறப்படுவதை முற்று முழுதாக மறுக்கிறது. இவர்களுடன் தங்களுக்கு எந்த பகையும் இருக்கவில்லை, தனிப்பட்ட ரீதியான கோபதாபங்கள் இல்லை, ஆனால் நாட்டின் சொத்தை சூறையாடியவர்கள், மோசடி செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. அதற்கு இடமளிக்க முடியாது என அரசாங்கம் கூறுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் 16 முன்னாள் அமைச்சர்கள், ஒரு முன்னாள் முதலமைச்சர், 4 முன்னாள் அமைச்சர்களின் மனைவிமார், முன்னாள் அமைச்சர்களின் 7 பிள்ளைகள், 5 முன்னாள் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்திருக்கிறார்.
அதேவேளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, பசில் ராஜபக்ஷ, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, பிரசன்ன ரணதுங்க, ஏ.எச்.எம். பௌசி, பந்துல குணவர்தன, பிரியங்கார ஜயரத்ன, ரோஹித போகொல்லாகம, கெஹலிய ரம்புக்வெல்ல, சரண குணவர்த்தன, சாமரசம்பத் தசநாயக்க, பந்துல குணவர்த்தன, பியசேன கமகே, குமார வெல்கம, துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள், மற்றும் ஷிராந்தி, நாமல், யோஷித, ரோஹித, கோட்டாபய, பசில், சமல், ஷசீந்திர, நிருபமா, சமிந்திர, ஜாலிய விக்ரமசூரிய, உதயங்க வீரதுங்க போன்ற ராஜபக்ஷ உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அனுர அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார். இப்போது ஷிராந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருக்கிறார். பல முன்னாள் அமைச்சர்களும், உயர் பதவிகளில் இருந்த அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜபக்சவினர் அதிகாரத்தில் இருந்த போது, முக்கிய பொறுப்புகளில் இருந்த அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் சிறைத்தண்டனையைப் பெற்றிருக்கிறார்கள் அல்லது குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் இருக்கிறார்கள் அல்லது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
இது ராஜபக்ஷவினரின் ஆட்சி மிக மோசமானதாக இருந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. அதில் ஊழல், மோசடிகள் மலிந்து போயிருந்திருக்கிறது, அதிகார துஷ்பிரயோகங்களும், முறைகேடுகளும் தாராளமாக இடம்பெற்றிருக்கின்றன. இதனையே இப்போது இடம்பெற்று வருகின்ற கைதுகள் உணர்த்தியிருக்கின்றன.
அரசாங்கங்களில் ஊழல் மோசடிகள், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவது வழக்கம்தான். இரும்புப் பிடியில் இருக்கும் சீனாவிலும் கூட, அவ்வப்போது உயர்மட்டத் தலைவர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கி மரணதண்டனை விதிக்கப்படும் நிலை உள்ளது. இவை இல்லாத அரசாங்கம் இருந்ததாக சரித்திரம் இல்லை. ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கலாமே தவிர, முற்றாக ஒழிக்கப்பட்டதாக இருக்காது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் அதே நிலை இருக்கிறது.
இந்த அரசாங்கம் இரண்டு ஆண்டுகளில் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிட்டதை மறுக்க முடியாது. எரிபொருள் கொள்வனவு, கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது, நிலக்கரி இறக்குமதி போன்ற பல விடயங்களில் தற்போதைய அரசாங்கம் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது. இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா? பொய்யா? என்பது வேறு, அவை விசாரித்து உண்மை கண்டறியப்படாத வரையில் அந்த குற்றச்சாட்டுகள் மறைந்து போகாது. அதனை இன்னொரு அரசாங்கம் வந்துதான் விசாரிக்க வேண்டிய நிலை உள்ளது என்றால், தற்போதைய அரசாங்கம் நியாயமாக செயல்படுகிறது என்று கூறமுடியாது.
இப்போது ராஜபக்ஷவினர் அடுத்தடுத்து கைது செய்யப்படுகின்றனர், அவர்கள் குறி வைக்கப்படுவதை, அரசியல் பழிவாங்கலாக அடையாளப்படுத்த பொதுஜன பெரமுன தீவிரமாக முயற்சிக்கிறது. ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். பல்வேறு மோசடிகள், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது விசாரணைகள் நடக்கின்றன. இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து அல்லது விசாரணைகளில் இருந்து தப்பிக்கலாம் என நினைத்தால் அது முட்டாள்தனம். ஏனென்றால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவர்களை சிறைக்குள் தள்ளும் இலக்குடன்தான் இருக்கிறது.
நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் இப்போது, ஷிராந்தி ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். யோசித ராஜபக்சவின் நிலை அடுத்தடுத்த வாரங்களில்தான் தெரிய வரும். மஹிந்த ராஜபக்ஷவின் நிலை கூட பாதுகாப்பானதாக இல்லை. கோட்டாபய ராஜபக்ஷ அடிக்கடி விசாரணைக்காக சென்று வரும் நிலையில் இருக்கிறார். பசில் ராஜபக்ஷவை அமெரிக்காவில் இருந்து கொண்டு வரும் முயற்சிகள் நடக்கின்றன. இப்படி ராஜபக்ஷவினர் அடுத்தடுத்து சிறையும் விசாரணையுமாக அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இது அவர்களின் கடந்த கால தவறுகளின் விளைவு. அவர்களின் ஆட்சியில் இடம்பெற்ற தவறுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலை வந்திருக்கிறது. அவர்களின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் நிதி முறைகேடுகளுக்கும் பதில் சொல்லுகின்ற சூழல்தான் இப்போது உருவாகி இருக்கிறது.
இதனைக் கடந்து தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் குற்றங்களுக்கும் மீறல்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடும் ராஜபக்ஷவினருக்கு உள்ளது. அந்த பொறுப்புக்கூறலை நிறைவேற்றுகின்ற நிலையில், தற்போதைய அரசாங்கம் இல்லை. அந்த விடயத்தில் அவர்களை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
0 Comments