கறுப்பு அரசும் அனுர அரசும்
கடந்த ஞாயிற்றுக்கிழமை புலத்சிங்கள மற்றும் பேருவளையில், இடம்பெற்ற கூட்டங்களில் உரையாற்றிய போதே, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதனைத் தான் பாதிக்கப்பட்ட தரப்பினராக உள்ள தமிழ் மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். தாமதிக்கப்படும் நீதி அநீதிக்கும் சமம் என்றும், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உடனடியாக நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர்கள் தொடர்ச்சியாக கோரி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை ஜனாதிபதியின் கவனத்துக்கு சென்றிருக்கிறதா என்ற ஐயம் ஏற்படும் அளவுக்கு அவரது உரைகள் அமைந்திருந்தன. ஆனால், ஜனாதிபதியின் இந்தக் கருத்து தமிழ் மக்களுக்கான நீதியை மையப்படுத்தியதாக – அவர்கள் எதிர்பார்க்கின்ற நீதியாக இருக்கவில்லை என்பதுதான் துரதிஷ்டம்.
ஜனாதிபதி தனது உரையில் தனது அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை பட்டியலிட்டிருக்கிறார். எதிர்கால திட்டங்களை கூறியிருக்கிறார். இந்த உரைகளில், ஊழல் ஒழிப்பு பற்றி, ஊழல் மோசடிகளுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் பற்றிப் பேசியிருக்கிறார். ஆனால் எந்த இடத்திலும், கடந்த கால மனித உரிமை மீறல்கள் பற்றியோ, அவற்றுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பற்றியோ குறிப்பிடவில்லை. கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த ‘கறுப்பு அரசு’ பற்றியே ஜனாதிபதி அனுரவின் உரை அமைந்திருந்தது.
கடந்த காலத்தில் இருண்ட ஆட்சி இருந்ததும், அது ஒட்டு மொத்த நாட்டுக்கும் பேரழிவை ஏற்படுத்தியதும் உண்மை. ஆனால் அந்த கறுப்பு அரசை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தது யார்? அதற்கு துணையாக இருந்தது யார்? என்பதை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
இங்கு ‘கறுப்பு அரசு’ என திரும்பத் திரும்ப ஜனாதிபதி அனுர கூறியிருப்பது ராஜபக்ஷவினரின் ஆட்சியைத் தான் என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டு வந்தது இன்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் அடிப்படையான ஜேவிபி தான். இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவும் மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு முக்கிய பங்களித்தனர். மஹிந்தவின் அரசாங்கத்தில் அனுரகுமார திசாநாயக்க, விஜித ஹேரத், லால்காந்த உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் இன்றைய தலைவர்கள் பலர் அமைச்சர்களாகவும் அங்கம் வகித்திருந்தனர்.
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில், தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு ஜேவிபியும், தற்போதைய அரசாங்கத் தலைவர்களும் துணையாக இருந்தனர் என்பதை, அவர்கள் இன்றைக்கும் மறுக்க முடியாது. ஆனால், இப்போது அவர்கள் ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தை ‘கறுப்பு அரசு’ என்று நிறுவ முனைகின்றனர். அந்த கறுப்பு அரசை நிறுவுவதற்குத் துணையாக இருந்து- அதில் அங்கமும் வகித்து விட்டு- இப்போது, அதனை விமர்சிப்பது எந்த வகையில் நியாயமானது?
ராஜபக்ஷவினரை அதிகாரத்திற்கு கொண்டு வந்ததற்காக, அவர்களின் ‘கறுப்பு அரசு’ உருவாவதற்கு பங்களித்ததற்காக, அதில் இடம்பெற்றதற்காக, தற்போதைய அரசாங்கத்தில் உள்ள யாராவது நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறார்களா? இல்லை. அதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை.
அப்போது கறுப்பு அரசில் இருந்து கொண்டு, ‘கறுப்பு அரசு’க்கு முண்டு கொடுத்துக் கொண்டு, அந்தக் கறுப்பு அரசின் செயற்பாடுகளுக்கு தூண்டுதல்களாக இருந்து விட்டு, இப்போது அந்தக் கறுப்பு அரசை அடியோடு அழிப்போம் என்பது, அரசியல் போலித்தனமாகும். இருண்ட ஆட்சி அல்லது ‘கறுப்பு அரசு’ ஒழிக்கப்பட வேண்டும், ஜனநாயகமும், மனித உரிமைகளும், நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், கறுப்பு அரசை விமர்சித்துக் கொண்டே கறுப்பு அரசின் கொள்கைகளை பின்பற்றுவதும் கறுப்பு அரசியல் தான் என்பதை அரசாங்கம் மறந்து விட முடியாது. இப்போது, இனவாதமற்ற ஆட்சியை நடத்துவதாக கூறிக் கொள்வது மட்டும் கறுப்பு அரசியலில் இருந்து விலகுவது அல்ல.
கடந்த கால ‘கறுப்பு அரசு’ எந்தக் குற்றங்களையெல்லாம் இழைத்ததோ, எந்த குற்றங்களுக்கெல்லாம் துணையாக இருந்ததோ, எந்தக் குற்றங்களை இழைத்தவர்களையெல்லாம் கட்டிக் காப்பாற்றியதோ, அவற்றுக்கெல்லாம் நீதியை பெற்றுக் கொடுப்பது தான், முக்கியமானது. வெறுமனே இலஞ்சமும், ஊழலும் மாத்திரம் அந்த கறுப்பு அரசில் கோலோச்சவில்லை. தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், என எண்ணிலடங்காத – மோசமான மீறல்கள் இடம்பெற்றன.
அவற்றுக்கெல்லாம் நீதியைப் பெற்றுக் கொடுப்பது இன்றைய அரசின் பொறுப்பு. சர்வதேச நீதியை நிராகரிக்கும் அரசு அந்தப் பொறுப்பை நிறைவேற்றியாக வேண்டும்.
இந்த மீறல்கள் இடம்பெற்ற காலத்தில் ‘கறுப்பு அரசு’க்கு ஏதோ ஒரு வகையில், துணையாக இருந்த தற்போதைய அரசாங்கம் அந்த மீறல்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க- என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? எதுவும் இல்லை. கடந்த கால மீறல்கள் பற்றி ஜனாதிபதி கூறவோ குறிப்பிடவோ இல்லை.
களுத்துறையில் உள்ள மக்கள் அந்த மீறல்களால் பாதிக்கப்படவில்லை. அதனால் அவர்களுக்கு கூற வேண்டியதில்லை என்பது பொய் வாதம். நாட்டு மக்கள் அனைவரும் சமமானவர்கள் என்றால் அனைத்து மக்களுக்கும் அது கூறப்பட வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கப் போகிறோம் என்பதை தெற்கிலும் கூறக் கூடிய திராணியுள்ள அரசாங்கத்தினால் தான் நீதியை பெற்றுக் கொடுக்க முடியும். மாறாக வடக்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றும் பேசும் அரசாங்கம், ஒருபோதும் நியாயத்தை வழங்காது.
தெற்கிலுள்ள மக்களுக்கு இந்த விடயத்தில் அக்கறை உள்ளது. அவர்களிடம் இதுபற்றிப் பேசப்பட வேண்டும். ஏனென்றால் கறுப்பு அரசின் மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் வடக்கு கிழக்கில் இருந்தாலும், அந்த மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தெற்கிலேயே அதிகம் உள்ளனர். அவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படப் போகிறது என்பதை அரசாங்கம் கூறியாக வேண்டும். ஆனால் ஜனாதிபதியோ அரசாங்கமோ அதனைச் செய்யவில்லை.
கறுப்பு அரசினால் தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள், சட்டத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டவர்களை இந்த அரசும் பாதுகாக்கிறது. ஜெனிவாவில் அரசாங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டு இது.
தண்டனை விலக்கை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச சமூகம் கோருகிறது. அதற்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை. கறுப்பு அரசின் தண்டனை விலக்கு கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இலஞ்சம், ஊழலுக்கு எதிரான பூச்சிய சகிப்புத்தன்மை கொள்கையில் உறுதியாக இருப்பதாக அறிவித்த ஜனாதிபதி, மனித உரிமை மீறல்கள் விடயத்தில் அத்தகைய கொள்கையை உறுதி செய்யவில்லை. கறுப்பு அரசின் குற்றங்களுக்கு நீதியை விரைவுபடுத்துவது வெறுமனே இலஞ்சம் ஊழல்களுக்கு மட்டுப்படுத்தப்படக் கூடாது.
குறைந்தபட்சம் 17 ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்களுக்கான நீதியை விரைவுபடுத்துவதற்கான கொள்கையை அரசாங்கம் உறுதிப்படுத்தாமல், சமத்துவமான, இனவாதமற்ற ஆட்சி பற்றியும் கறுப்பு அரசை ஒழிப்பது பற்றியும் பேசிக் கொண்டிருப்பதில் பலனேதும் இல்லை.
0 Comments