elugai

ஹெய்ட்டிக்குச் செல்லும் இலங்கை இராணுவம்: ஐ.நா.வின் நிபந்தனைகளும் பாதுகாப்புச் செயலாளரின் நியூயோர்க் பயணமும்!

ஐ.நாவுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி

ஐ.நாவுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி

கட்டுரையாளர் - சுபத்ரா

ஹெய்டியில் ஐ.நா நிறுத்தவுள்ள 5,500 பேர் கொண்ட கும்பல் அடக்கும் படையில், இலங்கை இராணுவத்தை இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த கும்பல் அடக்கும் படையில் இடம்பெறுவதற்கு இலங்கை போராட வேண்டிய நிலையில் இருப்பதற்கு, கடந்த காலத்தில் இலங்கை படையினர் மீது சுமத்தப்பட்ட போர்க்குற்றச்சாட்டுகளே காரணம்.

இதனால், இலங்கை அரசாங்கம் உத்தரவாதங்களை அளித்து, ஐ.நாவுடன் சமரசம் செய்து கொள்ளுகின்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா, கடந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபை தலைமையகம் நியூயோர்க் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகம், நியூயோர்க் — இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஐ.நா அதிகாரிகளுடன் ஹெய்டி அமைதிப் பணி தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

ஐ.நா அதிகாரிகளுடனான முக்கிய சந்திப்புகள்

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் அவர் ஐ.நாவுக்கான இலங்கை பிரதிநிதியும், முன்னாள் பிரதம நீதியரசருமான ஜயந்த ஜயசூரியுடன் இணைந்து முக்கிய பேச்சுக்களை நடத்தியிருந்தார். ஐ.நாவின் நடவடிக்கை உதவிகளுக்கான உதவி செயலாளர் நாயகம் அதுல் காரே, சீருடை உதவிப் பணியகத்தின் பணிப்பாளர் மைக்கேல் முலிங்கே கிடிவி, ஐ.நாவின் அரசியல் விவகாரம் மற்றும் அமைதியை கட்டி எழுப்பும் மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்கான திணைக்களத்தில், மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான உதவிச்செயலாளர் நாயகம் காலிட் ஹியாரி, ஐ நாவுக்கான அமெரிக்காவின் தூதுவர் மைக்கேல் ஜி வோல்ட்ஸ் ஆகியோரையும், ஹெய்டி பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் இலங்கை குழுவினர் சந்தித்து பேச்சு நடத்தி இருந்தனர்.

இந்த சந்திப்புகள் அனைத்தும் ஹெய்டியில் இலங்கைப் படையினரை கும்பல் அடக்கும் படையில் இணைத்துக் கொள்வதையே நோக்காக கொண்டிருந்தன.

கடந்த கால மீறல்களும் சவால்களும்

இலங்கைப் படைகள் கடந்த காலங்களில் மீறல்களில் ஈடுபட்டதான குற்றச்சாட்டுகள் காரணமாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமைதிப்படை நடவடிக்கைகளில் இலங்கைப் படையினரை ஈடுபடுத்துவதை குறைத்துக் கொள்ளுமாறு, பரிந்துரைத்திருந்தது. அதனையும் மீறி சில நடவடிக்கைகளில் இலங்கை படையினர் ஐ.நா அமைதிப்படையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். ஆனாலும் இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக விமானப்படையினர் அதிகளவில் ஐ.நா அமைதிப்பணிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

தற்போது இலங்கை இராணுவத்தை ஹெய்டிக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கிறது. இதற்காக, தெரிவு செய்யப்பட்ட இராணுவ அணிகளுக்கு தொகுதி தொகுதியாக, பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஹெய்டியில் தமது படைகளை நிறுத்துவதற்கு இலங்கை விருப்பம் தெரிவித்திருக்கிறது, ஐ.நாவும் அதற்கு தயாராக இருக்கிறது.

ஹெய்டி கும்பல் வன்முறை நிலைமை ஹெய்டி — குற்றக் கும்பல்கள் நாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், ஐ.நா 5,500 பேர் கொண்ட கும்பல் அடக்கும் படையை அனுப்புகிறது.

ஆனால் சர்வதேச தராதரங்களுக்கு அமைய, இலங்கைப் படைகளை நிறுத்துவதற்கு, ஐ.நா எதிர் பார்க்கிறது. அதற்கான உத்தரவாதங்களை பெற்றுக் கொள்வதில் ஐ.நா உறுதியாக இருப்பதால், இலங்கை படையினரை அங்கு அனுப்புவதில் சிக்கல்கள் நீடித்து வருகின்றன. இதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடும் முயற்சியாகவே, பாதுகாப்புச் செயலாளரின் நியூயோர்க் பயணம் அமைந்திருந்தது.

ஆனால், இதுவரையில் அந்த புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை. பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான குழு, ஐ.நா அதிகாரிகளை முழுமையாக திருப்திப்படுத்த தவறிவிட்டதாக தெரிகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஹெய்டியின் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்தித்து, அவர்களை இணங்க வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அதேவேளை, இன்னொரு பக்கத்தில் அமெரிக்காவின் ஆதரவை பெற்று அதனூடாக இந்த வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கும் முயற்சிக்கப்பட்டிருக்கிறது. அதற்காகவே ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவரை பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

முக்கியமான உத்தரவாதம்

இந்த சந்திப்புகளின் போது, இலங்கை அரசின் பிரதிநிதிகளால், ஒரு முக்கியமான உத்தரவாதம் வழங்கப்பட்டிருக்கிறது. தேசிய மனித உரிமைகள் சரி பார்ப்பு பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு, அரசாங்கம் தயாராக இருப்பதாக, அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனூடாக, கடந்த காலங்களில் எந்தவொரு மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடவில்லை என கண்டறியும் படையினரையே, ஐ.நா அமைதிப் பணிக்கு அனுப்புவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது அரசாங்கம்.

ஹெய்டியின் சிக்கலான சூழல்

ஹெய்டியில் ஐ.நா முன்னெடுக்கவுள்ள கும்பல் அடக்கும் படையின் நடவடிக்கை சாதாரணமானதல்ல. அது கிட்டத்தட்ட, ஒரு போர் நடவடிக்கைக்கு சற்று குறைவான ஒரு நடவடிக்கை. படைப்பல பிரயோகத்திற்கான தயார்படுத்தலுடனேயே ஐ.நா படை அங்கு அனுப்பப்படுகிறது. ஏனென்றால், அங்குள்ள சூழல் சிக்கலானது.

ஏராளமான குற்றக் கும்பல்கள் அங்கு அதிகாரம் செலுத்துகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்தி, ஆயுதங்களை களைந்து, சுமுக நிலையை ஏற்படுத்துவதே ஐ.நாவின் நோக்கம். இந்த நடவடிக்கையில் தேடுதல்களை நடத்துவதற்கு, துப்பாக்கி சூடு நடத்துவது தொடக்கம், தேவைப்பட்டால், எறிகணைத் தாக்குதல்களை நடத்துவது வரைக்குமான அதிகாரங்களும் கூட, ஐ.நா படைகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இவ்வாறான சூழலில், இலங்கைப் படையினர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் தொடர்புபடாதவர்களாக இருக்க வேண்டும் என்பதிலும், கடந்த காலங்களில் ஒழுக்க மீறல்களில் தொடர்புபடாதவர்கள் என உறுதிப்படுத்துவதிலும் ஐ.நா கவனம் செலுத்துகிறது.

2007 ஹெய்டி சம்பவமும் விளைவுகளும்

ஏற்கனவே 2007 ஆம் ஆண்டு ஹெய்டியில் நிறுத்தப்பட்ட ஐ.நா அமைதிப்படையில் இருந்த சுமார் 108 பேர் கொண்ட இலங்கை இராணுவத்தின் ஒரு கொம்பெனி அங்கிருந்து திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்பட்டது. சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டிலேயே அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்கள்.

ஐ.நா அமைதிப் படை வீரர்கள் ஐ.நா அமைதிப் படை வீரர்கள் — இலங்கை அமைதிப் பணியில் பங்கேற்பதற்கு கடுமையான மனித உரிமைகள் சரிபார்ப்பு பொறிமுறை தேவைப்படுகிறது.

திருப்பியனுப்பப்பட்ட அவர்கள் மீது, இராணுவத்தினாலோ அரசாங்கத்தினாலோ ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இது இலங்கை இராணுவத்தின் ஒழுக்கத்தை சர்வதேச அளவில் கேள்விக்குட்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் மீள நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த ஐ.நா விரும்புகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன. போரின் போது, போர் நியதிகளை மீறி செயற்படக் கூடியவர்களை, ஐ.நா இந்தப் பணியில் ஈடுபடுத்த தயாராக இல்லை. அதனால், கடந்த காலங்களில் போர் விதிமீறல்களில் ஈடுபட்டவர்களை தவிர்ப்பதற்கான எல்லா ஒழுங்குமுறைகளையும் உருவாக்குவதற்கு ஐ.நா முற்படுகிறது.

போர்க்குற்றச்சாட்டுகளும் ஐ.நா அறிக்கைகளும்

இதனால் தான், இந்த விடயத்தில் ஐ.நா கூடுதல் கவனம் செலுத்துகிறது. இலங்கைப் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அத்தனை அறிக்கைகளிலும் இடம்பெற்றிருக்கின்றன. ஐ.நாவின் விசாரணை அறிக்கைகளும், இலங்கை படையினர் மீது போர்க்குற்றச்சாட்டுகளையும் மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளையும் சுமத்தியிருக்கின்றன.

இவ்வாறான நிலையில் ஐ.நாவின் எந்தவொரு பணிக்கும் இலங்கைப் படையினரை அமர்த்துவதற்கு முன்னர், முறையான பல அடுக்கு மனித உரிமை சரிபார்ப்பு செயல்முறைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் வலியுறுத்தியிருந்தது.

ஆனால் இதனை இலங்கை அரசாங்கம் பெரிதாக கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. குறைந்தளவிலான, ஏனோதானோ என்ற அடிப்படையிலான சரிபார்ப்பு செயல்முறைகளை தன்னளவில் எடுத்துக் கொண்டு, ஐ.நாவுக்கு படையினரை அனுப்ப முற்பட்டது. மாலியில் 200 இலங்கைப் படையினருக்கு தலைமை தாங்கிய லெப்.கேணல் கலன அமுனுபுர 2018ஆம் ஆண்டு ஐ.நா பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

புதிய பொறிமுறையும் எதிர்காலமும்

இவ்வாறான நிலையினால் ஐ.நாவும் தனது பிடியை மேலும் இறுக்க நேரிட்டது. இப்போது, ஹெய்டிக்கு படையினரை அனுப்புகின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இலங்கையை ஐ.நா இன்னமும் தனது இறுக்கமான வளையத்துக்குள் கொண்டு வர முற்படுகிறது. கொழும்பில் உள்ள ஐ.நா வதிவிடப் பிரதிநிதி அலுவலகத்துடன், இணைந்து செயற்படும் வகையில் பொறிமுறைகள் உருவாக்கப்படுகின்றன.

இரண்டு தரப்புகளையும் உள்ளடக்கியதாக, பேச்சுக்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவையும் உள்ளடக்கியதான, மனித உரிமைகள் பதிவு சரிபார்ப்பு பொறிமுறையை உருவாக்குவதற்கு அரசாங்கம் இணங்கியிருக்கிறது. விரைவில் இந்த பொறிமுறை உருவாக்கப்படும் என, பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான குழுவினால், ஐ.நா அதிகாரிகளுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

சர்வதேச அமைதிகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, இவ்வாறான ஒரு பொறிமுறை தவிர்க்க முடியாதது. இதனை கடந்த கால அரசாங்கங்கள் மேற்கொள்ளவில்லை. அதற்கான வாக்குறுதியை கொடுத்த போதும், அதனை உருவாக்கத் தவறியிருந்தன. ஐ.நா பணிகளில் இலங்கைப் படையினரை ஈடுபடுத்துவதற்காக, இப்போதைய அரசாங்கம் வேறு வழியின்றி, இந்த பொறிமுறையை உருவாக்குவதற்கு இணங்கியுள்ளது.

இந்த பொறிமுறை உருவாக்கப்படுவதன் அடிப்படையில் தான், ஹெய்டிக்கு அனுப்புவதற்கான படையினர் தெரிவு செய்யப்படுவார்களா என்று தெரியவில்லை. ஆனால், இந்த விடயத்தில் ஐ.நா மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் செயற்படுவதாக தெரிகிறது. இலங்கையை இந்தக் குழுவில் இணைத்துக் கொள்வதற்கு முன்னர், அது ஒன்றுக்கு பலமுறை யோசிக்கிறது.

அதனால் தான் உடனடியாக கும்பல் அடக்கும் படையில் இலங்கை படைகளை இணைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. வரும் வாரங்களிலோ மாதங்களிலோ இந்த அமைப்பில் இலங்கைப் படையினர் இணைத்துக் கொள்ளப்படலாம். ஆனால் அதற்கு முன்னர், தேசிய மனித உரிமைகள் பதிவுகள் சரிபார்ப்பு பொறிமுறையை அரசாங்கம் உருவாக்க வேண்டியது, தவிர்க்க முடியாததாக இருக்கும்.

Post a Comment

0 Comments