elugai

இழப்பை ஈடு செய்வது யார்? திறைசேரி டொலர் திருட்டு முதல் அஞ்சல் திணைக்கள மோசடி வரை - அநுர அரசாங்கத்திற்கு நெருக்கடி!

இழப்பை ஈடு செய்வது யார்?

இழப்பை ஈடு செய்வது யார்?

கட்டுரையாளர் - என்.கண்ணன்

அவுஸ்ரேலிய கடன் திருப்பிச் செலுத்தும் நடைமுறையின் போது, 25 இலட்சம் டொலர் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான சர்ச்சைகள் நீளுகின்ற நிலையில், அமெரிக்க அஞ்சல் சேவைக்கு அஞ்சல் திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட 625,000 டொலர் காணாமல் போயுள்ளதாக இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்தடுத்து, அரசாங்கத்தின் நிதி காணாமல் போவது இத்துடன் நிற்குமா அல்லது இனிமேலும் வெளிப்படுமா என்று தெரியவில்லை.

நவீன தொடர்பாடல் வசதிகளை பயன்படுத்தி, பணப் பரிமாற்றங்களை செய்வது இன்று சவாலான ஒன்றாக மாறியுள்ளது. இணைய மூலமான நிதி பரிமாற்றங்களில் மோசடி செய்யப்படுவதும் முறைகேடுகள் இடம் பெறுவதும் வழக்கமாகி விட்டது. இத்தகைய மோசடிகள் தொடர்பாக அரசாங்கம் அவ்வப்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்து வந்த போதும், அரசாங்கத்தின் திறைசேரியின் கையாடல் செய்யப்பட்டிருக்கிறது.

இலங்கை நிதியமைச்சு கட்டடம் கொழும்பு இலங்கை நிதியமைச்சு கட்டடம், கொழும்பு — திறைசேரியின் நிதி பரிமாற்றங்களில் பெரும் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது, எவ்வளவு காலமாக இது இடம்பெற்றிருக்கிறது என்ற முழுமையான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. இவற்றை முழுமையாக வெளிப்படுத்துவதற்கும் அரசாங்கம் தயாராக இல்லை. அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பப்பட்ட நிதி திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்று, பல மாதங்களுக்கு பின்னர், ஃப்ரீ லோயர்ஸ் அமைப்பினால் அது வெளிக்கொண்டு வரப்படும் வரையில், அதுபற்றி அரசாங்கம் வாய் திறக்கவேயில்லை.

இந்த விவகாரம் வெளிவந்த பின்னர் தான், முன்னரே எங்களுக்கு தெரியும், குற்றவாளிகளை கண்டுபிடித்து பணத்தை மீட்பதற்காக இரகசியமாக விசாரணைகளை முன்னெடுத்து வந்தோம் என அரசாங்கம் கூறியிருக்கிறது. ஆனால் இப்போதுதான் குற்றப் புலனாய்வுத்துறை மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. நீதிமன்றத்திற்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால், பல மாதங்களாக விசாரணை நடத்தப்படுகிறது என கூறப்படுவதை, எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விவகாரம் தீவிரமடைந்த சூழலில் தான், அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட பணம் அங்கு சென்று சேரவில்லை என்ற தகவலை அரசாங்கமாகவே வெளிப்படுத்தி இருக்கிறது. இன்னும் இதுபோல வேறு கையாடல்கள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகங்களை இது ஏற்படுத்தியிருக்கிறது. இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள முக்கியமான நெருக்கடி.

அரசியல் நியமனங்களும் முறைகேடுகளும்

அரசியல்வாதியாக பிரதி நிதி அமைச்சராக இருந்த ஹர்ஷன சூரியபெருமவை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், திறைசேரி செயலாளராக – நிதியமைச்சின் செயலாளராக நியமித்தது. இது ஒரு அரசியல் நியமனம். நிதியமைச்சில், இவ்வாறான அரசியல் நியமனங்களின் போது, முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதை கடந்த கால அனுபவங்கள் காட்டியிருந்தன.

நிதி விவகாரங்களில் போதிய அனுபவமற்றவர்கள் திறைசேரி செயலாளராக நியமிக்கப்படும் போது, அங்கு இடம்பெறக் கூடிய முறைகேடுகளை கையாளக் கூடிய திறன் அவர்களுக்கு இருக்காது. இதனால்தான், கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு வெளியே இருந்து அனுபவமற்றவர்களை நியமிக்க ஜனாதிபதி முற்பட்டபோது, அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இலங்கை மத்திய வங்கி கட்டடம் கொழும்பு இலங்கை மத்திய வங்கி, கொழும்பு — 2016 பிணைமுறை மோசடியில் பில்லியன் கணக்கான ரூபா இழப்பு ஏற்பட்டது.

திறைசேரி செயலாளராக ஹர்ஷன சூர்யப்பெரும நியமிக்கப்பட்ட போதே அதற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன, அதனை அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை. அரசாங்கத்தின் தீர்மானத்தை மாற்றக் கூடிய அதிகாரம் வேறு யாருக்கும் இருக்கவுமில்லை. இப்போது தவறுகள் அடுத்தடுத்து நிகழ்ந்திருக்கின்றன. நிகழத் தொடங்கியிருக்கின்றன.

இதனால் வரும் நாட்களில் துறைசேரிச் செயலாளர் இன்னும் நெருக்கடிகளை எதிர்கொள்ளுவார். அவர் பதவி விலகும் நிலை கூட ஏற்படலாம். ஏனென்றால் இந்த மோசடிகளால் ஏற்பட்டுள்ள இழப்புகள், சாதாரணமான தொகை அல்ல.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், பல தவறான கொடுக்கல் வாங்கல்கள் அல்லது ஊழல்களில் பெருமளவு பணத்தை இழந்திருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ரணில் விக்கிரமசிங்க தனது நண்பரான அர்ஜுன மகேந்திரனை, மத்திய வங்கி ஆளுநராக நியமித்திருந்தார். இதன் விளைவாக மத்திய வங்கி பிணைமுறை விற்பனையில் மோசடி இடம் பெற்றது.

அதனால் ஏற்பட்ட உடனடி இழப்பு கிட்டத்தட்ட 11 மில்லியன் டொலர்கள் அல்லது, 3.14 பில்லியன் ரூபாவாகும். 10 ஆண்டுகளாகியும் இந்த மோசடிகள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை, இதனுடன் தொடர்பு பட்ட அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியினாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இழப்புகளை மீட்பது சாத்தியமா?

இவ்வாறான நிலையில் நாட்டுக்கு ஏற்பட்ட இந்த இழப்பை எப்படி ஈடு செய்வது? இழக்கப்பட்ட நிதியை மீளப் பெற்றுக் கொள்ள முடியுமா என்பது சந்தேகம். இழக்கப்பட்டது, இழக்கப்பட்டது தான், இவ்வாறான மோசடிகளின் போது, நாட்டுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் எந்த வகையிலும் ஈடு செய்யப்படுவதில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இதனை கூறியிருக்கிறார்.

அண்மையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் அரசாங்கத்துக்கு பெருமளவு இழப்புக்கள் ஏற்பட்டிருந்தன. தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட இழப்பு ஒரு பக்கம் இருக்க, அதனால் ஏற்பட்ட மின்சார உற்பத்தி இழப்பு, அதனை ஈடு செய்வதற்காக எரிபொருளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு ஏற்பட்ட செலவுகள் என, இன்னமும் முழுமையாக கணிக்கப்படாத பெருந்தொகையான இழப்பை நாடு எதிர் கொண்டுள்ளது.

இதுபற்றி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்த இழப்புக்கள் மக்களின் தலையில் கட்டப்படாது எனக் கூறியிருந்தார். அரசாங்கமே அதனை ஈடு செய்யும் என தெரிவித்திருந்தார். பிறதரப்பினர் ஆதாயம் பெற்ற ஒரு இழப்பை அரசாங்கம் பொறுப்பேற்கிறது என்றால், அரசாங்கத்திற்கான நிதி எங்கிருந்து கிடைக்கிறது?

அது மக்களிடம் பெறப்படுகின்ற வரிப்பணங்களின் ஊடாகவே திரட்டப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் மக்களின் தலையில் கட்டப்படுகிறது. இந்த அடிப்படை உண்மையை மறைத்து ஜனாதிபதி அந்தக் கருத்தை கூறியிருந்தார். மோசடிகள், முறைகேடுகள், ஊழல்களின் மூலம் திருடப்பட்ட பணம் மீளக் கிடைப்பது என்பது அரிது. அதுவும் நாடு கடந்த ரீதியாக முன்னெடுக்கப்படும் இவ்வாறான குற்றச்செயல்களில் இழக்கப்பட்ட தொகையை மீளப் பெறுவது மிக மிக கடினமானது, அதற்கான வாய்ப்புகள் குறைவு.

இலங்கை நாடாளுமன்றம் கொழும்பு இலங்கை நாடாளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே — அரசாங்க நிதி மோசடிகள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறுகின்றன.

2016 ஆம் ஆண்டு பங்களாதேஷ் மத்திய வங்கியில் பணப் பரிமாற்றத்தின் போது திருடப்பட்ட ஒரு பகுதி பணம், இலங்கையில் உள்ள கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. திருடப்பட்ட அந்த நிதியை இலங்கை அரசாங்கம் பங்களாதேஷிற்கு திருப்பிச் செலுத்தியது. அது அந்த நாட்டுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பப்பட்ட பணம் யாரால் திருடப்பட்டது என்பதே இன்னமும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது. இதற்கு உள்ளக ஆதரவு இருந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் இருக்கின்றன. அதன் அடிப்படையில் கவனயீனமாக செயற்பட்ட அதிகாரிகள் எனச் சிலர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருக்கிறார்கள். வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறான நிலையில், இன்னமும் இதற்கு காரணம் யார், அந்தப் பணம் எங்கு சென்றது என்ற கண்டுபிடிக்க முடியாத சூழலில், அவர்களிடம் இருந்து அதனை மீளப் பெறுவது சாத்தியமா என்பது சந்தேகம். அப்படி மீறப் பெறப்படாவிட்டால், அதற்குப் பொறுப்பான அதிகாரிகளிடமே அதனை வசூலிப்போம் என அமைச்சர் ருவன் ரணசிங்க கூறியிருக்கிறார். இது எந்தளவுக்குச் சாத்தியம் எனத் தெரியவில்லை.

அந்த நிதி அந்த இழப்பு யாராலும் ஈடு செய்யப்பட முடியாமல் போனால், அதை அரசாங்கமே ஈடு செய்தாக வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலும் இதே போன்ற ஒரு சம்பவம் இடம்பெற்றது. அப்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை உரம் தரமற்றது என உறுதி செய்யப்பட்டதை அடுத்து, திருப்பி அனுப்பப்பட்டது.

ஆனால் சீன அரசாங்கமும் சீன நிறுவனமும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்து, உரத்துக்கான 6 மில்லியன் டொலர்களை வசூலித்திருந்தன. அந்த கொடுப்பனவு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. அரசாங்க நிதியில் இருந்தே அது செலுத்தப்பட்டது. நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருந்த சூழலில் – ஒரு டொலர் 400 ரூபாவை எட்டியிருந்த நிலையில், 6 இலட்சம் டொலரை சீன நிறுவனம் பறித்துக் கொண்டது.

மக்களின் தலையில் கட்டப்படும் பாரம்

இவ்வாறான சூழலில், தற்போது திருடப்பட்ட பெருந்தொகை பணத்தை எவ்வாறு அரசாங்கம் மீளப் பெறப் போகிறது என்ற கேள்வி எழுகிறது. அதனை மீளப்பெற முடியாவிட்டால், இந்த இழப்பை அரசாங்கம் ஈடு செய்கின்றபோது, நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அதற்கான விலையை செலுத்தியாக வேண்டியிருக்கும். அவர்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும், இந்த இழப்பிற்கான விலையையும் சேர்த்தே கொடுக்க வேண்டியிருந்திருக்கும்.

அரசாங்கம் இந்த விடயத்தில் பொறுப்பின்றிச் செயற்பட முடியாது. நாட்டை திறம்பட நிர்வகிப்பதாக ஊழல், மோசடிகள் இல்லாமல் ஒரு ஆட்சியை நடத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தே அவர்களின் ஆணையைப் பெற்றது இந்த அரசாங்கம் என்பதை மறந்து விடக்கூடாது.

அவ்வாறான ஆணை பெற்ற ஒரு அரசாங்கம் இத்தகைய இழப்புக்களுக்கு தாம் பொறுப்பில்லை என்றோ, அரசாங்க அதிகாரிகள் தான் பொறுப்பு என்றோ கைகாட்டி விட்டுப் போகவும் முடியாது. பொறுப்பு வாய்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவதற்கும் தண்டிக்கப்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டே ஆக வேண்டும்.

Post a Comment

0 Comments