தமிழ்நாட்டு ஜனநாயகம்: மக்களைப் புனிதர்களாக்கும் அபத்தமான மாயை
தமிழ்நாடு சர்க்கஸ் ஆகிறது: மக்கள் புனிதர்கள் அல்லர்
தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான பிறகு, "மக்களின் ஜனநாயகத் தீர்ப்பு" என்ற உயர்ந்த வார்த்தைகளால் நிரம்பிய கட்டுரைகளும், சமூக ஊடகப் பதிவுகளும் தமிழ்நாட்டிலிருந்தும் ஈழத்திலிருந்தும் புலம்பெயர்ந்த தேசங்களில் இருந்தும் வலம் வருகின்றன. மக்களை ஒரு புனித சக்தியாக உயர்த்திப் பேசும் இந்தப் பார்வை, ஜனநாயகத்தின் அடிப்படை உண்மையை மறைக்கிறது.
தேர்தல் முடிவுகள் வெளியானதும் "75 ஆண்டுகால திராவிட ஆட்சியின் மீதான சலிப்பு", "மக்களின் ஜனநாயகப் புரட்சி", "புனித மக்களின் தீர்ப்பு" என்ற பல்லவியைப் பாட ஆரம்பித்துவிட்டனர். இந்தப் பொய்யான புனித மாயையை இனியாவது கிழித்தெறிய வேண்டும்.
தமிழ்நாட்டுச் சட்டமன்றம் — 2026 தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளன
ஜனநாயகம் உயர்ந்த கோட்பாடு என்பது உண்மை. ஆனால் "மக்கள் எப்போதும் சரியான முடிவெடுப்பார்கள்" என்ற குழந்தைத்தனமான பொய்யை நம்புவது முட்டாள்தனம். ஜனநாயகம் உயர்ந்த கோட்பாடு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதன் உள்ளார்ந்த பலவீனங்களை — குறிப்பாக மக்களின் வாக்கு எப்படி உணர்ச்சி, நாடகம், நெட்வொர்க் மற்றும் "manufacturing consent" ஆகியவற்றால் வடிவமைக்கப்படுகிறது என்பதை — தொடர்ந்து பேசாமல் இருப்பது, உண்மையான விவாதத்தைத் தடுக்கிறது.
சினிமா போதையும், அரசியல் மலட்டுத்தன்மையும்
தமிழ்நாட்டு மக்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு (தவெக) 107 இடங்களை வழங்கியது வரலாற்றுச் சிறப்பு. ஆனால் இந்த வெற்றிக்கான காரணங்களை நேர்மையாகப் பரிசோதிக்க வேண்டும். தவெகவின் எந்தக் கொள்கையை, எந்தப் பொருளாதாரப் பார்வையை, எந்த அரசியல் திட்டத்தை ஆராய்ந்து மக்கள் வாக்களித்தார்கள்?
தமிழ்நாட்டு வாக்காளர்கள் — கொள்கைகளா, சினிமா போதையா?
75 ஆண்டு திராவிட ஆட்சி — எதுவும் செய்யவில்லையா?
"திமுக-அண்ணாதிமுக எதுவும் செய்யவில்லை" என்று சொல்வது முழுப் பொய். இது வெறும் உணர்ச்சிவசப்பட்ட பிரசாரம். உண்மைகளைப் பார்ப்போம். கடந்த 5 ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்த சில முக்கிய மக்கள் நலத் திட்டங்கள்:
◉ கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் — ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ₹1,000
◉ பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் — தினசரி இலட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்தனர்
◉ முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் — அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள இலவச காலை உணவு
◉ நான் முதல்வன், புதுமைப் பெண் உள்ளிட்ட இளைஞர் மற்றும் பெண் மேம்பாட்டுத் திட்டங்கள்
இவை வெறும் அறிவிப்புகள் அல்ல — நடைமுறையில் செயல்பட்ட திட்டங்கள். ஸ்டாலின் அரசின் நிர்வாகம், பண்பு, நல்லாட்சி ஆகியவை அனைத்தும் பொய் என்று சொல்ல முடியாது. பல திட்டங்கள் உண்மையிலேயே ஏழை, நடுத்தர மக்களைச் சென்றடைந்தன. பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு, பெண்களுக்கு நிதி உதவி, போக்குவரத்து வசதி — இவையெல்லாம் அன்றாட வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தின.
அப்படியிருந்தும் மக்கள் திமுகவை முற்றிலும் புறக்கணித்தார்கள் என்றால், உண்மையான காரணம் என்ன? "75 ஆண்டுகால சலிப்பு" என்று சொல்வது வசதியான பதில். ஆனால் உண்மை வேறு — சினிமா போதை, நட்சத்திர மோகம், "புதிய முகம்" என்ற கனவு. இதுதான் யதார்த்தம்.
விஜய்யை "புனிதர்" ஆக்கும் ரசிகர்கள்
இப்போது விஜய்யின் பக்கம் திரும்புவோம். அவரது அரசியல் தகுதியை மதிப்பிடுவோம். விஜய்யின் எந்தக் கொள்கை? எந்தப் பொருளாதாரத் திட்டம்? எந்த அரசியல் தரிசனம்? எந்த விரிவான பேட்டி? எதுவுமில்லை. முழுமையான பூஜ்ஜியம்.
அவரது அரசியல் அறிவை அறிய வேண்டுமானால் அவரது சினிமா படங்களைப் பார்க்கச் சொல்கிறார்கள். "மெர்சல்", "சர்கார்", "பீஸ்ட்" — இவற்றில் பேசப்பட்ட டயலாக்குகளே அவரது அரசியல் தரிசனமாம். இது எந்த விதத்தில் தீவிர அரசியல் புரிதல்? ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டர் எழுதிய வசனங்களை மனப்பாடம் செய்து பேசுவதா அரசியல்?
இப்படிப்பட்ட ஒரு நபரை "மாற்றத்தின் முகம்" என்று உயர்த்திப் பேசும் ரசிகர்கள், அவரை புனிதராகக் காட்ட முயல்கிறார்கள். "தளபதி வந்தாச்சு, எல்லாம் சரியாகிடும்" என்ற மந்திரம் ஜெபிக்கிறார்கள். இது வெறும் ரசிகர் மனநிலை. உணர்ச்சி அலை. "மாற்றம்" என்ற வெற்றுக் கோஷம். அவ்வளவுதான்.
கேள்வி என்னவென்றால்: இத்தகைய ஒரு நபருக்கு எப்படி மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாக்களித்தார்கள்? தகுதி, அனுபவம், அரசியல் புரிதல், நிர்வாகத் திறன் — எதையும் கணக்கில் எடுக்காமல், வெறும் முக அழகையும் திரைப்பட புகழையும் வைத்து எப்படி ஒரு மாநிலத்தின் எதிர்காலத்தை முடிவு செய்கிறார்கள்?
தமிழ்நாட்டு அரசியல் — சினிமா போதையின் விளைவுகள்
சீமானும் விஜய்யும் — கொடூர ஒப்பீடு
இங்கே ஒரு முக்கியமான ஒப்பீடு தேவை. நாம் தமிழர் கட்சியின் மீதும் சீமானின் மீதும் பல விமர்சனங்கள் உண்டு. அவரது பொருளாதாரப் பார்வை சிலவற்றில் குழப்பமானது. உட்கட்சி ஜனநாயகம் குறித்த கேள்விகள் உள்ளன. சில தனிப்பட்ட முடிவுகள் விவாதத்துக்குரியவை. நாமே சீமானின் மீது பல விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துள்ளோம். அவர் பெரியாரை எதிர்த்ததும், பார்பணியக் கடப்பாரையை கையிலெடுத்ததும் கடுமையான விமர்சனத்துக்குரியவை.
ஆனால், அதே நேரத்தில் ஒன்றை நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டும்: சீமானுக்கு ஒரு தெளிவான அரசியல் பார்வை உண்டு. அவர் வாசித்தவை உண்டு. சிந்தித்தவை உண்டு. பல ஆண்டுகளாக உருவாக்கிய ஒரு அரசியல் தரிசனம் உண்டு. தமிழ் தேசியம், மொழி உரிமை, சுயநிர்ணய உரிமை — இவை குறித்து அவருக்கு நிலையான கருத்துகள் உள்ளன. அதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அதை மதிப்பதற்கு இடமுண்டு. அவருக்கு ஒரு ideology இருக்கிறது.
விஜய்யிடம் அப்படி எதுவும் இல்லை. முற்றிலும் பூஜ்ஜியம். கொள்கை இல்லை, தரிசனம் இல்லை, அரசியல் வாசிப்பு இல்லை. வெறும் நட்சத்திர ஒளி மட்டுமே.
15 ஆண்டு உழைப்பை வஞ்சித்தல்
இங்கே மற்றொரு அநீதியும் நடந்திருக்கிறது. 15 ஆண்டுகளாக ஈழத் தமிழருக்காகவும், தமிழ்த் தேசியத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்த நாம் தமிழர் கட்சியையும் சீமானையும் இப்படி முற்றிலும் புறக்கணிப்பது நியாயமா? தெருவில் நின்று கூட்டம் திரட்டினார், சிறையில் அடைக்கப்பட்டார், இயக்கம் கட்டமைத்தார். அவரது அரசியல் பயணத்தில் நிலைத்தன்மை உண்டு.
அதே நேரத்தில், நேற்று வரை சினிமாவில் மட்டுமே இருந்தவர், எந்த அரசியல் உழைப்பும் இல்லாதவர், ஒரே இரவில் "மாற்றத்தின் தலைவர்" ஆகிவிடுகிறார். இந்த வேறுபாட்டை மக்கள் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் தமிழ்நாட்டு அரசியலின் ஆழமான சோகம். இதுதான் தமிழ்நாட்டு அரசியலின் மிகப்பெரிய அவமானம்.
தமிழ்நாட்டு அரசியல் — கொள்கைகளா, முக அழகா?
ஜனநாயகத்தின் அழுகிய முகம்
பெருந்திரள் மக்களின் வாக்கு பெரும்பாலும் உணர்ச்சிக் குப்பையால் நிரம்பியது. நடிகர் முக அழகு, சமூக ஊடக நாடகம், எதிர்க்கட்சி வெறி — இவைதான் ஆட்சி செய்கின்றன. கொள்கை, தகுதி, அறிவு எங்கேயும் இல்லை.
ஜனநாயகத்தின் இருண்ட பக்கம்
மீண்டும் மீண்டும் "மக்களின் தீர்ப்பு" என்று சொல்வது எளிது. ஆனால் மக்களைப் புனிதர்களாகப் பாவிப்பது ஆபத்தான மாயை. பெருந்திரள் மக்களின் வாக்கு பெரும்பாலும்: உணர்ச்சி அலைகளால், சமூக ஊடக நெட்வொர்க்குகளால், நடிகர் முகத்தால், எதிர்மறை உணர்வுகளால் (anti-incumbency) வழிநடத்தப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்வது அவமானம் இல்லை; இது மனித இயல்பு. ஜனநாயகத்தின் பெரும் பலவீனமும் இதுதான்.
இனியாவது விழித்தெழுங்கள்
தமிழ்நாட்டு மக்களின் அரசியல் மலட்டுத்தன்மை இப்போது உச்சத்தில் உள்ளது. ஒரு சினிமா நடிகனின் முகத்தைப் பார்த்து, அவனது பட டயலாக்குகளை நம்பி, முழு மாநிலத்தின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் தாழ்ந்துபோய் விட்டார்கள்.
"75 ஆண்டு சலிப்பு", "மக்கள் புனிதர்கள்" என்ற பொய்களை இனியாவது நிறுத்துங்கள். ஜனநாயகத்தைப் புகழ்வதற்கு முன் அதன் அழுகிய ஓட்டைகளைப் பாருங்கள். மக்களைப் புனிதர்களாக்காமல், அவர்களின் முட்டாள்தனத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளுங்கள். அப்போதாவது கொள்கை அடிப்படையிலான அரசியல் வளரும். இல்லையென்றால், இந்த சர்க்கஸ் தொடரும்.
தமிழ்நாட்டின் எதிர்காலம் — கொள்கை அடிப்படையிலான அரசியலா, சர்க்கஸா?

0 Comments