elugai

யார் இந்த சிவா திலீபன்? - திருமுருகன் காந்தியின் பார்வையில் ஒரு போர்க்களத் தோழனின் வரலாறு!

யார் இந்த சிவா திலீபன்? — திருமுருகன் காந்தி வார்த்தைகளில்

யார் இந்த சிவா திலீபன்? அவரது அரசியல் ஆழம் பற்றி தெரிந்துகொள்ள இதோ மே17 இயக்க தலைமை திருமுருகன் காந்தி வார்த்தைகளில்...

✍️ திருமுருகன் காந்தி | மே17 இயக்க தலைமை சிவா திலீபன் மே17 இயக்கம் மார்ச் 2026 சிவா திலீபன் — மே17 இயக்கத்தின் அர்ப்பணிப்புமிக்க தோழர். "உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு" என்று சொல்லி சென்றவர். (படம்: DT Next)

இன்றிலிருந்து சரியாக 13 ஆண்டுகளுக்கு முன் அவரைச் சந்தித்தேன். அதற்கும் முன் அவரை நான் பார்த்திருக்கலாம், ஆனால் கவனித்திருக்கவில்லை.

2013ம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் எதிரில் இங்கிலாந்து தூதரகத்திற்கு அருகே எங்களை திரளவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது காவல்துறை. காமன்வெல்த் மாநாட்டில் இலங்கை நாட்டை அனுமதிக்கக் கூடாதென போராட்டம். அதிக கூட்டமில்லை. அச்சமயத்தில் இங்கிலாந்துக்கு எதிரான முழக்க பேனரை பிடித்துக்கொண்டு நின்றிருந்தார். ரோஸ் கலர் சட்டையை 'இன்' செய்து, கருப்பு ஷூவுடன் வேலைக்கு சென்றுகொண்டிருந்தவர் பையோடும், பைக்கோடும் போராட்டத்தில் வந்து நின்றுவிட்டார். கைது செய்துகொண்டு சென்று சேர்த்த மண்டபத்தில் பேசினேன். ஒருவித கூச்ச உணர்வுடன் கூடிய புன்னகை அது. நண்பர் வழியாக போராட்டத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

"காமன்வெல்த் என்றால் என்ன, அங்கு நடக்கும் மாநாடு என்ன, இதற்கும் இலங்கைக்குமான தொடர்பென்ன, ஏன் இங்கிலாந்து தூதரகத்தை முற்றுகையிட்டோம்.." என தெரியுமா கேட்டபோதில், "..என்னான்னு தெரியாம எப்படி இங்க வந்திருப்பேன்.." என்றார். ஈழ அரசியலையும், உலக அரசியலையும் அறிந்த சிலர் இவற்றின் தொடர்புகளைப் பற்றி முழுமையாக அறியாமல் இருந்ததை பார்த்திருக்கிறேன். ஏன் இங்கிலாந்தை, காமன்வெல்த்தை எதிர்க்கிறீர்கள் என கேட்டவர்கள் அப்போது உண்டு. இலங்கை குற்றத்தோடு இங்கிலாந்து, இந்தியாவின் தொடர்புகளை, காமன்வெல்த்தை குறித்து மக்கள் மொழியில் சுருக்கமாக விளக்கிவிட்டு நகர்ந்தார். அவரது சிரிப்பு மறக்க இயலாதது. அதில் கூச்சத்துடன், தன்னடக்கம், அன்பு ஆகியவற்றைக் காணமுடியும். எச்சமயத்திலும் இதைத்தவிர வேறெதுவும் காண இயலாது.

கொடியை எரித்தவர் — "வரட்டுமே.."

இதற்கு அடுத்தகட்ட போராட்டம், அதே இடத்தில், அடுத்த மாதமே நடந்தது. எடுத்த கோரிக்கையை முன்னகர்த்தும் வகையில் தொடர் போராட்ட வழக்கம் மே17 இயக்கத்தினுடையது. அவ்வகையில் அடுத்த மாதமே காமன்வெல்த் மாநாடு குறித்து முற்றுகை போராட்டம். இம்முறை சற்று வேறுபட்டு நடந்தது. அவர் வந்திருந்தார். "..கடந்த மாதம் தானே போராட்டம் நடத்தினீர்கள், அதற்குள்ளாக மீண்டும் இதை ஏன் செய்கிறீர்கள்.." என கேட்பார் என நினைத்தேன். அப்படி எந்த கேள்வியும் அவரிடமிருந்து வரவில்லை. ஆனால், அவர் கையில் காமன்வெல்த் கொடி இருந்தது. நண்பனோடு சேர்ந்து அக்கொடியை எரித்தார்.

"..கொடியை எரிச்சிட்டீங்களே, வழக்கு வருமே தோழர்.." என ஒருவர் கேட்டார். "வரட்டுமே.. இதைக்கூட செய்யலைன்னா" என சொல்லி சிரித்துவிட்டு சென்றுவிட்டார்.

இது நடந்தது 2013-ல். அதற்கு அடுத்த இரு ஆண்டில் ஐ.நா தீர்மானத்தில் காமன்வெல்த் நாடுகளைக்கொண்டு பன்னாட்டு விசாரணை என பித்தலாட்ட தீர்மானத் திருத்தம் வந்தது. ஏன் காமன்வெல்த் அமைப்பை அம்பலப்படுத்த வேண்டுமென கேட்டவருக்கு அவர் பதில் கொடுத்துக்கொண்டிருந்தார்.

அவர் அப்போது சிவா எனும் சிவக்குமார். தற்போது அவர் சிவா எனும் சிவா திலீபன்.

மே17 இயக்கம் சென்னை பார்க் நிலையம் இந்தி எழுத்து அழிப்பு மார்ச் 11 2026 திருமுருகன் காந்தி தலைமையில் மே17 இயக்க தோழர்கள் சென்னை பார்க் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்தனர் — மார்ச் 11, 2026. (படம்: The Wire / By arrangement)

பெரியார் வழியில் — விபூதி துடைத்தவர்

2013ம் ஆண்டில் நிறைய நிகழ்வுகள். அனைத்திலும் முன்னணியில் சிவா நின்றுகொண்டிருப்பார். நெற்றியில் விபூதியும், குங்குமப் பொட்டும் இல்லாமல் அவரை அப்போதெல்லாம் பார்க்க இயலாது. இருந்தாலும் எனக்கு 'பெரியார் வழி' என்பார். "...கடவுள் கும்பிடுவதை, விபூதி வைப்பதை அனுமதிப்பீர்களா.." என ஒருமுறை கேட்ட நினைவு. நீங்களாக புரிந்து ஏற்றுக்கொள்ளும் வரை எதையும் கட்டாயப்படுத்துவதில்லை என்றேன்.

சீமானும் அவர் கூட்டத்தினரும் பெரியாரை இழிவு செய்ய ஆரம்பித்தபோது பெரியாருக்கு தொடர் கூட்டங்கள் நடத்த ஆரம்பித்தோம். அச்சமயத்தில் அவரிடம் இந்த பக்திப்பழக்கம் மறைந்தது. விபூதி குங்குமத்தோடு பெரியார் சிலைக்கு மாலை போட வருவார். "பெரியார் கோபிச்சிக்க மாட்டார் தோழர்" என சொல்லிவிட்டு அதே வெட்கம் நிறைந்த புன்னகை அவரிடமிருந்து வெளிப்படும். ஆனால் மிகத் தீவிரமாக பெரியார் எதிர்ப்பை சங்கிகளும், தம்பிகளும் நடத்திய சமயத்தில் முற்றாக விபூதி-குங்குமத்தை துடைத்தெறிந்துவிட்டார். "..எதையும் சரியா செய்யணும், முழுமையா செய்யணும் தோழர்.." என்றார்.

விபூதியை ஏன் துடைத்தார் என நான் கேட்டதில்லை, அவரும் சொன்னதில்லை. அதிகம் பேசக்கூடியவரல்ல. சிரித்தபடியே கவனித்துக்கொண்டிருப்பவர். ஆழமானவர். அன்பானவர். வீட்டுக்கு அழைத்து உணவு சமைத்து சாப்பிட வைத்துப் பார்க்க வேண்டும் என்பது அவரது கட்டாய வழக்கங்களில் ஒன்று. அவர் வீட்டு உணவை சாப்பிடாதவர்கள் என யாருமிருக்க மாட்டார்கள்.

போராட்டங்களில் முன்னணி — மேடையில் பின்வரிசை

அவரது காமன்வெல்த் நிகழ்ச்சிக்கு பின், மீத்தேன் பரப்புரை, அமெரிக்க தூதரக முற்றுகை, ஐ.நா அலுவலக முற்றுகை, மோடிக்கு கருப்பு கொடி என அனைத்திலும் அவர்தான் முன்னணியில் நிற்பார். நினைவேந்தல் நிகழ்வில் அவர் கூடுதல் உற்சாகத்தோடு இயங்குவார். கடினமான பணிகளை எடுத்துக்கொண்டு, எளிய பணிகளை நமக்களிப்பார். ஒவ்வொரு போராட்டத்தின் அரசியலையும் மக்கள் மொழியில் சொல்லி புரியவைத்துவிடுவார். அவரைவிட எளிதாக நம்மால் ஒரு கடினமான அரசியலை சொல்ல வராது.

ஆயினும் மேடை ஏறமாட்டார். யார் மூலமாகவாவது வாசித்தறிந்துவிடுவார் அல்லது விவரங்களை கேட்டறிந்துகொள்வார். ".. இதனாலதான தோழர் நடந்தது" என நம்மிடம் விளக்கம் கேட்டு உறுதி செய்துகொள்வார். ஏன், எதற்கு என புரிந்துகொள்ளும் வழக்கம் அவருக்குண்டு.

".. இன்றைய போராட்டத்திற்கு கைது இருக்குமா இருக்காதா என சொல்லிவிடுங்கள் அதற்கேற்ப விடுப்பு எடுப்பதா இல்லையா என முடிவு செய்துகொள்வேன்.." என சொல்வார், முதல் நபராக களத்தில் நிற்பார். முன்னணியில் முழக்கமிடுவார். போராட்டங்களுக்கு முன் வரிசையிலும், பொதுக் கூட்டங்களுக்கு பின் வரிசையிலும் நிற்பவர் அவர்.

2014ம் ஆண்டில் பாலஸ்தீனத்தின் மீதான இனப்படுகொலை தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. இதைக் கண்டித்த போராட்டத்தில் "இந்திய அரசே, இஸ்ரேல் தூதரகத்தை மூடு" எனும் முழக்க அட்டையை தேடி எடுத்து கையில் பிடித்திடுப்பார். "...இஸ்ரேலை எதிர்த்தா சின்ன வழக்கா போடுவான்?... தோழர்" எனச் சொல்வார்.
திருமுருகன் காந்தி மே17 இயக்கம் போராட்டம் சென்னை மே17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தோழர்களுடன் — சிவா திலீபன் போன்றவர்கள் "போராட்டங்களுக்கு முன் வரிசையிலும், பொதுக் கூட்டங்களுக்கு பின் வரிசையிலும்" நிற்பவர்கள். (படம்: மே17 இயக்கம்)

சிறையில் — வீட்டையும் குழந்தைகளையும் கவலைப்படாமல்

2015ம் ஆண்டில் சென்னையில் முதல் பொதுக்கூட்டத்தை நடத்தினோம். அது வில்லிவாக்கத்தில், மொழிப்போர் ஈகியர், முத்துக்குமார் நினைவு நாளாக நடந்தது. அதை முன்னின்று நடத்தியவர் சிவா திலீபன். மே17 இயக்கத்திற்கு சென்னையில் முதல் பொதுக்கூட்டம். அதை ஒழுங்கமைத்து சிறப்பாக நடத்தியவர் சிவா. அக்கூட்டத்தில் கவிஞர் இன்குலாப், முத்துக்குமாரின் தந்தை, கி.த.பச்சையப்பனார் ஆகியோர் பங்கெடுத்த நிகழ்வு. அன்றிலிருந்து மொழிப்போர் ஈகியர் நாளில் வீரவணக்கம் செலுத்த முதல் ஆளாக சிவா திலீபன் நிற்பார்.

ஈழத்தின் மீதும், தமிழின் மீதும் அவருக்கு தனிப்பற்று எப்போதும் உண்டு. "..நம் மொழி தழைத்தோங்க நமக்கென நாடு வேண்டும்.." என்பார். ஈழமும், தமிழும் அவருக்கு தலைமை. மேதகுவும், அண்ணலும், பெரியாரும் அவருக்கு தலைவர்கள். இவர்கள் சொன்னதை அச்சுப்பிசகாமல் நடக்க முயற்சிக்க வேண்டுமென எண்ணுபவர். ஏற்றுக்கொண்ட விஷயத்தை கராராகக் கடைபிடிக்க வேண்டுமென சொல்வார்.

2015ம் ஆண்டில் நடந்த சென்னை பெருவெள்ளத்தில் வில்லிவாக்கம் சத்யா நகரில் அவர் பெரும் உழைப்பை கொடுத்தார். மே17 இயக்கத் தோழர்களை களத்திற்கு அழைத்துச் சென்று முழுமையான நிவாரணப்பணியை செய்தவர். வில்லிவாக்கத்திற்குள் அவர் கால்கள் படாத தெருக்கள் இல்லை எனலாம். அதேபோல அனைத்து கட்சியினரும் அவரை மரியாதையுடன் அழைப்பது வாடிக்கை.

சிறையில் அவரோடு பேசிய சில உரையாடல்கள் ஆழமானவை. முதன்முறையாக பேசுவதற்கு அதிக நேரம் எங்களுக்கு கிடைத்தது. 'வேலை போய்விடும், குழந்தைகள், கீதாவை காணாமல் எப்படி இருப்பது, எத்தனை நாள் இப்படியே கடக்கும் என தெரியாமல் இருந்த நாட்கள்' என எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல், சிறைப்பட்டிருந்த பிற தோழர்களுக்கு சோர்வு வந்துவிடாத வகையில், ஒவ்வொரு நாளையும் உற்சாகப்படுத்திக்கொண்டவர்.

நாங்கள் இருவரும் இறுதியாய் பேசியதும் அதே சிறை நாட்கள் குறித்துதான். சிவா திலீபனின் அரசியல், செயற்களம் குறித்து மேலதிகம் பேச நிறைய உண்டு... சாதியொழிப்பு, பெண்கள், பார்ப்பனியம், முதலாளியம், தேசிய இனம் என பலவற்றைக் குறித்த அவரது புரிதல்களும், நடைமுறையும் வியப்பிற்குரியவை... முற்போக்கு அரசியலை எதார்த்தமாய் தம் வாழ்வில் நடைமுறைப்படுத்திக் காட்டினார் என்பதைக் குறித்து எழுத வேண்டும்.

அவரை புரிந்துகொள்ளாமல், அவரது வாழ்வையும், நிறைவையும் புரிந்துகொள்ள இயலாது. கண்களை கழட்டி வைத்துவிட்டு யானையை தடவுகிறவர்களுக்கு யானை தெரியாது... அவர்கள் தன்னை அறிந்துகொள்ளவில்லை என்பதால் யானை தன்னைக் காட்டிக்கொள்வதுமில்லை. அது யானைகளின் வழக்கமும் இல்லை. யானைகளுக்கு திசைகள் தெரியும்.. வழித்தடங்கள் அறியாமல் பயணங்களை அவை மேற்கொள்வதில்லை. தொடர்ந்து எழுதுகிறேன்.

Post a Comment

0 Comments