இரையாகும் இறையாண்மை – நூல் மதிப்புரை
நூல்: இரையாகும் இறையாண்மை | ஆசிரியர்: சு. அழகேஸ்வரன் | பதிப்பு: சீர்மைஅடிப்படையில் தமிழர்களின் அரசியல் உணர்வு என்பது நவீனப் பொருளில் உருவானது அல்ல. அது ஒரு கவர்ச்சி சார்ந்த ஒன்று. குறிப்பிட்டுக் கூறினால், பக்தி சார்ந்த ஒன்று. இறை பக்திக்குச் சற்றும் சளைக்காத தனிமனிதர்களின் கவர்ச்சி உருவாக்கும் அரசியல் பக்தி. உலகில் மிக மூத்த மொழி என்று பெருமையடித்துக்கொள்ளும் ஒரு ஆதித் தமிழினம், உலகிலேயே மிகக் கீழானதொரு கவர்ச்சிக்கு ஆட்பட்டிருப்பது கவலைக்குரிய செய்தி.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் பற்றி, அதிலும் குறிப்பாக இராணுவ உறவுகள் பற்றித் தமிழில் நேரடியாக எழுதப்படும் நூல்கள் அரிது. அந்த வகையில் இந்திய-அமெரிக்க இராணுவ உறவுகள் பற்றித் தமிழில் வெளிவரும் முன்னோடி நூல் இது. இந்நூலை வாசிக்கும் ஒருவரால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான இராணுவ உறவு என்பது தொடக்கத்தில் எவ்வாறு இருந்தது; பிறகு எவ்வாறு பரிணமித்துவந்துள்ளது; இரு நாடுகளின் இந்த இராணுவ உறவில் யார் தொடர்ந்தும் பலனடைவது; ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவின் எதிரி நாடுகள் என்பதாலேயே இந்தியாவும் அந்நாடுகளை எதிர்க்கும் நிலைக்கு அமெரிக்கா எவ்வாறு இந்தியாவைத் தள்ளுகிறது; இயல்பாகவும் வரலாற்று ரீதியாகவும் ரஷ்யாவுடனும் சீனாவுடனும் இந்தியாவுக்கு இருந்துவரும் சாதகமான நல்லுறவானது 'அமெரிக்காவின் நட்பு நாடு இந்தியா' என்ற அந்தஸ்தின் மூலமாக எப்படிச் சிக்கலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது; உலக நாடுகளுடன் இந்தியா பல ஆண்டுகளாகப் பேணிவந்த அணிசேராக் கொள்கையானது பழங்கதையாய்ப் போனதெப்படி ஆகியவற்றையெல்லாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
சு. அழகேஸ்வரன் எழுதிய 'இரையாகும் இறையாண்மை' புத்தகம், நரசிம்மராவ் காலம் முதல் மோடி ஆட்சிக்காலம் வரை அமெரிக்காவுடனான இந்திய ராணுவ உறவுகளின் வளர்ச்சியை விவரிக்கிறது. 1995-ல் தொடங்கிய ஒப்பந்தங்கள் மற்றும் 2001-ல் கையெழுத்தான போர்த்தந்திரக் கூட்டாளிகள் ஒப்பந்தம் ஆகியவை இந்தியாவின் இறையாண்மையை, குறிப்பாக பாதுகாப்புத் துறையில், எவ்வாறு அமெரிக்க நலன்களுக்கு இரையாக்குகிறது என்பதை இந்த நூல் விமர்சன ரீதியாக ஆராய்கிறது.
தமிழில் அரிய நூல்
தமிழில் எண்ணற்ற பொருளில் நூல்கள் வெளிவருகின்றன. ஆனால், இராணுவம், அரசின் வெளியுறவுத் துறை சார்ந்த உறவுகள், அரசின் நடவடிக்கைகள் குறித்த நூல்கள் மிகக் குறைவு. இல்லை என்றே சொல்லலாம். க.பழனித்துறை என்பவர் உள்ளாட்சி நிர்வாகம், மக்கள் அரசியல் குறித்துச் சில நூல்களை எழுதியுள்ளார். அவைகூட இந்திய அயலுறவுக் கொள்கைகள் குறித்தவை அல்ல. ஒரு நாட்டின் இறையாண்மையைக் காப்பதற்கு உள்நாட்டுச் சிக்கலைவிட அயலுறவுச் சிக்கலே முதன்மையானது. காரணம், இறையாண்மை என்பது எப்பொழுதும் ஒரு நாட்டின் எல்லைகளுடன் தொடர்பு கொண்டது. அவ்வகையில், இந்திய இறையாண்மையைக் காக்க இந்திய அரசின் அயலுறவுக் கொள்கையைப் புரிந்துகொள்வது அவசியம்.
குறிப்பாக, இந்திய அயலுறவுக் கொள்கை 1950-ல் இந்தியா குடியரசாக மாறிய பின் வடிவமைக்கப்பட்டது. அன்று உலகளாவிய அரசியல் என்பது இருதுருவமாக்கலில் இருந்தது. ஒருபுறம், சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கான சோசலிசத்தை ஏற்ற நாடுகள். மற்றொருபுறம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதலாளியக் கொள்கையை ஏற்ற நாடுகள். இவ்விரு முகாம்களுக்கு இடையே பெரும் பனிப்போர் ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆனால், இச்சூழலில் நேரு அவர்களின் இரண்டு முக்கியமான அயலுறவுக் கொள்கைகள் உலகிற்கே வழிகாட்டுதல்களாக அமைந்தன. ஒன்று, அணிசேரா நாடுகள் என்கிற நடுநிலைமை வகிக்கும் நாடுகள். மற்றது, உள்நாட்டில் சோசலிஸ முதலாளித்துவக் கலப்பின பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவது. அதற்காக ரஷ்யாவை அதிகம் சார்ந்த ஒன்றாக இந்திய அயலுறவுக் கொள்கை வடிவமைக்கப்பட்டது.
அக்கொள்கையைக் கைவிட்டு இந்தியாவை முழுக்க அமெரிக்கச் சார்பு நாடாக மாற்ற அன்றிலிருந்து அமெரிக்கா முயன்றுவருகிறது. அது சரியாக ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு நடைமுறைக்கு வரத் தொடங்கியது. நரசிம்மராவ் ஆட்சியில் தொடங்கி, மன்மோகன் சிங் ஆட்சியில் தாராளவாத முதலாளியப் பொருளாதாரமும் உலகமயமாக்கலும் நடைமுறைக்கு வந்தன. அதன் பின் காங்கிரஸை முற்றிலுமாக அகற்றிய பாஜக அரசாங்கம், நேரடியாகத் தனது அயலுறவுக் கொள்கையை அமெரிக்காவிற்குச் சார்பாகத் திருப்பியது. இந்த வரலாற்றைச் சரியான தரவுகளுடன் விவரிக்கிறது தோழர் சு.அழகேஸ்வரன் அவர்கள் எழுதி வெளிவந்துள்ள 'இரையாகும் இறையாண்மை' என்ற தொகுப்பு.
நூலின் நான்கு பகுதிகள்
இது நான்கு பகுதிகளைக் கொண்டது. முதல் இரண்டு பகுதிகள், இதற்கு முன்பே அவரது சொந்தத் தயாரிப்பில் தனித்தனிச் சிறு நூல்களாக வெளிவந்துள்ளன. காரணம், அந்நூலை வெளியிடப் பல பதிப்பகங்கள் மறுத்துவிட்டதால் என்கிறார் அவர். இராணுவம் குறித்து தமிழில் நூலை வெளியிட மறுத்த பதிப்பகங்கள், அதன்பின் வந்த அச்சிறு நூல்களையும் பரவலாகக் கவனத்திற்குக் கொண்டுவரவில்லை. தற்போது மாறியுள்ள சூழலைக் கவனத்தில் கொண்டு மூன்று மற்றும் நான்காவது பகுதிகளை எழுதிச் சேர்த்து, ஒரு முழுத் தொகுப்பாக வெளியிட்டுள்ள சீர்மை பதிப்பகம் பாராட்டிற்கு உரியது.
முதல் பகுதி ஒபாமா ஆட்சிக் காலத்தில் (2014-2017) அமெரிக்க-இந்தியப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள், வணிக ஒப்பந்தங்கள் எனப் பல்வேறு ஒப்பந்தங்கள் வழியாக இந்திய இறையாண்மையை ஏகாதிபத்தியத்தின் இரையாக மாற்றத் தொடங்கிய பணிகளை 14 தலைப்புகளில் விவரிக்கிறது. இரண்டாவது பகுதி ட்ரம்ப்-மோடி ஆட்சிக் காலத்தில் (2017-2021) அமெரிக்க-இந்திய அரசுகளின் உறவுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை 21 இயல்களில் விவரிக்கிறது. இதில் இந்திய-சீன உறவு எப்படி மாறியது, அதில் அமெரிக்காவின் பங்கு என்ன என்பதை ஒப்பந்தங்களின் சான்றுகளுடன் எடுத்துவைத்துள்ளார் ஆசிரியர். மோடி, ட்ரம்பின் பயணங்கள் நட்புறவு தொடங்கி இந்திய எல்லைகளில் நடந்த போர்கள், உள்நாட்டில் நிகழ்ந்த எல்லை தாண்டிய பயங்கரவாதங்களைப் பேசுகிறது இப்பகுதி.
மூன்றாவது பகுதி பைடன்-மோடி ஆட்சிக்காலத்தில் (2021-2025) நிகழ்ந்த மாற்றங்களை இந்திய இறையாண்மை அமெரிக்காவின் உணவுத் தட்டுகளில் பரிமாறப்பட்டு இரையாக்கப்பட்ட கதைகளை 22 உட்தலைப்புகளில் பேசுகிறது. இதில் உருவான பல உலகளாவிய அரசியல் சிக்கல்களையும், சீன-அமெரிக்க பனிப் போருக்கான தள உருவாக்கங்களில் இந்தியாவின் நிலைப்பாடுகள் அமெரிக்காவிற்கு மாற்றாகச் சீன-ரஷ்ய உறவை வலுப்படுத்துதல் உள்ளிட்ட ஆலோசனைகளுடன் முடிகிறது இப்பகுதி. நான்காவது பகுதி ட்ரம்பின் மீள்வருகை (2025) என்பதாக தற்கால நெருக்கடிகளுடன் அமெரிக்க-இந்திய அரசாங்க உறவைக் குறித்து ஐந்து இயல்களில் பேசப்பட்டுள்ளது. அத்தோடு ஒப்பந்தங்களின் ஆங்கிலச் சுருக்கத்தைப் புரிந்துகொள்ளக் கலைச்சொற்களின் பட்டியலும் தரப்பட்டுள்ளது.
ஆசிரியர் சு. அழகேஸ்வரன் — திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்; இந்திய வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர்பொதுவாக, ஆங்கிலத்தில்தான் இத்தகைய நூல்கள் யுத்த வகுப்பாளர்கள் அல்லது பத்திரிகையில் பணி புரியும் இராணுவ அரசியல் செய்தியாளர்களால் எழுதப்படும். மாறாக, இந்தியப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கிவரும் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் பணிபுரிந்தவரான சு.அழகேஸ்வரன் தொடர்ந்து இந்திய வெளியுறவுக் கொள்கையைக் கவனித்து இந்திய இறையாண்மை என்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை, நெருக்கடிகளை நூலாக்கித் தந்துள்ளார். அரசியல் விழிப்புணர்வைத் தரக்கூடிய ஒரு நூலாக வெளிவந்துள்ளது இந்நூல். (இது அறிமுகம் என்பதால் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான மற்றும் ஆழமான திறனாய்வு பிறகு எழுதப்படும்.)
தன்னை ஆள்பவர்கள் குறித்தும், அவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் அறிந்துகொள்வதும்; மக்களிடம் அதனைப் பரவலாக எடுத்துச் செல்வதும் இன்று மிகவும் அவசியமானது. ஓர் அரசு தனது இறையாண்மையைக் காப்பது என்பது தன் மக்களின் சுதந்திரத்தை, உரிமைகளை மதித்துக் கடமையாற்றுவதே. மக்கள் ஆட்சி என்பது அடிப்படையில் ஜனநாயகத்தின் ஆட்சி. ஆனால், ஜனநாயகத்தைப் பெறவே போராடும் ஓர் அரசமைப்பே இன்று உள்ளது.
இனி எந்தவொரு அரசியல் நகர்வும் ஒரு தனித்த நாட்டின் இறையாண்மையாக அமைய முடியாது. காரணம், உலகம் இன்று ஒற்றை அமைப்பாக உலகமயமாகிவிட்டது. ஒரு அரசின் நெருக்கடி, உலகின் கடைக்கோடி மனிதனையும் பாதிக்கும். அதற்கு மிகச்சிறந்த சான்று, இன்று நிகழும் இஸ்ரேலின் அடியாளாக மாறி அதனுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் என்கிற ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது தொடுத்திருக்கும் போர். இந்தப் போர் இன்று உருவானது அல்ல. அதற்கான விதையை அமெரிக்க அயலுறவுக் கொள்கை வழியாக கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்கா போட்டு வளர்த்துவருகிறது. அமெரிக்காவில் அதிபர்கள் மாறலாம், ஆனால் அதன் வெளியுறவுக் கொள்கை என்றுமே மாறியதில்லை. அதைத் தமிழில் புரிந்துகொள்ள இந்நூல் பேருதவியாக இருக்கும்.
பல நூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. ஆனால், ஒரு தெளிவான அரசியல் பார்வையுடன் எழுதப்பட்டுள்ள இந்நூல், அதனைச் சரியான வாசகர்களிடம் சேர்ப்பதாக எளிமையான மொழியில் அமைந்துள்ளது. இந்திய இறையாண்மையைப் புரிந்துகொள்ள அரசியல் ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
மோடி ஆட்சிக்காலத்தில் இந்திய-அமெரிக்க இராணுவ உறவுகள் (2014-2025)
✍️ ஆசிரியர்: சு. அழகேஸ்வரன்
📄 பக்கங்கள்: 318
💰 விலை: ரூ.400
🏢 பதிப்பு: சீர்மை (+91 8072 123 326)
🛒 நூலை இங்கே வாங்கலாம் →

0 Comments