தமிழக சட்டமன்றத் தேர்தல்; பேயின் கரங்களும் குட்டிச்சாத்தான்களும்..
ஈழத்தமிழர்களின் மீது அளவற்ற கரிசனம் கொண்டவர்களில் விஜயகாந்த் மிக முக்கியமானவர், தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை மானசீகமான தலைவராக எண்ணியவர். இன, நில அடிப்படையில் தெலுங்கு தேசத்தவர் என்ற முனகலான குற்றச்சாட்டு அவர் மீது தமிழ் தேசியர்களால் இன்றும் வைக்கப்பட்டாலும், தமிழ், தமிழர் என்கிற கோட்பாட்டு ரீதியிலான அளவற்ற நேசத்தை அவர் தமிழ் நிலத்திற்கும், மக்களுக்கும் வழங்கியவர். எளிய மக்களின் மீது அளவற்ற அன்பு கொண்டவர்.
மனதில் பட்டதைப் பேசுவதும், செய்வதும் அவருடைய பலமாகவும், பலவீனமாகவும் இருந்தது என்பதை மறுக்க முடியாது. அரசியல் சாணக்கியத்தனம் என்று அழைக்கப்படும் நுட்பமான வாக்கு வங்கி அதிகார அரசியலில் அவருக்கு ஒரு சிந்தனைத் தொகுப்பு ஆலோசனை மையம் இருந்திருந்தால் அவர் உறுதியாக இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று சக்தியாக உருப்பெற்றிருப்பார். இறுதிக் காலத்தில் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் அவரது அரசியல் பாதையை சிலர் குழப்பினார்கள், அதற்கு அம்மையார் பிரேமலதா அவர்களும், மைத்துனர் சுதீஷும் பின்னணியில் இருந்தார்கள்.
ஒருவேளை அந்தத் தேர்தலில் அவர் இருபெரும் திராவிடக் கட்சிகளில் ஒன்றோடு இணைந்துகொண்டிருந்தால் தேமுதிக இன்று கரைந்து 2 விழுக்காடு வாக்கு விகிதத்துக்கு வந்திருக்காது. பொதுச் சமூகத்தின் மனநிலையில் தேமுதிக ஒரு "பிரோக்கிங்" அரசியல் கட்சி என்கிற அவமானத்தையும் அடைந்திருக்காது.
தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் — சென்னையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர் — டிசம்பர் 28, 2023. (படம்: PTI)
சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும். நடிகரும், தேமுதிக நிறுவனருமான திரு.விஜயகாந்த், தனது நடிப்புலக வாழ்வின் உச்சத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களோடு மிக நெருக்கமாக இருந்தவர். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது உளப்பூர்வமாக அதன் வளர்ச்சிக்கும், அதில் உறுப்பினர்களாக இருந்த எளிய மனிதர்களுக்கும் தனது அதிகபட்ச அதிகாரத்தால், செல்வாக்காலும் என்ன செய்ய முடியுமோ அதை செய்து முடித்தார்.
தேமுதிக — திமுக கூட்டணி: அரசியல் திருப்பம்
தேமுதிக கடந்த பிப்ரவரி 19 அன்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் (SPA) இணைந்தது. 2005-இல் கேப்டன் விஜயகாந்தால் தொடங்கப்பட்ட கட்சியின் வரலாற்றில் முதல் முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்தது. பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக — பொதுச் செயலாளர்) அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை சந்தித்து இந்தக் கூட்டணியை அறிவித்தார். இது விஜயகாந்தின் நீண்டகால விருப்பத்தை நிறைவேற்றியது என்று அப்போது அவர் கூறினார் (2016-இல் கருணாநிதி "பழம் நழுவிப் பாலில் விழப் போகிறது" என்று கூறியது போல).
பிரேமலதா விஜயகாந்த் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேமுதிக — திமுக கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் — பெப்ரவரி 19, 2026. (படம்: PTI)
இந்தக் கூட்டணி சித்தாந்த ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் நியாயமானதா என்றால் "இல்லை". கடந்த ஆறு மாதங்களாகவே இங்குமங்குமாகப் போக்குக் காட்டிய பிரேமலதா தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பேரம் படியாத சூழலில் தான் திமுகவை நாடினார். அதிமுக ஒருவேளை அவருக்கு வழங்குவதாக சொல்லப்பட்ட மாநிலங்களவை இருக்கையை வழங்கியிருந்தால் இந்நேரம் அவர் திமுக அரசு தான் உலகிலேயே மோசமான அரசு என்று மேடைகளில் பேசிக்கொண்டிருப்பார். பிரேமலதாவுக்கோ, சுதீஷுக்கோ கொள்கை, கோட்பாடு, மக்கள் நலம், மாநில மேம்பாடு போன்ற நேர்மறையான சிந்தனைகளைத் தாண்டி சுயநலமும், பொருளாதார நலன்களும் முக்கியமானது.
தேமுதிக வாக்கு வங்கி — கணிதம் என்ன?
விஜயகாந்த் காலத்தில் தேமுதிக உச்சத்தில் 7–10% வாக்கு வங்கியை வைத்திருந்தது (2006-இல் 8.38% — 1 இடம்; 2011-இல் 7.88% — 28 இடங்கள் அதிமுக கூட்டணியில்). விஜயகாந்த் 2023-இல் காலமான பிறகு, தற்போதும் 5% முதல் 7% வரை வாக்கு வங்கி இருப்பதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இது கரைந்து 3% முதல் 5% வரை குறைந்திருக்கிறது என்பதுதான் நடைமுறையில் கள நிலவரம். இந்த வாக்குகள் உறுதியாக திமுக கூட்டணிக்கு மாற்றப்படும். இந்தக் கூடுதல் வாக்குகள் வழியாக திமுக கூட்டணி 43%–47% வரை வாக்கு விகிதம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிக வலுவான பகுதிகள் — அதாவது இரட்டை இலக்கம் அல்லது முடிவுகளைத் தீர்மானிக்கும் வாக்கு விகிதம் — மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகள் (தென் மாவட்டங்கள்); விருத்தாசலம் (கடலூர்); மேலும் மத்திய தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்னும் விஜயகாந்த் மீதான அளவற்ற நேசம் கொண்ட ரசிகர் வாக்கு வாங்கியிருக்கிறது.
2021 சட்டமன்றத் தேர்தலில் 66 தொகுதிகள் 5%க்கும் குறைவான வித்தியாசத்தில் முடிவானவை — இதில் 41 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஆகவே தென் மாவட்டங்களில் அல்லது குறைந்த அளவு வாக்கு விகித வேறுபாடு கொண்ட தொகுதிகளில் 3%–5% தேமுதிகவின் வாக்கு மாற்றம் தோல்வியை வெற்றியாக மாற்றும். திமுக கூட்டணி 200+ இடங்களில் வெல்லும் என்று ஸ்டாலின் நம்புகிறார். தேமுதிக வாக்கு வங்கியில் பிரிவைத் தடுத்து திமுகவின் தென் பகுதி பலவீனங்களை வலுப்படுத்தும். அதிமுக, பாமக மற்றும் தவெக கட்சிகளின் சிறிய அளவிலான முன்னேற்றத்தை தேமுதிகவின் வாக்கு வாங்கிச் சரி செய்யும் என்கிற காரணமே ஸ்டாலின் அவர்கள் தேமுதிகவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தேமுதிக 6–8 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட வாய்ப்பில்லை. தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் வழங்குவதன் மூலம் திமுக தனது முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்க நினைக்கிறது. மதுரை-விருதுநகர்-தூத்துக்குடி பெல்ட்டில் "கேப்டன்" என்கிற பிராண்ட் விசுவாசம் + கூட்டணி அலை காரணமாக பெரும்பாலான தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளது.
தென் மாவட்டங்களில் தேமுதிக வலுவாக இருக்கும் பகுதிகளில் 2021 சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகள் ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் முடிந்தன. தேமுதிக வாக்காளர்கள் குறிப்பாக இளைஞர்கள், கிராமப்புற மக்கள் விஜயகாந்தின் நலத்திட்டங்கள் மீது இன்னும் விசுவாசம் கொண்டவர்கள். இந்த விசுவாசம் உறுதியாக தேமுதிக போட்டியிடாத இடங்களில் திமுக வேட்பாளர்களுக்கு மாற்றப்படும். முக்குலத்தோர் வாக்கு வாங்கி ஆளுமை செலுத்தும் பகுதிகளில் சாதி வாக்கு விகிதத்தை எதிர்க்க உதவும், வட மாவட்டங்களில் பாமகவின் சாதிச் செல்வாக்கை எதிர்கொள்ள உதவும். இதன் விளைவாக திமுக 10–15 தென் தொகுதிகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இதுவே திமுக தேமுதிக கூட்டணிக்கு முன்னுரிமை அளித்ததன் காரணம் — அதாவது "சிறு வித்தியாசங்கள் கொண்ட இடைவெளியை பெரிய வெற்றியாக மாற்றுவது".
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் — அண்ணா அறிவாலயம், சென்னை — "200+ தொகுதிகளில் வெற்றி நிச்சயம்" என இருவரும் தெரிவித்தனர் — பெப்ரவரி 19, 2026. (படம்: PTI / India Today)
இந்தக் கீழ்மையான அரசியல் நகர்வை தொலைவில் நின்று கவனித்துக்கொண்டிருக்கும் திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் இந்தக் கீழ்மையை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அல்லது சமூக நீதி, அனைவருக்குமான சம உரிமை என்கிற பொதுவுடைமை தத்துவத்தை நோக்கி நகர வேண்டுமா? என்கிற கேள்வியின் முன்னால் தேமுதிகவும், திமுகவும் தலைகுனிந்து தான் நிற்க வேண்டும்.
இந்த விஷயத்தில் தேமுதிகவை தனிமைப்படுத்தி ஸ்டாலின் அவர்கள் முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும், அப்போது என்னைப் போன்ற சிந்தனைத் தொகுப்பை மையமாகக்கொண்டு செயல்படுகிற மனிதர்கள் திராவிட மாடல் — 2 அரசைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கலாம். ஆனால், பாரதீய ஜனதா என்கிற கொடும் பேயின் கரங்களில் இருந்து தமிழகத்தைப் பாதுகாக்க தேமுதிகவைப் போன்ற குட்டிச்சாத்தான்களை நாம் ஏற்றுக்கொள்ளலாம். வேறு வழியில்லை...
0 Comments