போராடாமல் தீர்வு பெற முடியாது
நெடுங்கேணியில் எழும் போராட்டக் குரல்
வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவு கிழக்கு பிரதேசங்களை உள்ளடக்கி, அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நெடுங்கேணியில் நாளை பாரிய போராட்டம் ஒன்று நடத்தப்படும் என தமிழ்க்கட்சிகளும் பொது அமைப்புகளும் அறிவித்திருக்கின்றன.
திட்டத்தின் பின்னணியும் நிதி ஒதுக்கீடும்
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 4,170 மில்லியன் ரூபா செலவில் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது இந்த திட்டம் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிக செலவில்- 23,456 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு இன்னமும் மீளாத நிலையில்-
அண்மைய பேரிடரினால் 4 பில்லியன் டொலருக்கும் மேல் இழப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில்-
அதனை ஈடு செய்வதற்கான நிதி வாய்ப்புகள் இன்னமும் உறுதி செய்யப்படாதுள்ள நிலையில்-
உள்நாட்டு நிதி மூலங்களை கொண்டு, 23,456 மில்லியன் ரூபாவை செலவிட்டு கிவுல் ஓயா திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருப்பதன் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
இனப்பரம்பலை மாற்றும் சூழ்ச்சி
இந்தத் திட்டத்திற்கு பிற நாடுகள் அல்லது நிறுவனங்கள் உதவ முன்வராது என, அரசாங்கத்திற்கு தெரியும்.
ஏனென்றால் இது வடக்கின் இனப்பெரும்பலை மாற்றி அமைக்கின்ற ஒரு திட்டம்.
இதற்கு சர்வதேச நிதியுதவியை பெறுவது சாத்தியமில்லை என்பதால் தான், உள்நாட்டு நிதி மூலங்களை கொண்டு இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
வெறும் போராட்டங்கள் போதுமானதா?
இதற்கு எதிராக இப்பொழுது தமிழ்க்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்று திரண்டிருக்கின்றன.
இந்த திரட்சி போதுமானதா? இதன் மூலம் அரசாங்கத்திற்கு காட்டப்படும் எதிர்ப்பு பிரம்மாண்டமானதாக இருக்குமா? என்பதை நெடுங்கேணியில் நாளை நடைபெறவுள்ள எதிர்ப்புப் பேரணி தான் தீர்மானிக்கும்.
இந்த எதிர்ப்பு போராட்டம் மாத்திரம் கிவுல் ஓயா திட்டத்தை தடுத்து நிறுத்தி விடும் என எதிர்பார்க்க முடியாது.
இந்தத் திட்டத்திற்கு பின்னால் ஒரு பெரிய சூழ்ச்சி இருக்கிறது.
இவ்வாறான நிலையில் நெடுங்கேணியில் நடத்தப்படுகின்ற ஒரு போராட்டம் இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்தி விடும் என எதிர்பார்த்தால் அது முட்டாள்தனம்.
"அரசாங்கம் தனது நிலைப்பாட்டை- எடுத்த முடிவை மாற்றுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் இருக்கும் போக்கில் அது செயற்படுகின்றது."
தமிழ் அரசியல் கட்சிகளின் பொறுப்பு
அதற்காக தமிழ் மக்களை ஒன்று திரட்ட வேண்டும்.
தமிழ்க் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்த விடயத்தில் போதுமானளவுக்கு செயற்பட்டிருக்கின்றனவா என்பது சந்தேகம்.
தமிழ் அரசியல் பரப்பில் அண்மைக்கால நிகழ்வுகள் அனைத்தும், தமிழ் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் வெறுப்பையும் சம்பாதிக்கச் செய்திருக்கிறது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் விடயத்தில் அக்கறையற்ற போக்கை வெளிப்படுத்துகின்றதும் அரசியல் ரீதியான முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து கட்சிகள் தமது சக்தியை வீணடிப்பதும் மக்கள் மத்தியில் விரத்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தமிழ் அரசியல் கட்சிகளிடம் இருந்து தமிழ் மக்கள் விலகிச் செல்லுகின்ற சூழலையும் தோற்றுவித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
உள் முரண்பாடுகளும் பலவீனமும்
பொது எதிரியை எதிர்ப்பதற்குப் பதிலாக, தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்கின்ற போக்கு தமிழ் கட்சிகள் மத்தியில் அதிகரித்திருப்பது ஒட்டுமொத்த தமிழரின் பலத்தை சிதைத்து வருகிறது.
இதன் காரணமாக தமிழ் தேசிய பலத்தை கட்டி எழுப்புவது சாத்தியமற்றதாகிக் கொண்டிருக்கிறது.
மக்களின் போராட்டமாக மாற வேண்டும்
இவ்வாறான போராட்டங்கள் அரசியல் கட்சிகளின் போராட்டங்களாக இல்லாமல் மக்களின் போராட்டங்களாக மாற்றப்பட வேண்டும்.
கிவுல் ஓயா திட்டத்தை தமிழ்க் கட்சிகள் வீணாக எதிர்ப்பதாகவும் அதன் நன்மை தீமைகளை அறியாமல் போராட்டங்களை நடத்துவதாகவும் அரசாங்கம் கூறுகிறது.
ஆனால், இந்தத் திட்டத்திற்கு பின்னால் உள்ள ஆபத்துக்களை உணர்ந்தே, தமிழ் மக்கள் போராடுகிறார்கள் என்பது அரசாங்கத்துக்கு சொல்லப்பட வேண்டும்.
அரச இயந்திரங்களின் ஆக்கிரமிப்பு
தொல்பொருள் திணைக்களமாகட்டும், மகாவலி அதிகார சபை ஆகட்டும், வன ஜீவராசிகள் திணைக்களமாகட்டும் எல்லாமே, தமிழர்களின் இருப்பையும் உரித்தையும் அழிக்கும் வகையிலேய செயற்பட்டு வருகின்றன.
இதற்கு தற்போதைய அரசாங்கத்தின் வலுவான ஆதரவும் திட்டங்களும் இருப்பது உண்மை .
எதிர்கால ஆபத்துக்களும் தீர்வும்
இந்தத் திட்டம் தமிழர்களின் பூர்வீக நிலத்தை அபகரிப்பது மாத்திரமல்ல. அதனை துண்டாடும் நோக்கமும் கொண்டது. இதனை தடுத்து நிறுத்தாமல் போனால், எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்துக்களை தமிழர்கள் எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.
நெடுங்கேணியில் நடத்தப்படுகின்ற போராட்டத்தை சர்வதேச மயப்படுத்துவதும் கொழும்பின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் அடுத்தடுத்த கட்டங்களில் போராட்டங்களை விரிவுபடுத்துவதும் முக்கியமானது.
தீர்வு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் போராடாமல் இருக்க முடியாது.
இது கடந்த காலம் மிகத் தெளிவாக உணர்த்தி தந்துள்ள பாடம்.
0 Comments