elugai

சீனாவுக்கா? அமெரிக்காவுக்கா? - ட்ரம்பின் 'எரிசக்தி' நிபந்தனையும், திணறிக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கமும்!

இந்தியா மூலம் இலங்கைக்கு செக் வைத்த ட்ரம்ப் - கார்வண்ணன்

இந்தியா மூலம் இலங்கைக்கு செக் வைத்த ட்ரம்ப்

எழுத்தாளர்: கார்வண்ணன்

இலங்கைக் கடற்பரப்பில் சீன ஆய்வுக் கப்பல்களை அனுமதிப்பது தொடர்பாக தீர்மானம் எடுக்க முடியாமல் அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கின்ற சூழலில், இதற்கு பொருளாதார ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் சீனா அழுத்தங்களை கொடுத்து வருவதாக வெளியாகும் செய்திகளுக்கு மத்தியில், இன்னொரு அதிர்ச்சித் தகவல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் இருந்து வந்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் நடத்திய பேச்சுக்களை அடுத்து, இந்தியாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைப்பதாகவும் அறிவித்திருக்கிறார் ட்ரம்ப்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

[மோடி மற்றும் ட்ரம்ப் இடையிலான பேச்சுவார்த்தை சர்வதேச அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது]

இலங்கைக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதொரு முடிவாகும். இலங்கைக்கு ட்ரம்ப் முதலில், 44வீத வரியை அறிவித்திருந்தார். பின்னர், இலங்கை அரசாங்கம் நடத்திய பேச்சுக்களை அடுத்து, எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையில், இலங்கைப் பொருட்கள் மீதான வரி 20 வீதமாக குறைக்கப்பட்டது.

ஆனாலும், அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில், இன்னமும் பரஸ்பர வரி தொடர்பான இறுதி வர்த்தக உடன்பாடு ஏற்படவில்லை. அமெரிக்காவின் சில நிபந்தனைகளுக்கு இணங்குவதற்கு இலங்கை தயங்குவதே இதற்கு முக்கிய காரணம்.

வர்த்தக இடைவெளியும் வரியும்

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளி மிகப்பெரியது. 2025 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு, சுமார் 3 பில்லியன் டொலர் ஏற்றுமதிகள் இடம்பெற்ற அதேவேளை, அமெரிக்காவிலிருந்து சுமார் 400 தொடக்கம் 500 மில்லியன் டொலர் வரையான பொருட்களையே இலங்கை இறக்குமதி செய்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளி சுமார் 2.5 பில்லியன் முதல் 2.6 பில்லியன் டொலர்களாக உள்ளது. இந்த வர்த்தக இடைவெளியை சமப்படுத்துவதற்காகவே, இலங்கைக்கு அதிக வரியை விதிக்க நடவடிக்கை எடுத்தார் ட்ரம்ப்.

இதையடுத்து, வேறு வழியின்றி அமெரிக்காவில் இருந்து 800 மில்லியன் டொலர் பொருட்களை இறக்குமதி செய்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது அரசாங்கம். 500 மில்லியன் டொலர் மசகு எண்ணெய் மற்றும் 300 மில்லியன் டொலர் திரவ எரிவாயு கொள்வனவு செய்வதற்கு, இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது.

800 மில்லியன் டொலர் எரிசக்தி பொருட்களை இறக்குமதி செய்தால், இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பது போல, பரஸ்பர வரியை 15 அல்லது 18 சதவீதமாக குறைப்பதற்கு அமெரிக்கா இணங்கக் கூடும். இதற்கான முயற்சிகள், பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது.

இந்திய உடன்பாடும் இலங்கையின் பாதிப்பும்

இந்தச் சூழலில், இந்தியாவுடன் ட்ரம்ப் ஏற்படுத்தியுள்ள இணக்கப்பாடு, இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது இலங்கைப் பொருட்களுக்கு அமெரிக்கா 20 சதவீத வரியை அமுல்படுத்தும் சூழலில், இந்தியாவிற்கு அதனை விட 2 சதவீதம் குறைவான வரியே விதிக்கப்படவுள்ளது.

இலங்கை ஆடைத் தொழிற்றுறை

[இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் அமெரிக்க சந்தை மிக முக்கியமான பங்களிப்பை வகிக்கிறது]

இந்தியப் பொருட்கள் அதிகளவில் அமெரிக்க சந்தைக்கு செல்வதற்கான வாய்ப்பை இது ஏற்படுத்தும். இதனால், இலங்கையின் ஆடை தயாரிப்பு துறையும் இறப்பர் தொழில்துறையும், தேயிலைத் தொழில் துறையும் கணிசமான பாதிப்புகளை சந்திக்கும். குறிப்பாக ஆடை தயாரிப்புத்துறைக்கு கடுமையான போட்டியும் இழப்புக்களும் ஏற்படும் ஆபத்து உள்ளது.

ஆடைகளை குறைந்த விலையில் அமெரிக்க சந்தைக்கு அனுப்பக் கூடிய வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கப் போகிறது. அதுமாத்திரமன்றி, ஒரு கட்டத்தில் இலங்கையை விட இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டிருந்த போது இந்திய முதலீட்டாளர்கள் பலர் இலங்கையில் முதலீடு செய்வதற்கு திட்டமிட்டனர். இப்பொழுது அவர்கள் தமது திட்டத்தை கைவிட்டு விடுவார்கள்.

வேலையிழப்பு மற்றும் பொருளாதாரக் கணிப்புகள்

  • வேலையிழப்பு: சுமார் 16,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்தை எதிர்கொள்வார்கள்.
  • வருமான இழப்பு: அமெரிக்காவினால் 20 வீத வரி அறவிடப்படும் சூழலில் 634 மில்லியன் டொலர் வரை இழப்பு ஏற்படக் கூடும்.
  • ஆடைத்துறை: இத்துறைக்கு மாத்திரம் 221 மில்லியன் முதல் 290 மில்லியன் டொலர் வரை வருமான இழப்பு ஏற்படலாம்.
  • இறப்பர் ஏற்றுமதி: அமெரிக்காவின் வரிக் கொள்கையால் 42 முதல் 63வீதம் வரை வீழ்ச்சி ஏற்படும் வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், இலங்கை விரைவாக அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக உடன்பாட்டுக்கு செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இலங்கைக்கான வரிக்குறைப்பை அமெரிக்கா அறிவித்து பல மாதங்களாகியும், இறுதி இணக்கப்பாட்டை எட்டாமல் இருப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இப்போது, அதற்கான காரணத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

எதிர்காலத் திட்டமும் சவால்களும்

இந்தியாவுடன் எட்டப்படக் கூடிய குறைந்தபட்ச வரி உடன்பாட்டின் ஊடாக, இலங்கையை தன் வழிக்குக் கொண்டுவர முடியும் என ட்ரம்ப் நம்பியிருந்திருக்கிறார். அவர் எதிர்பார்த்த சூழல் இப்போது உருவாகியிருக்கிறது. ஏற்கனவே இணங்கியபடி அமெரிக்காவுடன் எரிசக்தி உடன்பாடு ஒன்றுக்குள் நுழைவது தான், இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கின்ற ஒரே வழியாகும்.

வரியை 15வீதமாக குறைத்தால், இந்தியாவுக்கு நிகராக அல்லது அதைவிடக் குறைந்த விலையில் இலங்கையால் ஆடைகளை விற்க முடியும். இது நீண்ட கால அடிப்படையில் சந்தையைத் தக்கவைக்க உதவும். எனவே 20வீத வரியை 15வீதமாக குறைக்க முடிந்தால், அது இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கு சுமார் 150 தொடக்கம் 200 மில்லியன் டொலர் வரை கூடுதல் வருமானத்தை பெற்றுத் தரும்.

அதேவேளை, எரிசக்தி உடன்பாட்டிற்கு இணங்கினால், அமெரிக்காவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை கொண்டு வருவதற்காக, போக்குவரத்துக்கு அதிக செலவு ஏற்படும். இது உள்ளூரில் எரிபொருள் மற்றும் மின்சார விலையை அதிகரிக்கச் செய்யும் ஆபத்தும் உள்ளது.

சீனா, அமெரிக்கா மட்டுமன்றி இந்தியாவும் ஆடுகின்ற இந்த ஆட்டத்திற்குள் ஒட்டுமொத்த இலங்கையின் பொருளாதாரம் பணயம் வைக்கப்படுகிறது. இந்த ஆட்டம், தனியே பொருளாதார நோக்கங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அதற்கு அப்பால் பாதுகாப்பு மற்றும் மூலோபாய நோக்கங்களும் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.

Post a Comment

0 Comments