elugai

அதிகார வர்க்கத்துடன் மோதும் அரசாங்கம்

அரசியல் ஆய்வு: அதிகரித்து வரும் ஆட்சியாளர் – அதிகார மட்ட விரிசல்

அதிகரிக்கும் ஆட்சியாளர் – அதிகார மட்ட விரிசல்

கட்டுரையாளர்: சத்ரியன்

ஆட்சியைப் பிடிக்கும் எந்த அரசாங்கமும், அதனைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், அதிகார மட்டத்துடன் நெருக்கமான உறவுகளைப் பேணிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களால், ஒரு ஆட்சியை உருவாக்கவும் முடியும், ஒரு ஆட்சியைக் கவிழ்க்கவும் முடியும். அதிகாரபூர்வ அரசாங்கச் செயற்பாடுகளில், ஜனாதிபதியோ அமைச்சர்களோ கையெழுத்திடுவதில்லை. உயர் அதிகாரிகளே கையெழுத்திட்டுத் தீர்மானங்களை - உடன்பாடுகளை உறுதி செய்து கொள்வார்கள்.

எனவே, எந்தவொரு அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுடனான நட்பும் நெருக்கமும் முக்கியமானது. அவர்களுடன் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொண்ட அரசாங்கங்கள், ஒத்திசைந்து நடக்கத் தவறிய அரசாங்கங்கள் நீண்ட காலம் நிலைத்திருப்பதில்லை. இது தெளிவான ஒரு விடயம். அதனால்தான், ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கம் தமக்குச் சாதகமான அதிகாரிகள் வட்டம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளும். அவர்களைக் கொண்டு, மற்ற அதிகார வட்டத்தைத் தன் கைக்குள் வைத்துக் கொள்ளும். இது காலம் காலமாக அரசியல் தலைமைகள் கடைப்பிடித்து வந்த உத்தி.

முன்னொருபோதும் ஆட்சிக்கு வந்திருக்காத ஜேவிபி அல்லது தேசிய மக்கள் சக்தி, இப்பொழுது முதல்முறையாக ஆட்சிக்கு வந்துள்ள சூழலில், இந்த நடைமுறைகள் விடயத்தில் அலட்சியமாக நடந்து கொள்வதாகத் தெரிகிறது. அதனால்தான், அதிகார மட்டத்துடன் தற்போதைய அரசாங்கம் முரண்டு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

அதிகாரிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எப்போதும் இருக்க வேண்டிய நெருங்கிய தொடர்பு சிறிதேனும் தளரத் தொடங்கினால், அது ஆட்சியை ஆட்டம் காணச் செய்து விடும். அதிகார வட்டத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்ற போதுதான் இடைவெளி ஏற்படும். ஆட்சியாளர்கள் தவறான வழியில் மோசடிகள், முறைகேடுகளில் ஈடுபடுகின்ற போது அதற்கு அதிகாரிகள் ஒத்துழைக்க மறுத்தால் முரண்பாடு ஏற்படும்.

அவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படுவது குறைவு. ஏனென்றால் ஆட்சியாளர்கள் எப்பொழுதுமே தங்களுக்கு வசதியான அதிகாரிகளைத் தொடக்கத்திலேயே அந்தந்த இடங்களில் அமர்த்திக் கொள்வார்கள். அதனால் ஆட்சியாளர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்வதில் அந்த அதிகாரிகள் குறுக்கே நிற்பதில்லை. விதிவிலக்காகச் சில அதிகாரிகள் அதற்குத் தடை ஏற்படுத்த முனையலாம். அவ்வாறானவர்கள் ஆட்சியாளர்களால் தூக்கி அடிக்கப்படுவார்கள், அது விரிசலை ஏற்படுத்தும்.

இன்னொரு சந்தர்ப்பம், ஆட்சியாளர்கள் விரும்புகின்ற படி அதிகாரிகள் நடக்காமல் போகின்ற போது, முரண்பாடுகளை ஏற்படுத்தும். தற்போதைய ஆட்சியாளர்கள் அவ்வாறான அணுகுமுறையைக் கையாளுகிறார்கள். அவர்கள் தொடர்பான அதிகார முறைகேடு பற்றிய குற்றச்சாட்டுகள் இப்போது வரத் தொடங்கியிருக்கின்றன. அதிகார முறைகேடு அல்லது அதிகார துஷ்பிரயோகம், அதிகாரிகள் மீதான அழுத்தங்களைக் கொடுக்கும். இது அடிப்படை நோக்கம் இல்லாமல் மேற்கொள்ளப்படுவதில்லை.

ஆட்சியாளர்கள் அத்தகைய அதிகாரத் திணிப்பை மேற்கொள்ளுகின்ற போது அதற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும். அது சரியான நோக்கங்களுக்காக இருக்கும் என்று மாத்திரம் அர்த்தம் கொள்ள முடியாது. தவறான நோக்கங்களுக்காகவும் அத்தகைய அழுத்தங்கள் திணிக்கப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளன. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு அரச நிறுவனங்களின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டார்கள். தங்களுக்கு வசதியானவர்கள், தங்களுடன் இணைந்து செயற்படக் கூடியவர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆனாலும் பல அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் செயலாளர்கள், தலைவர்கள் பதவி விலகுகின்ற நிலை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் விருப்பப்படி அதனைச் செய்யவில்லை. அவர்கள் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் அல்லது ஆட்சியாளர்களுடன் இணைந்து செயல்பட முடியாமல் பதவி விலகிச் செல்லும் சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள். குறிப்பாக, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் அமைச்சுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிறுவனங்களில் இந்த நிலை காணப்பட்டது. அவருடன் இணைந்து செயல்பட முடியாமல் பல அதிகாரிகள் அல்லது தலைவர்கள் விலகிக் கொண்டனர்.

அதேபோல, இப்பொழுது விமான நிலையங்கள், விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம நீக்கப்பட்டிருக்கிறார். அவர் பதவி விலகியதாக முன்னர் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் பதவி நீக்கப்பட்டார் என்பதை, அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

பௌத்த பிக்கு ஒருவருக்கு விமான நிலையத்துக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்க மறுத்த சூழலில், அமைச்சரிடம் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதால் எயார் சீப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம பதவி விலகினார் எனத் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்றும், அந்த அனுமதி வழங்கப்பட்ட பின்னர், அமைச்சின் நிர்வாக ஒழுங்குகளுக்கு வசதியாக, அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார் என்றும் அரசாங்கம் கூறியிருக்கிறது.

எயார் சீப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம முன்னைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டவர், ராஜபக்ஷவினருக்கு நெருக்கமாக இருந்தவர் என்ற காரணங்களால் அகற்றப்பட்டிருந்தாலும் - அவர் தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாத நிலையில் தான் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். குறித்த நிறுவனம் முன்னர் ராஜபக்ஷவினருக்கு நெருக்கமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறியின் கட்டுப்பாட்டில் நீண்டகாலம் இருந்தது. பின்னர் ஹர்ஷா அபேவிக்ரமவுக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டது.

தற்பொழுது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நெருக்கமான ஒருவருக்கு அந்தப் பதவி கொடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. சிவில் விமானப் போக்குவரத்துடன் தொடர்புடைய அந்தப் பதவி நீண்ட காலமாக இராணுவப் பின்னணி கொண்டவர்களால் கையாளப்பட்டு வந்தது. தற்போதைய அரசாங்கம் தனது ஆட்சியில் இராணுவப் பின்னணி கொண்டவர்களுக்கு முக்கியத்துவத்தை அதிகரித்து வருகின்ற சூழலில், யாருக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட உள்ளது என்பது இன்னமும் தெரியவில்லை.

எவ்வாறாயினும், இந்த மாற்றம் அரசாங்கத்துக்கும் அதிகார மட்டத்தினருக்கும் இடையில் நிலவுகின்ற இடைவெளியை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. தற்போதைய அரசாங்கம் அண்மைக்காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ள சூழலில், அதிகார மட்டத்தினர் அரசாங்கத்திடம் இருந்து விலகத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் அரசாங்கம் கைகாட்டுகின்ற அனைத்தையும் செய்யக் கூடிய நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. இது அரசாங்கத்தின் திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குச் சிக்கலை ஏற்படுத்தும்.

அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்ற பிரஜா சக்தி திட்டத்திற்கு எதிராக அண்மையில் பருத்தித்துறை பிரதேச சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாகச் சபையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உரையாற்றிய போது, அரசாங்க ஊழியர்களின் மீது அரசாங்கத்திற்கு நம்பிக்கை இல்லை என்றும், அதனால்தான் பிரஜா சக்தி திட்டத்தை உருவாக்கி அதற்கான குழுக்களை நியமித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இது ஒரு பிரதேச சபை உறுப்பினரின் வாக்குமூலம். ஆனால் அவருக்கு இது மேல் மட்டத்தில் இருந்து கூறப்பட்ட கருத்தாகவே தெரிகிறது. அதனைத் தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அரசாங்கம் அரச அதிகாரிகளை நம்பவில்லை என்பது சாதாரண விடயம் அல்ல. அரசாங்கம் அதிகாரிகளை நம்பவில்லை என்பதால் தான், அதற்குச் சமாந்தரமான ஒரு கட்டமைப்பைக் கொண்டு வர முனைகிறது.

இது அரசு அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே தோன்றியுள்ள விரிசலை வெளிப்படுத்துகிறது. இதற்கு மேல், அரசு அதிகாரிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நம்பிக்கை இல்லாத ஒருவருக்கு விசுவாசமாக இருப்பதற்கு அவர்கள் விரும்புவார்களா? இந்தச் சூழல் எப்போதுமே அரசாங்கத்துக்கு ஆபத்தானது. ஏனென்றால் அரசு அதிகாரிகள் அரசாங்கத்திற்குச் சாதகமானவர்களாக இருந்தால் மட்டுமே, அரசாங்கம் தான் நினைத்தவற்றை நடைமுறைப்படுத்த முடியும். அப்படிப் பார்த்தால் தற்போதைய அரசாங்கம் தனது இலக்கை நோக்கிச் செயற்படுவதற்கு அரச அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது கடினமானதாகவே தெரிகிறது.

Post a Comment

0 Comments