elugai

மத்திய கிழக்கில் அமெரிக்கத் தளங்களுக்கு குறி - ஈரானின் 2,000 ஏவுகணைகளும் 'திரள் தாக்குதல்' வியூகமும்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றமும் சமீபத்திய மாற்றங்களும்

அமெரிக்கா - ஈரான் மோதல் 2026 : மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றமும் சமீபத்திய மாற்றங்களும்

கட்டுரையாளர்: லியோ நிரோஷ தர்ஷன் (வீரகேசரி)

2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு மிகப்பெரிய இராணுவ மோதலின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்டகாலப் பகை, தற்போது ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் அணுசக்தி முன்னெடுப்புகள் மற்றும் பிராந்தியத்தில் அதன் செல்வாக்கு ஆகியவற்றைப் தடுக்க அமெரிக்கா தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஈரான் தனது தற்காப்பு வியூகங்களை மாற்றி அமைத்துள்ளது.

Conflict visualization

ஈரான் மீதான இராணுவத் தாக்குதல் சாத்தியம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ள சூழலில், ஈரானின் தலைமை தனது தற்காப்பு ரீதியான நகர்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானின் வெளியுறவு அமைச்சகம் வளைகுடா நாடுகளுடன் தொடர்ச்சியான ஆலோசனைகளை நடத்தி வருகிறது. ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து, பிராந்திய அமைதியைக் காக்க வேண்டியதன் அவசியத்தை ஈரான் வலியுறுத்தியுள்ளது.

ஈரான் தலைமை, டிரம்ப் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிராந்திய சக்திகளைச் செயல்படுத்த முயல்கிறது. ஈரானின் மீதான எந்தவொரு நேரடித் தாக்குதலும் இப்பகுதியில் ஒரு 'சங்கிலித் தொடர்' போரைத் தூண்டும் என்றும், அது உலகப் பொருளாதாரத்தையே பாதிக்கும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகள் இப்போது எச்சரிக்கையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஈரான் மீதான எந்தவொரு சாத்தியமான தாக்குதலுக்கும் தங்களின் வான்வெளி மற்றும் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என இந்த நாடுகள் ஏற்கனவே தெளிவாக அறிவித்துள்ளன. இது அமெரிக்க இராணுவத்திற்கான வாய்ப்புகளைப் பெரிதும் கட்டுப்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளின் இந்த முடிவு, ஈரானுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம், அமெரிக்கா தனது விமானப் படையைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்கா அல்லது இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் அனைத்து இராணுவத் தளங்கள் மற்றும் வளங்களைக் குறிவைப்போம் என ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது. குறிப்பாக ஈராக், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், ஜோர்டான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் இலக்கு வைக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

கடந்த காலங்களில் அமெரிக்காவுடனான மோதல்களின் போது ஈரானின் எதிர்வினை பெரும்பாலும் 'அடையாள ரீதியானதாக' (Symbolic) மட்டுமே இருந்தது. உதாரணமாக, 2020 இல் காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக ஈராக்கின் ஐன் அல்-அசாத் தளத்தின் மீது தாக்குதல் நடத்திய போது ஈரான் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், 2026 ஆண்டின் தற்போதைய சூழல் மிகவும் வித்தியாசமானது. இப்போது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலையும் தனது ஆட்சியின் இருப்பிற்கே ஏற்பட்ட அச்சுறுத்தலாக ஈரான் கருதுகிறது.

War and Law

ஜனாதிபதி டிரம்ப், ஈரானில் "புதிய தலைமைத்துவத்தை" கண்டறிய வேண்டிய நேரம் இது எனப் பலமுறை தெரிவித்துள்ளார். ஈரானுக்குள் போராட்டங்களைத் தூண்டி, தற்போதைய இஸ்லாமிய குடியரசு ஆட்சியைச் சிதைப்பதற்கான இராணுவ மற்றும் பொருளாதார வழிகளை அமெரிக்கா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இதற்குப் பதிலடியாக, தங்கள் நாட்டின் மீதான எந்தவொரு சிறிய இராணுவத் தாக்குதலையும் ஒரு 'முழுமையான போர் நடவடிக்கையாக' (Act of War) கருதுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மீது அமெரிக்கா நடத்தத் திட்டமிட்டுள்ள 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' (Surgical Strike) எனப்படும் துல்லியத் தாக்குதல்களைத் தடுப்பதே ஈரானின் இப்பொழுதைய முக்கிய நோக்கமாகும். நாடு கடந்த ஈரான் எதிர்ப்புத் தரப்புத் தலைவர் ரேஸா பஹ்லவி போன்றவர்கள் இத்தகைய தாக்குதல்களுக்கு ஆதரவு தெரிவிப்பது ஈரானின் அரசாங்கத்தைப் பதற்றமடையச் செய்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ அண்மையில் தெரிவித்த தகவல் படி, மத்திய கிழக்கின் 8 அல்லது 9 தளங்களில் நிறுத்தப்பட்டுள்ள சுமார் 40,000 அமெரிக்கத் துருப்புகளும் ஈரானின் ஏவுகணை எல்லைக்குள்ளேயே உள்ளனர். ஈரானிடம் சுமார் 2,000 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இவை 2025 இல் நடந்த இஸ்ரேல்-ஈரான் மோதலின் போது தனது வலிமையை நிரூபித்தன.

அமெரிக்காவின் நவீனத் தொழில்நுட்பத்திற்கு ஈடாக ஈரான் தனது 'திரள் தாக்குதல்' (Swarm Attack) வியூகத்தை முன்வைக்கிறது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவுவதன் மூலம் எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயலிழக்கச் செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ஷாஹெத்-136 ட்ரோன்களை ரஷ்யா உக்ரைன் போரில் வெற்றிகரமாகப் பயன்படுத்திய பிறகு, ஈரான் இந்த வியூகத்தில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் ஈரான் இராணுவம் தனக்கு 1,000 புதிய ஆளில்லா மூலயாகத் தாக்குதல் விமானங்கள் கிடைத்துள்ளதாக அறிவித்தது.

இதேவேளை ஈரான் பல தசாப்தங்களாகத் தனது நட்பு ஆயுதக் குழுக்களுக்கு நிதியுதவி அளித்து வளர்த்தெடுத்துள்ளது. இதில் லெபனானின் ஹெஸ்பொல்லா, யேமனின் ஹூதிகள் மற்றும் ஈராக்கிய ஆயுதக் குழுக்கள் முக்கியமானவை. கடந்த சில ஆண்டுகளில் இஸ்ரேல் இந்தக் குழுக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், இவை அனைத்தும் ஒருங்கிணைந்து அமெரிக்க இலக்குகளைத் தாக்கினால் அது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும்.

ஹெஸ்பொல்லா பொதுச் செயலாளர் ஷேக் நயிம் காசிம், அமெரிக்கா தாக்கினால் ஈரான் தரப்பில் தாங்களும் களமிறங்குவோம் என எச்சரித்துள்ளார். 2025 போர்நிறுத்த ஒப்பந்தம் இருந்தாலும், செங்கடலில் அமெரிக்கக் கப்பல்கள் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறிகளை ஹூதிகள் காட்டியுள்ளனர். அத்துடன் ஈரானின் இறுதிப் புகலிடம் என்பது ஹோர்முஸ் நீரிணையை மூடுவதுதான். உலக எண்ணெய் போக்குவரத்தில் 20% இந்தப் பாதை வழியாகவே நடக்கிறது. கடல் கண்ணிவெடிகள் மற்றும் அதிவேகப் படகுகளைப் பயன்படுத்தி இந்தப் பாதையை அடைத்தால் உலகப் பொருளாதாரம் நிலைகுலையும். இருப்பினும், இதனால் சீனாவின் வர்த்தகமும் பாதிக்கப்படும் என்பதால், இதை ஈரான் மிகக் கவனமாகவே கையாளும்.

Post a Comment

0 Comments