elugai

சரத் பொன்சேகா - 17 ஆண்டுகளுக்குப் பின்னரும் புரியாத பிரபாகரன்: போர் அரசியலின் அவிழாத முடிச்சுகள்!

சரத் பொன்சேகாவின் புஸ்வாணம்

சரத் பொன்சேகாவின் புஸ்வாணம்

ஆய்வு — கண்ணன்

போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், அப்போது இடம்பெற்ற சம்பவங்களை வைத்து, பரபரப்பை ஏற்படுத்த முயன்ற முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா — முன்னாள் இராணுவ தளபதி

காணொளி வெளியீடு

அவர் கடந்த புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகச் சந்திப்பு ஒன்றில், காணொளி ஒன்றை வெளியிட்டு இந்த பரபரப்பை ஏற்படுத்த முயற்சித்தார். அந்த காணொளி 2009 ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி மாலை முன்னரங்க போர் முனையில், ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் இருந்த இடத்திலேயே, பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதனை ஒரு இரகசியமான காணொளி என்று கூற முடியாது, ஏனென்றால் அது அப்போது போர்முனையில் செயற்பட்ட அரசாங்க தொலைக்காட்சிகளின் அதிகாரபூர்வ படப்பிடிப்பாளர்களில் ஒருவரால் எடுக்கப்பட்டது. இறுதிப் போரின் போது, அரச தொலைக்காட்சிகளின் ஊடகவியலாளர்கள் சிலர் களமுனைப் படப்பிடிப்புகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.

2009 இறுதிப் போர்
2009 இறுதிப் போர் — இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டம்

சரணடைவு பேச்சுகள்

அந்த காணொளியை எடுத்த ஊடகவியலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பயந்து, வெளிநாட்டில் தஞ்சமடைந்திருக்கிறார் என்றும் அவர் கூறியிருக்கிறார். சரத் பொன்சேகா வெளியிட்ட அந்த காணொளியில் இடம்பெற்றிருக்கின்ற விடயங்களை பார்த்தால், மே 17ஆம் திகதி காலையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி ஆகியோருடன், அப்போதைய அரசாங்கம் பேச்சு நடத்தியிருக்கிறது. விடுதலை புலிகளின் தலைவர்களை சரணடைய வைப்பதற்கான பேச்சு அது.

அவர்களை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு அரசாங்க தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் மூன்றாவது தரப்பிடம் சரணடையவே விரும்பினர். ராஜபக்ஷவினர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை, அதனால் அந்த முயற்சி பயனற்று போனது.

பழிவாங்கும் முயற்சி

இதனை வைத்துக் கொண்டே பரபரப்பைக் கிளப்ப முயன்றிருந்தார் சரத் பொன்சேகா. ஆனால், இது ஒன்றும் புதிய விடயம் அல்ல, ஏற்கனவே வெளியான தகவல்கள் தான். சரத் பொன்சேகாவின் கைக்கு கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்திருக்கின்ற, இந்த காணொளியை வைத்துக்கொண்டு, அவர் ராஜபக்ஷவினர் மீது குற்றச்சாட்டை சுமத்த முயன்றார்.

போரின் முடிவில் கிட்டத்தட்ட 400 சதுர மீட்டர் பகுதிக்குள், முடக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை காப்பாற்றும் வகையில், அவர்களை சரணடைய வைப்பதற்கு ராஜபக்ஷவினர் முயற்சித்தனர் என்பதே அவரது குற்றச்சாட்டு.
கோட்டாபய ராஜபக்ஷ
கோட்டாபய ராஜபக்ஷ — 2009இல் பாதுகாப்புச் செயலாளர்

தளபதியின் தனிமை

இராணுவத்தினர் அதனை விரும்பவில்லை என்றும் அவர்கள் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கவே விரும்பினார்கள் என்றும், அவர் கூறியிருக்கிறார். இந்த விடயத்தில் இராணுவத்தினருக்கும் ராஜபக்ஷவினருக்கும் இடையே கருத்து முரண்பாடு இருந்ததாக எந்தத் தகவலும் இல்லை. ஆனால் சரத் பொன்சேகா இப்போது விடுதலைப் புலிகளை காப்பாற்றுவதற்கு, ராஜபக்ஷவினர் முற்பட்டார்கள் என்ற கோணத்தில், அவர்களை பழிவாங்குவதற்கு முயற்சி செய்கிறார்.

இறுதிக் கட்டப் போருக்கு சரத் பொன்சேகா தலைமை தாங்கினார் என்று கூறப்பட்டாலும், அவருக்கும் மேலாக, ஒரு கை இயங்கிக் கொண்டிருந்தது என்பது மறுப்பதற்கு இல்லை. சரத் பொன்சேகா சீனாவில் இருந்த போது, 2009 மே 17ஆம் திகதி காலையில், விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க நடத்தப்பட்ட பேச்சுக்கள் பற்றி அவருக்கு அறிவிக்கப்படவில்லை.

கோட்டாபயவின் நேரடி கட்டுப்பாடு

அதுபோல, அவருக்கு தெரியாமலேயே பல விடயங்கள் போர்முனையிலும் அரசியல் அரங்கிலும் இடம்பெற்றன. அது பற்றி அவரே பின்னர் பலமுறை கூறியிருக்கிறார். போர்முனையில் இருந்த ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஜெனரல் கமல் குணரட்ண ஆகியோருடன், பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ச்சியான நேரடி தொடர்பில் இருந்து வந்தார். இதனை மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண நந்திக்கடலுக்கான பாதை நூலில் கூட குறிப்பிட்டிருக்கிறார்.

சரத் பொன்சேகாவுக்கு தெரியாமல் போர்முனையில் பல விடயங்கள் அரங்கேறின என்பது உண்மையே. அவருக்குத் தெரியாமலேயே பல திட்டங்கள் தீட்டப்பட்டு செயற்படுத்தப்பட்டன. சரத் பொன்சேகாவை பொம்மையாக வைத்துக் கொண்டு, பல காரியங்கள் நடந்தது இப்போதுதான் அவருக்கு தெரிய வந்திருக்கிறது.

சர்வதேச முயற்சிகள்

இறுதி கட்டப் போரில் இன்னமும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இருக்கின்றன. போரை நிறுத்துவதற்கு பலர் முயன்று கொண்டிருந்தனர். அமெரிக்காவின் தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரித்தானியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சராக இருந்த டேவிட் மில்லிபான்ட்டும், இறுதிக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். நோர்வே தரப்பும் சரணடைவுக்கான முயற்சிகள், பேச்சுகளில் ஈடுபட்டது.

உலகில் இருந்து பல வழியில் விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் புலிகளின் தலைமை கடைசிவரை அரச படைகளிடம் சரணடைவதற்கு தயாராக இருக்கவில்லை. புலிகளின் தலைமை ஒருபோதும் அரச படைகளிடம் சரணடையாது என்பது ராஜபக்ஷவினருக்குத் தெரியும்.

அதனால் தான் அவர்கள், தங்கள் படைகளிடம் சரணடைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். இதன் ஊடாக புலிகள் அந்த கோரிக்கையை நிராகரிப்பார்கள் எதிர்பார்த்தார்கள். அதன் மூலம் சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட சரணடைவுக்கான முயற்சிகளை தோற்கடித்தார்கள்.

பிரபாகரனை குறைமதிப்பீடு செய்தல்

அடுத்த சில மணி நேரங்களில் தாங்கள் கொல்லப்பட்டு விடுவோம் என்பதை புலிகளின் தலைவர்கள் அறிந்திருந்தார்கள் என்று சரத் பொன்சேகாவே கூறியிருக்கிறார். ஆனாலும் அவர்கள் கடைசி நேரம் வரை, அரச படைகளிடம் சரணடைவதற்கு தயாராக இருக்கவில்லை என்பது இதன் ஊடாக வெளிப்பட்டுள்ளது. உயிர் போகின்ற நிலையில் கூட, உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இராணுவ தளபதியாக இருந்த போதும் அவரால் பிரபாகரனை சரியாக மதிப்பீடு செய்ய தெரியவில்லை. பிரபாகரன் சரணடைந்திருந்தால் இன்று வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதுதான் அவரது குறைமதிப்பீட்டை புலப்படுத்துகிறது.

1987இல் இதேபோன்ற குறைமதிப்பீட்டை இந்தியாவும் செய்தது. அப்போது பிரபாகரன் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால், இணைந்த வட-கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை அவரால் பெற்றிருக்க முடியும். ஆனால் அவரது இலக்கு அதுவாக இருந்ததில்லை. அதை அவரே பகிரங்கமாக கூறியிருந்தார்.

முடிவுரை

சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக கூறி, 17 ஆண்டுகளுக்கு பின்னரும் கூட பிரபாகரனைச் சரியாக மதிப்பீட தெரியாதவராகவே இருக்கிறார். அதனால் தான், இறுதி கட்டப் போரில், அவரை வைத்து போர் நடத்தப்பட்ட போதும், அவருக்குத் தெரியாமலேயே பல சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.

போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு தரப்பு முயன்றது. போரை தொடர்ந்து நடத்துவதற்கு இன்னொரு தரப்பும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தது. இவ்வாறாக சர்வதேச தரப்புகளால் நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்த ஆட்டத்தின், ஒரு காயாகத் தான் சரத் பொன்சேகா இருந்தாரே தவிர, அவர் ஒரு தீர்க்கமான நபராக இருந்திருக்கவில்லை என்பதையே இந்த காணொளி நிரூபிக்கிறது.

ஆனால் ஒன்று, விடுதலைப்புலிகளை அழிப்பதில் இராணுவம் குறியாக இருந்தது, போர்நிறுத்தத்தை அல்லது அது சார்ந்த உடன்பாடு ஒன்றை அது விரும்பவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதன் ஊடாக இறுதிப் போரில் நிகழ்ந்த மீறல்களுக்கு அரசியல் தலைமையை விட, இராணுவமே முழு பொறுப்பு என்று ஏற்றுக்கொள்ளும் நிலையை உருவாக்கியிருக்கிறார். அதனால் தான், ராஜபக்சவினரை குற்றச்சாட்டுகளில் இருந்து சரத் பொன்சேகா விடுவித்திருக்கிறார் என நன்றி தெரிவித்திருக்கிறார்.

Post a Comment

0 Comments