பிரதமர் ஹரினியும்; அவர் எதிர்கொள்ளும் சவால்களும் - ஓர் ஆழமான பார்வை!!
// பிரதமர் ஹரினி அமரசூரிய எதிர்கொள்ளும் பிரச்சினை என்பது மாற்றத்தின் குறியீடா அல்லது விமர்சனங்களின் இலக்கா? //
யதார்த்தத்தில் ஒரு பெண்ணியவாதியாக அவர் முன்வைக்கும் முற்போக்கான கருத்துக்களும், ஆணாதிக்கச் சிந்தனைகளைச் சாடும் அவரது போக்கும், மாற்றத்தை விரும்பாதவர்களுக்குப் பெரும் சவாலாகத் தெரிகிறது.
இலங்கை அரசியலில் நீண்டகாலமாக நிலவி வந்த குடும்ப அரசியல் மற்றும் பாரம்பரியக் கட்டமைப்புகளை உடைத்து, ஒரு கல்வியாளராகவும் பெண்ணியவாதியாகவும் பிரதமர் பதவியை எட்டியவர் கலாநிதி ஹரினி @Dr_HariniA அமரசூரிய. ஒரு பேராசிரியராக பல்கலைக்கழக விரிவுரை மண்டபங்களில் ஒலித்த அவரது குரல், இன்று நாட்டின் கொள்கை வகுக்கும் உயர்மட்டத்தில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
கல்வி அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் ஹரினி அமரசூரிய, இலங்கையின் கல்வித்துறையில் நவீன மாற்றங்களைக் கொண்டுவர முயலும் வேளையில், 6 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு இணையத் தொடர்பு (Link) பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாடப்பொருளோடு சம்பந்தப்படாத, தவறான வழிக்கு இட்டுச் செல்லும் அந்த இணையத்தளம் குறித்த விவகாரம், சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. இது ஒரு தற்செயலான தொழில்நுட்பத் தவறாகப் பார்க்கப்படாமல், கலாச்சாரச் சீரழிவுக்கான திட்டமிட்ட முயற்சி என எதிர்க்கட்சிகளால் சித்தரிக்கப்படுகின்றது.
// ஒரு கல்வியாளராக இருக்கும் பிரதமரின் கீழ் இவ்வாறான தவறு நடந்தது அவரது நிர்வாகத் திறமை குறித்த கேள்விகளை எழுப்பியதுடன், பழமைவாதத் தரப்பினர் அவர் மீது தாக்குதல் நடத்தப் பலமான ஒரு காரணத்தையும் வழங்கியுள்ளது. //
ஹரினி அமரசூரிய எதிர்கொள்ளும் மற்றொரு பிரதான விமர்சனம் அவரது தோற்றம் சார்ந்தது. இலங்கை அரசியலில் பெண் தலைவர்கள் என்றாலே 'கண்டிச் சேலை' அணிய வேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தை உடைத்து, மிகவும் எளிமையான குர்தா மற்றும் சாதாரண உடைகளை அவர் அணிவது ஒரு தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது தலைமுடி அலங்காரம் மற்றும் ஆளுமை குறித்துச் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் தனிப்பட்ட கேலிகள் (Body Shaming), இலங்கையின் அரசியல் களம் இன்னும் பெண்களை அவர்களது ஆடை மற்றும் தோற்றத்தை வைத்தே மதிப்பிடும் மனநிலையில் இருப்பதைக் காட்டுகிறது.
// கலாச்சாரக் காவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் பலர், அவரது அறிவார்ந்த உள்ளடக்கத்தை விடுத்து, அவரது உடையில் குறைகாண்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். //
அவரது தனிப்பட்ட வாழ்வும் விமர்சனங்களுக்குத் தப்பவில்லை. அவர் மணம் முடிக்காதவர் என்பது குறித்தும், அவரது மத நிலைப்பாடுகள் குறித்தும் தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு மேல்தட்டுப் பின்புலத்தில் இருந்து வந்தவர் என்பதால், சாதாரண மக்களின் வறுமையையோ அல்லது உணர்வுகளையோ அவரால் புரிந்துகொள்ள முடியாது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், யதார்த்தத்தில் ஒரு பெண்ணியவாதியாக அவர் முன்வைக்கும் முற்போக்கான கருத்துக்களும், ஆணாதிக்கச் சிந்தனைகளைச் சாடும் அவரது போக்கும், மாற்றத்தை விரும்பாதவர்களுக்குப் பெரும் சவாலாகத் தெரிகிறது.
சுருக்கமாச் சொன்னால், ஹரினி அமரசூரிய மீதான சர்ச்சைகள் என்பவை வெறும் நிர்வாகத் தவறுகள் சார்ந்தவை மட்டுமல்ல; அவை இலங்கையின் நீண்டகால பழமைவாதச் சமூகத்திற்கும், நவீனத்துவத்தை நோக்கி நகரத் துடிக்கும் புதிய தலைமுறைக்கும் இடையிலான கருத்தியல் மோதலாகும்.
பாடப்புத்தகக் குளறுபடிகள் போன்ற நிர்வாகப் பிழைகளைச் சரிசெய்து கொண்டு, தனிப்பட்ட விமர்சனங்களைக் கடந்து அவர் எடுக்கும் முடிவுகளே, இலங்கையின் எதிர்காலப் பெண் அரசியல்வாதிகளுக்கான புதிய பாதையைத் தீர்மானிக்கும்.
இதேவேளை ஹரினி அமரசூரியவின் அரசியல் பயணம் தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஊடாக அமைந்தாலும், அதன் முதுகெலும்பாக இருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியுடன் அவருக்கு இருக்கும் உறவு குறித்து அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் விவாதங்கள் உள்ளன.
JVP பாரம்பரியமாக ஒரு மார்க்சிச-லெனினிச மற்றும் சிங்கள தேசியவாத பின்புலத்தைக் கொண்டது. ஆனால், ஹரினி ஒரு தாராளவாத, முற்போக்குச் சிந்தனை கொண்ட "எலைட்" வர்க்கக் கல்வியாளராகப் பார்க்கப்படுகிறார். இந்த இரு வேறுபட்ட துருவங்கள் எப்படி இணைந்து பயணிக்க முடியும் என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே உள்ளது.
கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் (Cadres) ஹரினியின் தாராளவாதக் கருத்துக்கள் கட்சியின் நீண்டகாலக் கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்துவிடுமோ என அஞ்சுவதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, வெளியுறவுக் கொள்கை மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான (IMF போன்றவை) அணுகுமுறையில் ஹரினியின் மென்மையான போக்கு, JVP-இன் தீவிரப் போராட்டக் குணத்துடன் முரண்படுவதாகத் தெரிகிறது.
அமைச்சரவை நியமனங்கள் மற்றும் கொள்கை முடிவுகளின் போது, JVP-இன் மூத்த தலைவர்களுக்கும் ஹரினிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகச் சில ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் நேரடி ஆதரவு ஹரினிக்கு இருப்பதால், இந்த முரண்பாடுகள் தற்போது கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எது எப்படியிருப்பினும் அநுரகுமார தலைமையிலான NPP அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு வலுவான அரசியல் காரணங்களைத் தேடுவோர் தனிப்பட்ட விடயங்களுக்குள் ஈர்க்கப்படுவதனை அவதானிக்க முடிகிறது.
மறுபுறம் கடந்த 77 வருட கால டீல் அரசியல் முடிவுக்கு வந்துள்ளமை அனைத்து தரப்பினரையும் உறைய வைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அநுரவும், ஹரினியும், அவர்களின் NPP அரசாங்கம் தாக்குப்பிடிக்குமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
ஊடகன்.
உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய: elugai9@gmail.com




0 Comments